புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2013



சாப்பாட்டிற்கு போடுவது வாழை இலை - சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை : சிற்றுந்து இலை சர்ச்சைக்கு அரசின் அடேங்கப்பா விளக்கம்
 


சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டுள்ள சிற்றுந்துகளில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.



சிற்றுந்துகளில் இலைச் சின்னம் இருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்துள்ள பதிலில், ’’சிறிய பேருந்துக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள அமோக வரவேற்பை தி.மு.க. தலைவர் கலைஞரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  எனவே, சிற்றுந்துகளில் அ.இ.அ.தி.மு.க. கட்சியின் சின்னம் வரையப்பட்டுள்ளது என்ற ஓர் ஒத்திவைப்புத் தீர்மானத்தை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் கொடுக்க வைத்துள்ளார்.
இதே காரணத்தை வலியுறுத்தி 25ம் தேதி சட்டப் பேரவையில் தி.மு.க. உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
போக்குவரத்து இணைப்பில்லா பகுதிகளிலிருந்து அருகிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சென்னை மாநகரில் துவக்கி வைக்கப்பட்ட புதிய சிற்றுந்துகள் மக்களுக்கு நன்மை பயக்கிறதா, மக்கள் பலன் அடைகிறார்களா என்பதைப் பார்க்காமல், அந்த சிற்றுந்துகளில் வரையப்பட்டுள்ள பசுமையான சூழலையும், இலையையும், இரட்டை இலை சின்னத்தோடு இணைத்துப் பேசுவது, குற்றம்சாட்டுவது “தேவைதானா” என்பதை தி.மு.க. உறுப்பினர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தனக்கு ஒரு நியாயம், பிறருக்கு ஒரு நியாயம் என்று பேசுவதை தி.மு.க. தலைவர் கலைஞரும், தி.மு.க. உறுப்பினர்களும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அரசால் துவக்கப்பட்ட சிறிய பேருந்துகளில் இடம் பெற்றுள்ள வண்ணப் படங்கள் தமிழர்களின் வாழ்வோடு இரண்டற கலந்த பல்வேறு  இலைகளின் அடையாளம், அது கட்சி சின்னத்தை குறிப்பது அல்ல.
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை, உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை, இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை.


செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை என எங்கும் இலை, எதிலும் இலை. இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை பற்றி, ஆத்திரத்தோடு, உண்மைக்கு மாறாக திரித்துச் சொல்லும் தி.மு.க.வினருக்கு சிலவற்றை  நினைவுபடுத்த விரும்புகிறேன்.  இது காலத்தின் கட்டாயம்.
அரசு சிமெண்ட் பைகளில் உதயசூரியன் படம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு “கலைஞர் காப்பீடு திட்டம்” என்று பெயர் சூட்டிக் கொண்டவர்களுக்கு சொல்ல வேண்டியது அவசியம் ஆகும்.
சென்னை மாநகரில் மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில் இலைகளின் கலைநயத்தோடு கூடிய நான்கு, நான்கு இலைகள் ஓவியமாக இடம்பெற்று இருப்பது பசுமைக்கு வித்திடும் செடிகளின் இலைகளின் அடையாளமான ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல.
மக்கள் கண்களுக்கு குளிர்ச்சியாகவும், மனங்களுக்கு இதமாகவும் சிற்றுந்துகள் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமையின் விளக்கமாக சிற்றுந்துகளில் இலைகள் வரையப்பட்டுள்ளனவே தவிர, அதில் உள்ளவை கழகத்தின் வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” இல்லை என்பதை தி.மு.க. தலைவர் கலைஞருக்கும், தி.மு.க. உறுப்பினர்களுக்கும் தங்கள் வாயிலாக தெள்ளத் தெளிவாக, உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது ஐந்து முறை முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழகில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’’ 

ad

ad