புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 நவ., 2013

ஐநாவில் இலங்கை மீது சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும்! கூட்டமைப்பு நம்பிக்கை
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இழைத்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி அனைத்துலக நாடுகளினால் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த நம்பிக்கையை கனடா, அமெரிக்கா வரிசையில் தற்போது பிரிட்டனும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி வரும் இலங்கை அரசு, மார்ச் மாதம் ஐ.நாவில் பலத்த சவால்களை எதிர்கொள்ளப் போகின்றது என்றும் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வேண்டுமெனில், போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்றும் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்து சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், இலங்கை அரசு, தன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் ஆரம்பிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் இதில் அனைத்துலகத் தலையீடு இடம்பெறும் என்றும் பிரிட்டன் பிரதமர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் பிரதமரின் இந்தக் கருத்து தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நேற்று "சுடர் ஒளி'யிடம் தெரிவிக்கும் போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டு தீர்மானங்கள் சர்வதேச நாடுகளின் பேராதரவுடன் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களையும் இலங்கை அரசு கவனத்தில் எடுக்கவில்லை. கடந்த ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முள்ளிவாய்க்கால் வரை சென்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிலைமைகளைக் கேட்டறிந்துவிட்டு சென்றார்.
அதன் பின்னர் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
அவர் ஐ.நாவில் மார்ச் மாதம் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையிலும் சர்வதேச விசாரணையை மீண்டும் வலியுறுத்தி இலங்கை அரசுக்கு பாரிய அழுத்தங்களைக் கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில், இலங்கை அரச படைகளின் ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் யாழ்.மாவடத்துக்கு முதல் தடவையாக சென்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன், மீள்குடியேறாமல் அகதி முகாம்களில் இருக்கும் மக்களுடனும், உயிரைப் பயணம் வைத்து பணிபுரியும் ஊடகவியலாளர்களையும், தமிழருக்குத் தீர்வை எதிர்பார்த்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் நேரில் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்துவிட்டு சென்றார்.
இலங்கையிலிருந்து செல்லும் முன்னரே சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்கு எச்சரிக்கை விடுத்தும் இருந்தார். இந்நிலையில், பிரிட்டன் நாடாளுமன்றிலும் அவர், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் பிரிட்டனுக்குத் திருப்தி இல்லை என்றும், மார்ச் மாதத்துக்குள் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணையை இலங்கை அரசு நடத்தாவிட்டால், சர்வதேச விசாரணைக்கு முகம் கொடுக்கவேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையில், மார்ச் மாதத்துக்குள் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன விசாரணை எதனையும் இலங்கை அரசு மேற்கொள்ளாது. ஏனெனில், கடந்த கால செயற்பாடுகளில் இதனை அரசு நிரூபித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழருக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்கவேண்டுமெனில், போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணை நடத்தப்பட்டே ஆகவேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை என்றார்.

ad

ad