யாழ்.பல்கலைக்கழக சூழல் இராணுவத்தால் முற்றுகை! பொலிஸ் குவித்து ரோந்து பணிகள் தீவிரம்!- கடும் பதற்றத்தில் மக்கள்
மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ்.பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி பெருமளவான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு சோதனைகளுகம் ரோந்து நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.
தமிழ் மக்களின் உரிமைக்காகவும், அவர்களது விடிவுக்காகவும் உயிர்நீத்த மாவீரர்களுக்காக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினம் நாளை உலகம் எங்கும் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் தாயத்திலும் குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்திலும் விசேடமாக நிகழ்வுகள் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நடைபெறுவது வழக்கம்.
ஆனால் இதனை தடுக்கும் முகமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்கள் எவரும் விடுதிகளில் தங்கியிருக்கவும் அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று காலை முதல் யாழ். பல்கலைக்கழக வளாகத்தை சுற்றி பெருமளவான இராணுவத்தினரும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸாரால் வீதிகளிலும் சோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதோடு இராணுவத்தினர் பல்கலைக்கழக சூழலில் துவிச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சகிதம் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக சூழலில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. மக்கள் அனைவரும் மிகவும் அச்சத்துடன் மாலை 6 மணிக்கு முன்னதாவே வீடுகளுக்குள் முடங்கி விட்டனர்.
இதேவேளை தொடர்ந்தும் இரவிரவாக இராணுவத்தினர் வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.