திமுகவுடன் கூட்டணி சேர முடியாது என்றால் அதிமுகவுடன் பேசுவதற்கே தகுதி இல்லை: ஆ.ராசா
கூட்டத்தில் மாவட்ட செயலரும் முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ சபா.ராஜேந்திரன், நகர அவைத்தலைவர் நாராயணன், துணைச் செயலர் பூங்காவனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசுகையில்,
திமுக பொதுக்குழு கூட்டத்தில் மத்தியில் வரப்போகிற அரசு மதச்சார்பற்ற அரசாக, தமிழ் இனத்துக்கு விரோதம் இல்லாத அரசாக அமைய வேண்டும் என்றுதான் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோமே தவிர, திமுக சார்பில் யார் பிரதமராக வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றவில்லை.
2-ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணி அமைத்து கொள்ள முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் திமுகவுடன் கூட்டணி சேர முடியாது என்றால் அதிமுகவுடன் பேசுவதற்கே தகுதி இல்லை.
2-ஜி அலைக்கற்றை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, கடந்த நம்பவர் மாதம் 14-ஆம் தேதி விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி ராசாவிடம் ஒன்றும் இல்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான் பதவி ஏற்றபோது என்னுடைய சொத்துக்கள் எவ்வளவு, கைதானபோது எனது சொத்துக்கள் எவ்வளவு என வித்தியாசத்தை பாருங்கள். சொத்துக்கள் அதிகரித்து இருந்தால், வழக்கை நிறுத்திவிட்டு 10 ஆண்டுகள் சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.
நான் செய்தது 3 தவறுகள்தான், நிமிடத்துக்கு ரூ.1 என்று இருந்த கட்டணத்தை 30 காசுகளாக குறைத்தது, 30 கோடி பேர் பயன்படுத்தி வந்த செல்போன்களின் எண்ணிக்கையை 90 கோடியாக உயர்த்தியது, சராசரி செல்போன் கட்டணத்தை ரூ.315-ல் இருந்து ரூ.100 ஆக குறைத்தது. கட்சி தலைமை வாய்ப்பளித்தால் மீண்டும் நான் தேர்தலில் வெற்றிபெற்று, அந்த திட்டங்களை கொண்டு வருவேன் என்றார்.