புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

23 ஜன., 2014

வடக்கில் தமிழினவாத அரசை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: அமைச்சர் வீரவன்ஸ குற்றச்சாட்டு
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் தான் கொண்டு வரவுள்ள இலங்கைகக்கு எதிரான யோசனையை நிறைவேற்ற அமெரிக்கா தயாராக இருந்து வருவதாக அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கு எதிரான யோசனை கொண்டுவராமல் இருக்க, வடக்கில் இருந்து இராணுவத்தை திரும்ப பெறுமாறும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தி, வடக்கு மாகாணத்திற்கு காணி அதிகாரங்களையும் பொலிஸ் அதிகாரங்களையும் வழங்க வேண்டும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அரசாங்கத்திற்கு நிபந்தனை முன்வைத்தது.
அத்துடன் வடக்கில் ஏனைய இனமக்களை குடியேற்றுவதை நிறுத்த வேண்டும் எனவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை முற்றாக நீக்க வேண்டும் எனவும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
இவற்றை நிறைவேற்றினால் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் யோசனையை தவிர்க்க முடியும் என அமெரிக்கா நிபந்தனை விதிக்கின்றது.
அமெரிக்கா யோசனையை கொண்டு வருதற்காக நோக்கம் தெளிவாகியுள்ளது. வடக்கில் இராணுவத்தை திரும்பபெறும் சூழலை ஏற்படுத்தவும் 13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்ற பிரிவினைவாதத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லவே அமெரிக்கா இந்த யோசனையை கொண்டு வருகிறது.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மட்டுமல்ல அதற்கும் அப்பால் சென்ற பிரிவினைவாத சூழ்நிலையை நாட்டில் ஏற்படுத்துவது அமெரிக்காவின் நோக்கம்.
அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பை மாற்றியமைக்கும் சந்தர்ப்பத்தை இல்லாமல் செய்வதும் அமெரிக்காவின் நோக்கமாகும்.
இலங்கையின் வடக்கில் தான் இனச் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. தெற்கில் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரம் ஏற்பட்டது. எனினும் அப்போதிருந்ததை விட இன்று அதிகளவான தமிழர்கள் தெற்கில் வாழ்கின்றனர்.
ஆனால் வடக்கில் இருந்த சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் விரட்டினர். அவர்களை மீளக்குடியேற்ற முடியாதுள்ளது.
வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றுவதை முற்றாக தடுத்து நிறுத்த முழு மேற்குலகமும் முயற்சித்து வருகின்றன. இதனால் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திரிப்பை ஏற்றுக்கொள்ளுமாறு இந்த நாடுகள் கூறுகின்றன.
சிங்களவர்களையும் முஸ்லிம்களையும் வடக்கில் குடியேற்ற வேண்டாம் எனக் கூறும் அமெரிக்கா, புலிகளின் இனச் சுத்திகரிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கின்றது.
இந்த நிலையில், இறுதிக்கட்ட போரில் இலங்கை அரசும், படையினரும் இனப்படுகொலை செய்தனர் என்ற யோசனையை கொண்டு வந்தது நாட்டில் தமிழ் இனவாதம் அரசாளும் நிலைமையை ஏற்படுத்தவே அமெரிக்க முயற்சித்து வருகிறது என்றார்.