புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மார்., 2014


''மூன்று மாதங்களுக்கு முன்பே முதன்முதலில் கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிய பி.ஜே.பி., இன்னும் அதனை முடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது. 'ஏன் போட்டு இழுக்கிறீர்கள்? இருக்கிற கட்சியோடு பேசி முடியுங்கள். தமிழ்நாட்டில் இருந்து மூன்று எம்.பி-க்கள் ஜெயித்து வந்தால் போதும் என்றுதான் நினைக்கிறோம். 40 எம்.பி-க்கள் வந்தாக வேண்டும் என்று சொன்னால், நீங்கள் இழுப்பதில் அர்த்தம் இருக்கிறது’ என்று ராஜ்நாத் சிங் சொல்லிவிட்டார். ஆனாலும், முடிக்கப்படாமலும் முறிந்துவிடாமலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது
. '14-ம் தேதி பிரசாரம் கிளம்பப்போகிறேன்’ என்று விஜயகாந்த் அறிவித்துவிட்டார். எனவே, வெள்ளிதான் தமிழக பி.ஜே.பி. தலைமைக்கு வைக்கப்​பட்டுள்ள கெடு'' - கழுகார் வந்ததும் கடகடவென கொட்ட ஆரம்பித்துவிட்டார்!-நன்றி விகடன் 

அவரே தொடர்ந்தார்.
''தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளையும் சேர்த்து பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோது... தே.மு.தி.க-வுக்கு 11, பி.ஜே.பி., ம.தி.மு.க, பா.ம.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் தலா 9 என்று பேசப்பட்டது. ஆனால், தே.மு.தி.க-வுக்கும் தங்களுக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்று பி.ஜே.பி. தலைவர்கள் சிலர் சொன்னார்கள். 'கொங்கு’ ஈஸ்வரன், ஐ.ஜே.கே. பச்சமுத்து ஆகிய இருவருக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கினால், அவர்கள் இருவரையும் தாமரை சின்னத்தில் நிற்கச் சொல்லலாம். எனவே, அந்த இரண்டும் சேர்த்தால் பி.ஜே.பி. போட்டியிடுவதாகத்தானே அர்த்தம். தே.மு.தி.க-வுக்கு இணையாக பி.ஜே.பி-யும் 11 இடங்களில் போட்டியிடும் என்று அதற்கு சமாதானம் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், 19 தொகுதிகள் வேண்டும் என்று விஜயகாந்த் பிடிவாதமாக நின்றார். '11 தான் தர முடியும். கூடுதலாக வேண்டுமானால் ஒன்று சேர்த்து 12 தருகிறோம்’ என்று பி.ஜே.பி-யினர் சொன்னார்கள். பேச்சுவார்த்தை இரண்டு மாதங்கள் நீடித்ததற்கு இதுதான் காரணம்!''
''வரிசையாகச் சொல்லி வாரும்!''
''முதலில் 'பா.ம.க. எதற்கு?’ என்று கேட்டுவந்த விஜயகாந்த், 'பா.ம.க. இருந்தால்தான் வட தமிழ்நாட்டில் நாமும் இரண்டு மூன்று தொகுதிகளில் ஜெயிக்கலாம்’ என்று சொல்ல ஆரம்பித்தார். அதனால், மூன்று தொகுதிகளைக் குறைத்து 16 தாருங்கள் என்று கேட்டார். 'பா.ம.க. வந்தால் 12. வராவிட்டால் 14 தருகிறோம்’ என்றது பி.ஜே.பி. அதைப் பிடித்துக்கொண்ட விஜயகாந்த், 'யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்களுக்கு 14’ என்று சொல்ல ஆரம்பித்தார். அதன் பிறகு பி.ஜே.பி. தலைவர்கள் ஒரு புது ஃபார்முலா போட்டார்கள்!''
''அது என்ன?''
''தே.மு.தி.க-வுக்கு 14. பி.ஜே.பி, ம.தி.மு.க., பா.ம.க-வுக்கு தலா எட்டு என்பதுதான் அந்தக் கணக்கு. இதை ராமதாஸ் ஏற்கவில்லை. '10 தொகுதிக்கு நாங்கள் வேட்பாளர் பட்டியல் அறிவித்துவிட்டோம். அந்தப் 10 தொகுதிகளை அப்படியே தந்துவிட வேண்டும். எங்கள் சமூக ஜனநாயக கூட்டணிக்கு நான்கு தொகுதிகள் தர வேண்டும்’ என்றார். முதல்கட்ட பேச்சுவார்த்தை யிலேயே சமூக ஜனநாயக கூட்டணிக்கு நான்கு என்பதை பி.ஜே.பி. ஏற்கவில்லை. அறிவிக்கப்பட்ட 10 தொகுதிகளைத் தர இயலாது. எட்டுதான் என்றார்கள் பி.ஜே.பி-யினர். 'தமிழகத்தில் ஒன்பது, புதுவையோடு சேர்த்து 10’ என்றது பா.ம.க. 'புதுவை மாநிலத்தை நாம் பேச முடியாது. அங்கு மாநிலத் தலைவர் வேறு’ என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.'' ’
''அப்புறம்?''
''புதுவையை ரங்கசாமியிடம் கேட்டு நாங்கள் வாங்கிக்கொள்கிறோம் என்று பா.ம.க. போனது. ஆனால், அதனை ரங்கசாமி ஏற்கவில்லை என்று கடந்த முறையே சொன்னேன்!''
''ஆமாம் சொன்னீர்!''
''ரங்கசாமி பேசும்போது, 'வன்னியர் பாசம் இப்போதுதான் தெரிகிறதா? இதற்கு முன் என் ஆட்சிக்கு எதிராக என்னென்னவோ செய்தீர்களே... ஆட்சியை கவிழ்க்க முயற்சித்தீர்களே... நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தீர்களே... அப்போ​தெல்லாம் நான் வன்னியன் என்று தெரியவில்லையா?’ என்று கேட்டாராம். பதில் பேச முடியாமல் அன்புமணி திரும்பி​யிருக்கிறார். எனவே, புதுவை கனவு கடந்த 10-ம் தேதியோடு முடிந்துவிட்டது. அடுத்து இருந்தது ஒன்பது என்ற எண்ணிக்கை. அதனையும் கடந்த 12-ம் தேதியோடு எட்டு என்று கரைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.!''
''அது எப்படி?''
''பி.ஜே.பி. அலுவலகத்தில் இருந்தே ஒரு வதந்தி பரப்பப்பட்டது. 'தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய இரண்டில் ஒரே ஒரு கட்சியைத்தான் கூட்டணியில் வைத்துக்கொள்ள முடியும். இரண்டில் பா.ம.க-வைவிட தே.மு.தி.க. பெட்டர் என்று நினைக்கிறோம். பா.ம.க-வை வைத்துக் கொண்டால் அவர்களுக்கு செல்வாக்கான அனைத்துத் தொகுதிகளையும் அவர்களே எடுத்துக்கொள்வார்கள். உளுந்தூர்​பேட்டைக்கு அந்தப் பக்கம் அவர்களால் பயன் இல்லை. எனவே, தே.மு.தி.க-வை வைத்துக்கொண்டால் தமிழகம் முழுவதும் பரவலான வாக்குகளைப் பெற முடியும் என்று முடிவெடுத்துவிட்டோம். இதனை டெல்லிக்கும் சொல்லிவிட்டோம்’ என்பதுதான் அந்தச் செய்தி.''
''டெல்லி என்ன சொன்னதாம்?''
''இன்ன கட்சியை வைத்துக்கொள்ளுங்கள், இன்னார் வேண்டாம் என்று டெல்லி எப்போதும் எதுவும் சொல்லவில்லை. 'வந்தவர்​களை வைத்து சீக்கிரம் முடியுங்கள். யார் வந்தாலும் பி.ஜே.பி-க்கான வரவேற்பு, மோடி மீதான எதிர்பார்ப்பை வைத்துத்தான் ஜெயிக்கப்போகிறார்கள். கூட்டணி என்று நீங்கள் சேர்ப்பது தேர்தல் வேலைகளை பார்ப்பதற்குத்தான்’ என்று ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் ராஜ்நாத் சிங்.''
''பி.ஜே.பி. கிளப்பிவிட்ட செய்தி பா.ம.க-வுக்குப் போனதா?''
''ஆமாம்! பதறிப்போனது அன்புமணிதான். அவர்தான் பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். ஒன்றிரண்டு தொகுதிக்காகக் கூட்டணியை இழந்துவிடக் கூடாது என்று சொல்பவரும் அன்புமணிதான். பி.ஜே.பி. கூட்டணி என்பது ராமதாஸுக்கு முழு உடன்பாடு இல்லாதது. தே.மு.தி.க. இல்லாத பி.ஜே.பி. கூட்டணி என்றால், ஓகே என்று சொல்பவராகவே இன்னமும் இருக்கிறார் ராமதாஸ். தே.மு.தி.க-வை பி.ஜே.பி. விடாது என்பதால் 10 தொகுதிகளாவது வாங்கிவிட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். 10 கிடையாது என்று எப்போது சொன்னார்களோ, அப்போதே கூட்டணியில் இருந்து விலகிவிட வேண்டும் என்றும் சொன்னவர் ராமதாஸ். தைலாபுரம் தோட்டத்தில் நடந்த நிர்வாகக் குழுவில்கூட, 'நவம்பரில் இருந்து பேச்சுவார்த்தை... பேச்சுவார்த்தை என்று சொல்கிறீர்களே தவிர, என்ன ரிசல்ட் கிடைத்தது?’ என்று அன்புமணியையே லேசாக 'சுருக்’ குத்துப் போட்டுள்ளார் ராமதாஸ். எவ்வளவு காத்திருந்தாலும் தொகுதிகள் ஒருசில குறைந்தாலும் இந்தக் கூட்டணியில்தான் இணைய வேண்டும் என்பதில் அன்புமணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் உறுதியாக இருந்ததால் எட்டு என்ற எண்ணிக்கையை ஏற்றுக்கொண்டு, ஆக வேண்டிய நெருக்கடிக்கு 12-ம் தேதி வந்தார்கள் என்கிறார்கள். அடுத்த சிக்கல் அதன் பிறகுதான் ஆரம்பித்தது!''
''அது என்ன?''
''எண்ணிக்கை ஓகே! எந்தெந்த தொகுதி என்று பிரிக்க வேண்டாமா? ஒவ்வொரு தொகுதியாக எடுத்து பிரித்துக்கொண்டு இருந்தார்கள். அதில் பிரச்னைக்குரிய பிரதான விஷயத்தை மட்டும் சொல்கிறேன்!''
''ம்!''
''சேலம், கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு தொகுதி​களையும் பா.ம.க. எதிர்பார்க்கிறது. இரண்டுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார் ராமதாஸ். இதில் கிருஷ்ணகிரி தங்களுக்கு செல்வாக்கான தொகுதி என்று பி.ஜே.பி. சொல்கிறது. 'சேலத்தில் சென்டி​மென்டாக நாங்கள்தான் நிற்போம்’ என்றும் பி.ஜே.பி-யினர் சொல்கிறார்கள். சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலையைத் தொடர்ந்து அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட அனுதாப அலையைப் பயன்படுத்திக்கொள்ள பி.ஜே.பி. நினைக்கிறது. ஆனால், இந்த இரண்டையும் தரத் தயங்குகிறது பா.ம.க. அதேபோல் ஆரணி, அரக்கோணம் ஆகிய இரண்டு தொகுதிகளையும் பா.ம.க. குறிவைத்துள்ளது. அடுத்தடுத்து உள்ள இந்த இரண்டில் ஏதாவது ஒரு தொகுதியை தாருங்கள் என்று பி.ஜே.பி. கேட்கிறது. ஆனால், இரண்டையும் தர பா.ம.க. தயாராக இல்லை. எனவே புதன்கிழமை இரவு இல.கணேசன் வீட்டுக்குச் சென்று அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தினார். 'எங்களுக்கு செல்வாக்கான தொகுதிகள் மொத்தம் 14. கூட்டணி அமைத்து போட்டியிடுவதால் எட்டு தொகுதி வரைக்கும் இறங்கி வந்துவிட்டோம். அதிலும் நாங்கள் அறிவித்த வேட்பாளர்களை வாபஸ் வாங்கச் சொல்கிறீர்கள். எங்களால் சேலம், கிருஷ்ணகிரி, ஆரணி, அரக்கோணம் ஆகிய நான்கு தொகுதிகளை வாபஸ் வாங்க முடியாது. ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, அரங்க.வேலு, அருள் ஆகிய நான்கு முக்கியப் பிரமுகர்களை இங்கு வேட்பாளர்களாக அறிவித்து இரண்டு கட்டப் பிரசாரத்தை முடித்துவிட்டோம். அதன் பிறகு வாபஸ் வாங்கச் சொல்வது சரியல்ல. எங்களால் விழுப்புரம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை ஆகிய மூன்று தொகுதிகளை வேண்டுமானால் விட்டுத்தர முடியும். மற்ற தொகுதிகளைக் கேட்காதீர்கள்’ என்று சொல்லிவிட்டு வந்தார். சேலம், கிருஷ்ணகிரி தொகுதியைக் கேட்பது பி.ஜே.பி. என்பதால், அந்தக் கட்சிக்கே சிக்கல் ஏற்பட்டது. செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று நாட்களும் இந்த நான்கு தொகுதிகளுக்கான பஞ்சாயத்துதான் நடக்கிறது. வியாழன் இரவு அல்லது வெள்ளி காலையில் தே.மு.தி.க-வுக்குத் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டும். வேட்பாளர்களை அறிவித்துவிட்டு விஜயகாந்த் பிரசாரம் கிளம்ப வேண்டும். இதுவரை விஜயகாந்த் அவசரப்படுத்திக்கொண்டிருந்தது பி.ஜே.பி. இப்போது பி.ஜே.பி-யை அவசரப்படுத்த ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த்!'' என்றபடி காங்கிரஸ் பக்கமாக வந்தார் கழுகார்.
''ஜி.கே.வாசனின் திடீர் சீற்றம் பற்றி கடந்த இதழில் லேசாகச் சொல்லியிருந்தேன். 'தமிழகக் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவுகள் எடுக்காததால்தான் தமிழக காங்கிரஸில் தொய்வு ஏற்பட்டது’ என்று ஜி.கே.வாசன் சொன்னது சோனியா, ராகுல் போன்றவர்களை ஆத்திரம் அடைய வைத்துவிட்டது. 'காங்கிரஸை விட்டு வாசன் போகப்போகிறாரா?’ என்று அகமது படேலிடம் ராகுல் கேட்டதாகச் சொல்கிறார்கள். இந்த தகவல் மத்திய உளவுத் துறைக்கும் உத்தரவாகப் போடப்பட்டு, ஜி.கே.வாசன் அடுத்து என்ன செய்யப்போகிறார் என்று அவர்களும் குடைய ஆரம்பித்தார்கள்!''
''மேலிடத்தில் இருந்து ஜி.கே.வாசனிடம் பேசினார்களா?''
''கடந்த 10-ம் தேதி மதியம் பிரதமரை டெல்லியில் சந்தித்தார் ஜி.கே.வாசன். வெளியில் வந்தவர் பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போதுதான் இதைச் சொன்னார். இந்தத் தகவல் அரை மணி நேரத்தில் சோனியாவுக்கும் ராகுலுக்கும் போனது. அவர்கள் ஆலோசனை செய்துவிட்டு, இதுபற்றி விசாரிக்கும் பொறுப்பை குலாம்நபி ஆசாத்திடம் கொடுத்தார்கள். 'கூட்டணி பற்றி முடிவெடுக்க தாமதம் ஆனது பற்றிய வருத்தத்தில் ஜி.கே.வாசன் இப்படி பேசியிருக்கிறார். நான் அவரைச் சமாளித்துக்கொள்கிறேன்’ என்று ஆசாத் சொல்ல, 'இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் பிளவு ஏற்பட்டுவிடக் கூடாது’ என்று கட்டளை போட்டதாம் மேலிடம். உடனடியாக ஜி.கே.வாசனிடம் பேசியிருக்கிறார் ஆசாத். 'நான் ஏர்போர்ட் போய்க்கொண்டு இருக்கிறேன். சென்னை செல்கிறேன்’ என்றாராம். 'இங்கு நிறைய வேலை இருக்கிறது. தேர்தல் பற்றி முடிவெடுக்க வேண்டும்’ என்றாராம் ஆசாத். 'தேர்தல் பற்றி பேசத்தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இருக்கிறாரே... நான் எதற்கு?’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு சென்னை வந்துவிட்டார் வாசன்!''
''அப்புறம்?''
''சென்னை வந்த பிறகு மறுபடியும் ஆசாத் போன் செய்து பேசியுள்ளார். 'இரண்டு மாதங்களாக தமிழகம் பற்றியே நீங்கள் கவலைப்படவில்லை. யாரோடு கூட்டணி என்று பேசவே இல்லை, இப்போது ஏன் திடீரென்று பேசுகிறீர்கள்?’ என்று கேட்டாராம் ஜி.கே.வாசன். 'நான் தமிழ்நாட்டு பொறுப்பாளர் அல்லவே’ என்றாராம் ஆசாத். 'எங்கள் மாநிலத்துக்கு முகுல் வாஸ்னிக்கை பார்வையாளராகப் போட்டுள்ளார்கள். கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. அவர்களை வைத்து ஒரு கூட்டம்கூட அவர் போடவில்லை. அப்புறம் எப்படி நிர்வாகிகள் செயல்படுவார்கள்? தேர்தல் பேச்சுவார்த்தைகளை எல்லாக் கட்சிகளும் மூன்று மாதங்களாக நடத்தி வருகிறது. ஒரு தடவைகூட அவர் வரவில்லை. கட்சித் தலைவர்களைச் சந்திக்கவில்லை, கூட்டணி சேருகிறார்களோ, இல்லையோ... கலைஞரையோ ஸ்டாலினையோ, விஜயகாந்த்தையோ அவர் வந்து பார்த்துப் பேச வேண்டியதுதானே. தமிழ்நாட்டை மொத்தமாக மறந்துவிட்டு, இப்போது நான் சொன்னதும் என்னை அழைத்துப் பேசுகிறீர்களா?’ என்றாராம் ஜி.கே.வாசன். 'நீங்கள் உடனடியாக இங்கு வாருங்கள்’ என்று அழைத்துள்ளார் ஆசாத். 'வரும்போது உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார். உடனடியாக ஞானதேசிகன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஜி.கே.வாசன் ஆகியோரை டெல்லிக்கு அழைத்தார் ஆசாத். 'நான் வரவில்லை’ என்று ஜி.கே.வாசன் சொல்லிவிட்டார்!''
''திடீரென ஜி.கே.வாசன் இதனைச் சொன்னதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?''
'' 'முதலில் தி.மு.க-விடம் தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளையும் புதுவையில் ஒரு தொகுதியையும் சேர்த்து 10 தர வேண்டும் என்று கேட்டார்கள். அதன் பிறகு 8 1 கேட்டார்கள். அதன் பிறகு 7 1 கேட்டார்கள். அப்படியே இறங்கி ஐந்து தொகுதிகள் தந்தால் போதும் என்று கேட்டார்கள். இந்தத் தகவல் ஜி.கே.வாசனுக்குக் கிடைத்தது. ஐந்து தொகுதிகளையும் வாங்கிக் கொண்டு போட்டியிடுவது கேவலம் என்று நினைத்துத்தான் இப்படிப் பேசினார் ஜி.கே.வாசன். தி.மு.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் ப.சிதம்பரம் அல்லது ஜி.கே.வாசன் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். அதனை விடுத்து குலாம்நபி ஆசாத் பேசினார். அவர் டி.ஆர்.பாலுவிடம் பேசுவார். கனிமொழியிடம் அகமது படேல் பேசுவார். டி.ஆர்.பாலுவும் கனிமொழியும் இவர்கள் சொல்வதை கேட்டுக்கொள்வார்களே தவிர, முடிவெடுக்கும் நிலையில் அவர்கள் இல்லை. கனிமொழியிடம் சொல்லியாச்சு, டி.ஆர்.பாலுவிடம் பேசியாச்சு என்பதையே சாதனையாக ஆசாத் சொல்லிக்கொண்டு இருந்தார். இப்படி பேசியது கருணாநிதி, ஸ்டாலின் போன்றவர்களால் பரிசீலனை செய்யப்பட்டதாகவே தெரியவில்லை. அதனால்தான் ஜி.கே.வாசன் ஆத்திரப்பட்டு பொங்கித் தீர்த்தார்!’ என்கிறார்கள் வாசன் ஆதரவாளர்கள்.''
''தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்கிறார்களே?''
''டெல்லியில் பேட்டி கொடுத்துவிட்டு ஜி.கே.வாசன் சென்னை வந்துவிட்டார் என்பதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் திரண்டுவிட்டார்கள். 'இனிமேல் இந்தக் கட்சியில் நமக்கு மரியாதை இருக்காது. அவர்கள் தமிழ்நாட்டையே மறந்துவிட்டார்கள். மீண்டும் த.மா.கா. அமைத்துவிடலாம்’ என்று பலரும் ஆலோசனை சொன்னார்கள். ஆனால், அதனை மறுத்துப் பேசியிருக்கிறார் ஜி.கே.வாசன். 'தனிக்கட்சி அமைக்கும் சூழ்நிலை இப்போது இல்லை. கூட்டணி பற்றி இரண்டு மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தால், நம்மால் மரியாதைக்குரிய நடவடிக்கைகளைச் செய்திருக்க முடியும். அதற்கு தலைமையைச் சுற்றி இருப்பவர்கள் சரியான பாதையைக் காட்டவில்லை, அந்த வருத்தத்தில்தான் இப்படிப் பேசினேன். மிகமிகச் சோதனையான காலக்கட்டத்தில் கட்சி இருக்கிறது. சோதனை யான நேரத்தில் கட்சியை உடைத்துவிட்டார் என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நான் விரும்ப வில்லை. இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிக்கும் வலம்வருவோம். காங்கிரஸ் கட்சி 40 தொகுதியிலும் நின்றால் உண்மையான செல்வாக்கு என்ன, எத்தனை சதவிகிதம் வாக்கு வங்கி நமக்கு இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்’ என்று சொன்னாராம்.''
''40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பார்க்கவேண்டுமே அந்தக் கட்சி?''
''இதை வைத்து வசூல்செய்வதற்கு ஒரு கூட்டம் தயார் ஆகிவருகிறது!'' என்ற கழுகார் அடுத்து அழகிரி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
''தி.மு.க-வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு, அப்படி நீக்கப்பட்டதில் இருந்து உற்சாகமாக பல்வேறு ஊர்களுக்குப் பயணம் போய், பத்திரிகைகளுக்கு சவால் பேட்டி கொடுத்து வருகிறார் மு.க.அழகிரி. இதுவரை தமிழகத்துக்குள் வலம் வந்தவர் திடீரென 13-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது ரேஸ் கோர்ஸ் வீட்டில் வைத்து பார்த்து பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அவரோடு மாநிலங்களவை எம்.பி-யான கே.பி.ராமலிங்கம் இருந்துள்ளார். 'மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரைச் சூட்ட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்க வந்ததாக அழகிரி சொன்னார். தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்று சொன்ன​வரிடம், 'காங்கிரஸுடன் கூட்டணி வைக்கப்போகிறீர்களா?’ என்று நிருபர்கள் கேட்டார்கள். 'கூட்டணி பற்றி பேசுவதாக இருந்தால் மேடத்தைதான் சந்தித்திருப்பேன்’ என்று சொல்லிவிட்டுப் போனார். ஆனால், அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸுடன் நல்லுறவு ஏற்படுத்தத்தான் அழகிரி வந்ததாகச் சொல்கிறார்கள்!''
''அப்படியா?''
''அழகிரியின் ஆதரவாளர்களிடம் விசாரித்​தால், 'அழகிரி இப்போதைக்கு தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவது இல்லை. மே 16-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்​பட இருக்கிறது. அதில் தி.மு.க. தேறுமா, தேறாதா என்று தெரிந்துவிடும். அதுவரை காத்திருக்கப் போகிறார். ஸ்டாலின் நிறுத்திய வேட்பாளர்களால் ஜெயிக்க முடியவில்லை, இது ஸ்டாலினின் அரசியல் தோல்வி என்று சொல்லப்போகிறார். அதற்காக அவர் சில திட்டங்களை வைத்துள்ளார்’ என்கிறார்கள். 'தென்மாவட்டத்தில் 10 தொகுதிகள் இருக்கிறது. அதுல ஒன்றுகூட ஒழுங்கான வேட்பாளரைப் போடலை. அவங்களை எதிர்த்து நாம வேலை செய்யாவிட்டாலும் தோற்பாங்க. நம்மால்தான் தோற்றார்கள் என்பதைக் காட்ட வேண்டும். அந்த வேலைகளைப் பார்க்க வேண்டும்’ என்று சொன்னாராம் அழகிரி. 'அநேகமாக தென் மாவட்டத் தொகுதிகளில் எதிர்த்து வேலை பார்ப்பார்கள் அல்லது போட்டி வேட்பாளர்களை போடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்னொரு தகவலும் உண்டு!''
''அது என்ன?''
''டெல்லி வந்த அழகிரி, பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்தாராம். 'மதுரையில் பி.ஜே.பி. நின்றால் ஆதரிக்கத் தயார்’ என்றாராம். அழகிரி பாலிடிக்ஸை புரிஞ்சுக்கவே முடியலை!’ என எழுந்த கழுகார், ''அழகிரியை டெல்லிக்கு அழைத்து காங்கிரஸுடன் அவர் நெருக்கமாக இருப்பதாக காட்டுவதன் மூலம் தி.மு.க-வுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.
படங்கள்: சு.குமரேசன்,  ப.சரவணகுமார்
அகற்றிய அதிகாரிகள் கடுப்பில் மக்கள்

கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கு​வதற்கு சில மாதங்களுக்கு முன்பே, பா.ம.க. தரப்பில் அறிவிக்கப்பட்ட 10 தொகுதி வேட்பாளர்களில் ஒருவர் மத்திய முன்னாள் இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. ஆரணி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர், இரண்டு மாதங்களுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். அங்கு பொதுமக்கள் சுத்தமான குடிநீருக்காகக் கஷ்டப்படுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, 10 இடங்களில் சுத்திகரிப்பு நிலையத்தை வைத்துக்கொடுத்தார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகள் அதிரடியாகப் புகுந்து, சுத்திகரிப்பு நிலையங்களை அப்புறப்படுத்திவிட்டனர். இவை தேர்தலுக்காக வைக்கப்பட்டவை என்று அ.தி.மு.க-வினர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை. பா.ம.க. தரப்பினரோ, 'இவற்றை எல்லாம் நாங்கள் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே வைத்துவிட்டோம். பிறகு எப்படி தேர்தல் விதிமுறை மீறல் வரும்?’ என்று காட்டமாகக் கேட்கிறார்கள். ''வேண்டுமானால், அந்த சுத்திகரிப்பு நிலையங்களை இப்போதைக்கு சீல் வைத்துவிட்டு, தேர்தல் முடிந்த பிறகு திறந்திருக்கலாம். அதிகாரிகளின் நடவடிக்கையால் அ.தி.மு.க-வுக்குதான் கெட்ட பெயர். இதற்கெல்லாம் காரணம், அ.தி.மு.க. அமைச்சர் ஒருவர்தான்'' என்றும் பொதுமக்களில் சிலர் கடுப்புடன் சொல்கிறார்கள்.

''100 ஆண்டுகள் வாழ வேண்டும்!''

மூன்று தமிழர்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானிக்கு பாராட்டு விழாவை ம.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு சென்னையில் நடத்தியது. ''மூன்று தமிழர்களுக்கும் தூக்கு என்று முடிவான தினத்தில் இருந்து இன்று வரை தன்னுடைய சொந்த சகோதரர்களுக்கு வாதாடுவதைப்போல அக்கறையுடன் வாதாடிவருகிறார் ராம்ஜெத்மலானி. ஒவ்வொரு நாளுக்கும் லட்சக்கணக்கான பணத்தை கட்டணமாக வாங்கும் ராம்ஜெத்மலானி, பைசாவே வாங்காமல் இந்த மூவருக்கும் வாதாடினார். ஒரு தடவை அல்ல, இரண்டு தடவை அல்ல... 24 முறை அவர் உச்ச நீதிமன்றத்துக்கு வந்து ஆஜரானார். அவருக்கு தமிழர்கள் கடமைப்பட்டு இருக்கிறோம். நீங்கள் 100 ஆண்டுகள் வாழ வேண்டும். நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்துவோம்'' என்று உணர்ச்சிவசப்பட்டார் வைகோ.
இறுதியில் பேசிய ராம்ஜெத்மலானி, ''தமிழ்நாடு என்றால் எனக்கு தனி பிரியம் உண்டு. வைகோ அழைத்ததால் வந்தேன். என்னுடைய ஒரே வேண்டுகோள் இதுதான்... வைகோவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள்!’ என்று சொல்லிவிட்டுப் போனார்.

ad

ad