புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 மார்., 2014

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் மு.க.அழகிரி பேட்டி
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மு.க.அழகிரி கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி, கட்சி தலைமையை இழிவுபடுத்தி
விமர்சனம் செய்ததாக கூறி தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இந்தநிலையில் மு.க.அழகிரி நேற்று காலை மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் மு.க.அழகிரியை அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் கூடி இருந்து வரவேற்றனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட மு.க.அழகிரி, விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அதன் விவரம் வருமாறு:–
ஆரணி செல்கிறேன்
கேள்வி:–சென்னை வந்து உள்ள நீங்கள் அறிவாலயத்துக்கு செல்வீர்களா? அல்லது கோபாலபுரத்துக்கு சென்று உங்கள் தந்தையை சந்திப்பீர்களா?
பதில்:–நான் கோபாலபுரத்துக்கோ, அறிவாலயத்துக்கோ போக மாட்டேன். எனது ஆதரவாளர் ஒருவர் ஆரணியில் நலிவுற்று இருக்கிறார். அவரை சந்திக்க ஆரணிக்கு போகிறேன்.
ஆதரவாளர்கள் அதிகம்
கேள்வி:–நீங்கள் போகும் இடங்களில் உங்கள் ஆதரவாளர்கள் பெரும் அளவில் கூடுகிறார்களே?
பதில்:–எனக்கு ஆதரவு உள்ளதா? என்பதை பற்றி நீங்கள்தான் பார்த்து முடிவு செய்யவேண்டும். எனக்கு ஆதரவாளர்கள் அதிகம் என நான் கூறமாட்டேன். அது தற்புகழ்ச்சியாகும். எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது.
கேள்வி:–நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?
பதில்:–தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன்.
நோட்டீசு வரவில்லை
கேள்வி:–கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு உள்ளீர்களே?
பதில்:–என் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் மீதும், நடவடிக்கை எடுக்க தூண்டியவர்கள் மீதும் 2, 3 மாதங்களில் வேறு விதமான நடவடிக்கைகள் வரலாம். அவர்களுடைய நண்பர்கள் மீதும் நடவடிக்கை வரலாம். பொறுத்திருந்து பாருங்கள். நான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு தலைவர் கலைஞர் சொன்னது போல் எந்தவிதமான நோட்டீசும் வரவில்லை. அவர்கள் சொன்னதில் உண்மையில்லை.
காலில் விழமாட்டான்
கேள்வி:–கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஒரு கருத்து தெரிவிக்கையில், ஓட்டளிக்கும் விரல்களை வெட்டினாலும் தி.மு.க.காரன் உதயசூரியனுக்குத்தான் ஓட்டு போடுவான். வேறு சின்னத்துக்கு ஓட்டுபோடமாட்டான் என்று கூறி உள்ளாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:–ஆமாம். அது உண்மை தான். ஆனால், தி.மு.க.காரன் தனது மனைவியை அழைத்துக் கொண்டு எதிர்க்கட்சிக்காரன் காலில் போய் விழமாட்டான்.
கேள்வி:–உங்கள் ஆதரவாளராக இருந்த எஸ்.ஆர்.கோபி சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து அவர்களது ஆதரவாளராக மாறிவிட்டாரே?
பதில்:–எதையோ எதிர்பார்த்துக்கொண்டு போய் இருக்கலாம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம்.
தலைவர் பதவி
கேள்வி:–மு.க.ஸ்டாலின் தலைவர் பதவிக்கு வந்து விடுவாரா?
பதில்:–யார் எந்த பதவிக்கு வந்தாலும் எனக்கு அதுபற்றி கவலையில்லை. அவர்களுக்கு கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதை விட கட்சியின் சொத்துக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் கவனமாக இருப்பதால் பதவிக்கு வரலாம்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

ad

ad