புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2014


ஜனநாயகத்தையே பணநாயகம் ஆக்கிவிட்டார்கள். வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்களும் தண்ணீராய் பாய்ந்தது பணம். இதனை ஆங்காங்கே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கைப்பற்றினாலும், பல இடங்களில் அவர்களால் தடுக்க முடியவில்லை.
இந்தப் பணப் பட்டுவாடாவை தனித்தனிக் குழுவாக அமைத்து செயல்படுத்தினார்கள். ''50 சதவிகிதம் பேருக்குக் கொடுத்துவிட்டோம், வெற்றி எங்களுக்குத்தான்'' என்று பணம் கொடுத்த தரப்பு சொல்லி பதறவைக்கிறது. கடந்த 21, 22 தேதிகளில் நடந்த பணநாயகக் கூத்துக்கள்தான் இங்கே!விகடன் நன்றி 
 பணப் பட்டுவாடா எப்படி நடக்கிறது?
தமிழகம் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் கடைசி இரு தினங்களில் பரபர பட்டுவாடா செய்து உலக சாதனை நிகழ்த்தி இருக்கின்றனர்.  
கட்சித் தலைமை 20 கோடி, மாவட்டச் செயலாளரும் வேட்பாளரும் இணைந்து 10 கோடி என தொகுதிக்கு 30 கோடி ரூபாய் செலவுசெய்வது என முடிவானது. முதலில் சில வங்கிகள் மூலம் பணத்தை 100 ரூபாய் சில்லறையாக மாற்றும் காரியம் நடந்தது. ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக ஆறு பேர் கொண்ட குழு, அவர்களுக்குக் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் அந்தக் கிளைச் செயலாளர் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு, நகராட்சி என்றால் ஒரு வார்டுக்கு ஆறு பேர் கொண்ட குழு, அதன் கீழ் தெரு ஒன்றுக்கு ஆறு பேர் கொண்ட குழு... என பக்காவாக ஆக்ஷன் குழு தயார் ஆனது. அவர்கள் 'இவர் கட்சிக்காரர், இவர் புதிதாக வாக்களிக்கப் போகிறவர், இவர் மாற்றுக் கட்சிக்காரர்’ எனத் தெளிவாகப் பிரித்து வைத்துக்கொண்டனர். தெருவுக்குள் இரண்டு இரண்டு பேராக சென்ற இவர்கள், தங்களுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சிப் பெண்மணி ஒருவரையும் இணைத்துக்கொண்டு, அந்தப் பெண் மூலம் வீடு வீடாகப் பணம் விநியோகித்தனர். இவர்கள் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றவுடன், வழக்கறிஞர் அணி, இளைஞர் அணியைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட மானிட்டர் கமிட்டி, அந்தத் தெருவுக்குச் சென்று, அனைவருக்கும் முறையாகப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதா என்பதை கிராஸ் செக் செய்கிறது. சில இடங்களில் மானிட்டர் கமிட்டியும், உள்ளூர் பட்டுவாடா கமிட்டியும் சில பேருக்கு மட்டும் பணத்தைக் கொடுத்துவிட்டு, மொத்தமாக அபேஸ் செய்ததைக் கண்டுபிடித்து, மாவட்ட நிர்வாகிகள் ரெகவர் செய்திருக்கிறார்கள்.
'போன் செய்தால் பணம் வரும்!’
விருதுநகர் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியம் முழுவதும் பறக்கும் படையைப்போல வந்து சிலர் பணம் கொடுக்க ஆரம்பித்தனர். அங்கிருந்த மாற்றுக் கட்சியினர் போலீஸுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் போன் செய்தும் அவர்கள் உடனே வரவில்லை. வந்த வேலையை முடித்து விட்டு சாவகாசமாகத் திரும்பிச் சென்றது பணப் பட்டுவாடா டீம். ''உங்களுக்குப் பணம் வரவில்லை என்றால், இந்த எண்ணுக்கு போன் செய்யுங்கள். ஒரு மணி நேரத்தில் பணம் வீடு தேடி வரும்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்களாம்.
திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்தில் அ.தி.மு.க-வினர் பணம் கொடுக்கிறார்கள் என்று தகவல் கேட்டு, ஆர்.ஐ-யான சிக்கந்தர் தலைமையில் பறக்கும் படை டீம் போய் இறங்கியது. அ.தி.மு.க. நிர்வாகிகளான சுந்தரம், பவுன்ராஜ் இருவரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 2,000 ரூபாயை மட்டும் கைப்பற்றியதாக அதிகாரிகள் கூறினர். 'அவர்கள் வைத்திருந்த பெருந்தொகை அங்கிருந்து வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது’ என்று மாற்றுக் கட்சியினர் குற்றம்சாட்டினர்.
கூடக்கோயில் பகுதியில் பாலு என்ற அ.தி.மு.க. நிர்வாகியிடம் 5,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இருப்பினும், 'போலீஸ் வருவதற்கு முன்பே செய்ய வேண்டியவற்றை செய்தாயிற்று’ என்று உற்சாகத்துடன் சென்றனர்.
டிசைன் டிசைனா பதில்!
மதுரை மாநகருக்குள் ஆரப்பாளையம், செல்லூர், மேலப்பொன்னகரம், எஸ்.எஸ்.காலனி, பெத்தானியாபுரம், கரிமேடு, கோமஸ்பாளையம், திடீர் நகர், நெல்பேட்டை என பல பகுதிகளில் தீவிரமாகப் பணப் பட்டுவாடா நடத்தப்பட்டது. ''பணப் பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்துங்கள். சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று மாற்றுக் கட்சியினர் சாலைமறியலில் இறங்கியும் பலன் இல்லை. 'வெளி மாநில தேர்தல் பார்வையாளர்களும் கண்டுகொள்ளவில்லை’ என்பது அவர்களின் புலம்பல்.
மதுரையில் ஜெய்ஹிந்த்புரம், வில்லாபுரம் பகுதியில் பணப் பட்டுவாடா செய்துகொண்டி ருந்தவர்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் கையும் பணமுமாகப் பிடித்தனர். ஆனால், போலீஸ் வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் எஸ்கேப் ஆக, ஒரு பெண்மணி மட்டும் சிக்கிக்கொண்டார். தோழர்கள் இரக்கப்பட்டு, ''அந்தப் பெண்மணி மீது நடவடிக்கை வேண்டாம். பணம் கொண்டுவந்த நிர்வாகி மீது நடவடிக்கை எடுங்கள்'' என்று முறையிட்டனர். பல இடங்களில் வழக்கு போட்டதற்கான ரசீதுகளைக் கொடுங்கள் என்று கட்சியினர் சம்பந்தபட்ட காவல் நிலையங்களில் கேட்டால், 'கம்ப்யூட்டர் ரிப்பேர், பிரின்டர் ரிப்பேர், டைப் அடிப்பவர் வரவில்லை’ என்று டிசைன் டிசைனாக பதில்கள் கிடைத்தன.
பதுக்கப்பட்ட மது பாட்டில்கள்!
தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் விடுமுறை என்பதால், பல ஊர்களிலும் சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைத்திருந்தனர் கட்சிக்காரர்கள். சரக்கு பார்ட்டிகளின் ஓட்டுக்களைப் பெறுவதற்காக இந்த ஏற்பாடாம். ராமநாதபுரம் தொகுதியில் கமுதி அருகேயுள்ள முஷ்டக்குறிச்சி பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் பாண்டி, மலைச்சாமி ஆகியோரை போலீஸ் கைது செய்தது.
களத்தில் தேசிய கட்சிகள்!
சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் வெளிப்படையாகவே பணப் பட்டுவாடா நடந்துள்ளது. புகார் செய்தும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால், மாஜி எம்.எல்.ஏ-வான ராஜசேகரன் தலைமையில் காங்கிரஸார் சாலைமறியல் செய்தனர். தேவகோட்டை பகுதியில் நடந்த பணப் பட்டுவாடா டீமை பி.ஜே.பி-யினர் கண்டுபிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
வெற்றிலை சத்தியம்... 200 ரூபாய் பணம்!
தர்மபுரி தொகுதி பென்னாகரம், மேற்கு கள்ளிபுரம் பகுதியில் ஆளுக்கு 200 ரூபாய் பணம் சப்ளை செய்தவர்கள், 'எங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவேன்னு வெற்றிலையில் சத்தியம் பண்ணுங்க’ என்று சத்தியம் வாங்கியிருக்கிறார்கள். பக்​காவாக இந்தப் பட்டுவாடா பணியை இவர்கள் செய்தாலும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த எட்டு பேரும், காங்கிரஸைச் சேர்ந்த ஐந்து பேரும் காவல் துறையிடம் சிக்கிக்கொண்டனர்.
பாதிதான் வந்தது!
பிரசாரம் முடிந்த பிறகே கொட்டும் பண மழை, இந்த முறை தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே காஞ்சிபுரம் தொகுதியில் பெய்யத் தொடங்கிவிட்டது. வாக்கு ஒன்றுக்கு 500 முதல் 1,000 ரூபாய் வரை எதிர்பார்த்த வாக்காளர்களுக்கு 200 மட்டுமே கிடைத்ததில் அதிருப்திதான். செழிப்பான உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏரியாக்களில் கட்சி கொடுத்த 200 ரூபாயுடன் 100 ரூபாய் சேர்த்தே கொடுத்தனர். ஆனால் பெரும்பாலான ஏரியாக்களில் பாதிதான் போய் சேர்ந்ததாம்.
மலையில் தாராள கரன்சி!
மலைப் பிரதேசமான நீலகிரியில் மற்ற பகுதிகளைவிட தாராளமாக கரன்சி பாய்ந்தது.
நகர பகுதிகளில் உள்ளவர்களுக்கு 500 ரூபாய் முதல் 1,000 வரையும், கிராமப் பகுதிகளில் 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையும் வீடு வீடாக விநியோகிக்கப்பட்டது. வீடு பூட்டியிருந்தால், கவரில் பணத்துடன் பூத் சிலிப்பையும் வைத்து வீசிவிட்டு செல்கின்றனர்.  
'மேட்டுப்பாளையத்தில் ஒரு லாட்ஜில் அ.தி.மு.க-வினர் கட்டுக்கட்டாக பணத்தை பதுக்கி வைத்திருக்கின்றனர்’ என்று சொல்லி  அந்த லாட்ஜுக்கே வந்து முற்றுகையில் ஈடுபட்டார் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா. ராசா குறிப்பிட்ட அறையை அ.தி.மு.க-வினர் திறக்க மறுக்க... அந்த அறை வாசலிலேயே கட்சிக்காரர்களுடன் அமர்ந்துவிட்டார் ராசா. பெரும் போராட்டத்துக்குப் பிறகு அந்த அறைத் திறக்கப்பட்டபோது, அங்கு இருந்தது ஒரு மினரல் வாட்டர் பாட்டில் மட்டுமே.  
முற்றுகைக்குப் பின்னரே வழக்கு!
கோவை, பூசாரிபாளையத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தபோது, பொதுமக்களே அ.தி.மு.க. கவுன்சிலர் செந்தில் உட்பட மூன்று பேரைப் பிடித்துக் கொடுக்க... வேறு வழியில்லாமல் அவர்களைக் கைது செய்தது போலீஸ்.
கண்ணப்ப நகர், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, சிங்காநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் பணப் பட்டுவாடா செய்ய முயற்சித்தபோது, தேர்தல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர் மார்க்சிஸ்ட் கட்சியினர்.
புளியகுளம் ராமசாமிநகர் பகுதியில் அ.தி.மு.க. கவுன்சிலர் செல்வராஜ் மக்களிடம் பணம் விநியோகிக்க, அவரைப் பிடித்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தனர் பொதுமக்கள். போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்க, போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்ட பின்னரே வழக்குப் பதிவானது.
'வாங்க... வணக்கம்!’
ராஜபாளையம் அருகே தேவதானம்பட்டியில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த பஞ்சாயத்துத்  தலைவர் அம்மாசிக்கனி என்பவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல். தேர்தல் அதிகாரி விஜயன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஜீப்பை சற்று தொலைவில் நிறுத்திவிட்டு சென்றனர். அப்போது பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த சிலர் வருகிற மக்களை 'வாங்க... வணக்கம்!’ என்று சொல்லி கையெடுத்து கும்பிடுவதையும், அவர்கள் பஞ்சாயத்து  அலுவலகத்துக்குள் சென்று சற்று நேரத்தில் சிரித்த முகத்துடன் அவசர அவசரமாக வெளியே செல்வதையும் கண்டனர். தேர்தல் அதிகாரிகளும் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு முன் சென்று நிற்க... 'வாங்க... வணக்கம்!’ என்று சொல்லி அவர்களையும் உள்ளே அனுப்பியிருக்கின்றனர். அங்கே அ.தி.மு.க-வைச் சேர்ந்த வார்டு கவுன்சிலர் தவம்பெற்றாள் ஒரு கவரில் 200 ரூபாய் போட்டு அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரை பணத்தோடு அப்படியே தேர்தல் அதிகாரிகள் வளைத்துப் பிடிக்க, 'என் மகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தோம். அப்போது மொய் எழுதியவர்களுக்குப் பணத்தை கவரில் போட்டு திருப்பி கொடுக்கிறேன்’ என்று சொல்லி சமாளிக்க முயன்றாராம். அவரிடம் இருந்து 102 கவர்களில் இருந்த 20 ஆயிரத்து 400 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பஞ்சாயத்துத்  தலைவர் அம்மாசிக்கனி, கவுன்சிலர் தவம்பெற்றாள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
'குக்கரில் என்ன இருக்கு?’
ராஜபாளையம் பகுதியில் இன்னொரு சம்பவம். தளவாய்புரம் பஞ்சாயத்துத் தலைவர் ராஜேஸ்வரி வீட்டில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. தேர்தல் அதிகாரிகள் இவரது வீட்டுக்குச் சென்று சூட்கேஸ், பீரோ என்று பல இடங்களில் சல்லடை போட்டுத் தேடியும் பணம் கிடைக்கவில்லை. அப்போது சமையல் அறையில் அடுப்பு மீது இருந்த குக்கர் மீது அதிகாரிகளுக்கு திடீர் சந்தேகம். உடனே குக்கரைத் திறக்கச் சொல்லி இருக்கின்றனர். 'குக்கரில் சோறுதான் இருக்கும். வேறு என்ன இருக்கு?’ என்று ராஜேஸ்வரியும் அவரது குடும்பத்தினரும் அடம் பிடித்திருக்கின்றனர். அதிகாரிகள் கெடுபிடி காட்டவும், குக்கரைத் திறந்தால் அதனுள்ளே 45 ஆயிரம் ரூபாய் பணம். அப்புறம் என்ன? பணம் கைப்பற்றப்பட்டு, ராஜேஸ்வரி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
கரன்ட் கட்... செல் சுவிட்ச்டு ஆஃப்!
தேனியில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு நேரம் என ஒதுக்கிக்கொண்டு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது. இரவு நேரத்தில் திடீரென்று கரன்ட் கட் ஆக, அந்த நேரத்தில் விறுவிறு பட்டுவாடா நடத்தப்பட்டதாம். 'புகார் கொடுக்க அதிகாரிகளைத் தொடர்புகொண்டால், அவர்கள் செல்போன் சுவிட்ச்டு ஆஃப்’ என்று மாற்றுக் கட்சியினர் புகார் வாசிக்கிறார்கள்.
இந்த நிலையில், அ.தி.மு.க-வினர் பணப் பட்டுவாடா செய்வதாகச் சொல்லி தி.மு.க. வேட்பாளர் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் தி.மு.க-வினர் சாலைமறியல் செய்தனர். அதனை அடுத்து அ.தி.மு.க-வினர் இருவர் மீது வழக்குப் பதியப்பட்டது. கூடவே பொன் முத்துராமலிங்கம் மீதும், பேருந்தை மறித்ததாகச் சொல்லி அவர் மீது வழக்கு.
பெட்ரோல் பங்க் சோதனை!
'திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் வடமலைபாண்டியன், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகநயினார் ஆகியோர்களின் பெட்ரோல் பங்க்களில் வாக்காளர்களுக்குக் கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது’ என்று வந்த புகாரின் பேரில் அவர்களின் பெட்ரோல் பங்க்குகள் சோதனையிடப்பட்டன. அவற்றில் எதுவும் சிக்கவில்லை. ஆனால், அந்தப் பகுதியில் நின்ற காரில் 4 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் இருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆனால், 'மற்ற இடங்களில் நடந்த பணம் கொடுக்கும் வைபவத்தை அதிகாரிகள் தடுக்கவில்லை. போன் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை’ என்ற புலம்பல்கள் பலமாக கேட்கின்றன.
ஆளைப் பார்த்து பணம் கொடு!
விழுப்புரம் தொகுதியில் வார்டு செயலாளர்களும், கிளைச் செயலாளர்களும் வீதியில் தயாராக நின்றுகொண்டிருக்கும்போது, அந்தப் பகுதியில் கரன்ட் கட் ஏற்படுகிறது. மீண்டும் கரன்ட் வருவதற்குள் அந்தந்தத் தெரு பொறுப்பாளர்கள் பண விநியோகத்தை டைமிங்கோடு முடித்துவிடுகின்றனர். தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களா, நடுநிலையானவர்களா என்பதைப் பார்த்துப் பார்த்துப் பணம் கொடுத்தனர். மாற்றுக் கட்சியினர் வீடு பக்கம் எட்டிப் பார்ப்பதே இல்லை.
பணத்துடன் வேட்டி, சேலை!
மற்ற இடங்களில் கரன்ட் கட் சமயத்தில் பண விநியோகம் நடக்கிறது என்றால், கடலூர் தொகுதி குறிஞ்சிப்பாடி மற்றும் பண்ருட்டியில் தெருவிளக்குகளை அணைத்துப் பணத்தை கைமாற்றினர். மாற்றுக் கட்சியினர் பலமாக உள்ள வடகுத்து கிராமத்தில் 200 ரூபாய் பணத்துடன் ஒரு புடவையும் வேட்டியும் சேர்த்தே கவனிக்கப்பட்டது. கடலூர் நகரத்தைப் பொறுத்தவரை ஜோதி நகர் போன்ற பகுதிகளில் மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவரே நேரடியாகக் களத்தில் இறங்கி, பட்டுவாடாவை முடித்தார்.
அணையும் டிரான்ஸ்ஃபார்மர்... பறக்கும் கரன்சி!
கரன்ட் கட், தெருவிளக்கு அணைப்பு என மற்ற தொகுதிகளில் பணப் பட்டுவாடாவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள... ஆரணி தொகுதியில் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டனர்.பணம் கொடுக்கும் ஆட்களைத் தயார் படுத்திக்கொள்பவர்கள், டிரான்ஸ்ஃபார்மர்களை நிறுத்திவிடுகின்றனர். பின்னர் அரை மணி நேரத்தில் பணத்தை டெலிவரி செய்துவிட்டு, அடுத்த இடத்தில் டிரான்ஸ்ஃபார்மரை அணைக்கச் செல்கின்றனர்.
மீண்டும் மீண்டும் கரன்சி!
புதுச்சேரியில் பல தரப்புகளில் இருந்தும் சகட்டுமேனிக்கு பணம் இறைக்கப்பட்டது. ஏரியாவுக்கு ஒரு வீட்டை மையப்படுத்தி, மொத்தமாகப் பணத்தை அங்கு இறக்கி வைக்கின்றனர். பின்னர் மூன்று நபர்கள் ஆளுக்கு சில ஆயிரம் தொகையை எடுத்துக்கொண்டு பக்காவாகப் பட்டுவாடா செய்கின்றனர். மற்ற கட்சிகள் எவ்வளவு பணம் தருகின்றன என்பதை கணக்கு எடுத்து, அதைவிட கூடுதலாக அடுத்த ரவுண்டு பட்டுவாடாவும் நடக்க... வாக்காளர்களும் ரவுண்டு கட்டுகிறார்கள்.
அப்பா பெயருக்கு பழி!
கன்னியாகுமரித் தொகுதியில் பண விநியோகம் பரவலாக நடந்தது.
காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரின் மகனும் நடிகருமாகிய விஜய் வசந்த், நாகர்கோவிலில் திடீரென செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். ''அப்பாவின் புகைப்படத்துடன் கூடிய கூப்பன்கள் பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளன. நாகர்கோவில், மார்த்தாண்டம் வசந்த் அன் கோ ஷோ ரூம்களில் அந்தக் கூப்பனைக் கொடுத்தால் 2,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். தோல்வி பயத்தால் அப்பா மீது பழியை சுமத்தவே இப்படி யாரோ செய்திருக்கிறார்கள்'' என்று புலம்பித் தீர்த்தார்.
''வேறு இடங்களில் நடப்பதைக் கண்டு கொள்ளாமல் தடுக்க இவர்களே திசை திருப்பிக் கொள்கிறார்கள்'' என்றார்கள் சிலர்.
பி.ஜே.பி. பிரமுகருக்குப் பணம் கொடுத்த அ.தி.மு.க-வினர்!
சிவகங்கை தொகுதியில் நிதி அமைச்சரின் மகன் கார்த்தி சிதம்பரம் களத்தில் நிற்பதால் நிதிக்கு பஞ்சம் இருக்காது என்று திகில் கிளப்பினர். ஆனால், கடைசியில் பணத்தை கச்சிதமாகக் கொண்டுபோய் சேர்த்தது ஆளும் தரப்புதான். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முதல் இவர்கள் பணம் கொடுப்பதை துவக்கிவிட்டனர். தேவகோட்டை பகுதியில் பி.ஜே.பி. பிரமுகர் வீடு என்று தெரியாமல் அவருக்கும் 200 ரூபாய் கொடுத்து அ.தி.மு.க-வுக்கு வாக்கு கேட்க, அவரோ போலீஸுக்குத் தகவல் சொல்லிவிட்டார். பணம் கொடுக்க வந்த நால்வரும்  இப்போது காவலில் உள்ளனர்.
'500 ரூபாய் கொடுக்கச் சொன்னாங்களாமே!’
திருச்சியில் ஓட்டுக்காகப் பணம் கொடுப்பது சர்வசாதாரணமாகவே நடந்தது.  தங்களுக்கு விசுவாசமான ஐந்து கல்லூரி நிறுவனர்களிடம்  பணத்தைக் கொடுத்து வைத்திருந்தனர்.அங்கு பகுதி செயலாளர்கள் சிலர் பணம் பெற்றுக்கொண்டு, சில சுய உதவி குழு பெண்கள் மூலம் பணத்தை விநியோகித்தனர். பண விநியோகம் பெண்களின் ஸ்கூட்டி மூலம்தான். இந்தத் தகவல் திருச்சியில் போட்டியிடும் மாற்றுக் கட்சியி​னருக்கு தெரியவே, தலைமை தேர்தல் அதிகாரிக்குத் தகவல் கொடுத்தனர்.  முடிந்த வரை லேட்டாக வந்து சேர்ந்தனர் அதிகாரிகள். பணம் எதுவும் சிக்கவில்லை.
கடுப்பில் சிலர் தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் வீட்டில் பணம் கொடுப்பதாக புகார் கொடுத்தனர். அதன்படி நேருவின் வீட்டுக்குள் 22-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு நுழைந்தது பறக்கும் படை.  அப்போது அங்கிருந்த நேருவின் உதவியாளர் முத்துச்செல்வம், 'அண்ணன் அசந்து தூங்குகிறார்’ என்றார். அதனால், அவர் காலை 4 மணிக்கு எழுந்த பிறகே சோதனை நடந்தது. ஒன்றும் சிக்கவில்லை.
ஸ்ரீரங்கம் பகுதிகளில், 'ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுக்கச் சொன்னாங்களாமே... நீங்க 200 தான் தர்றீங்க’ என தெருவிலேயே பொதுமக்கள் வாக்குவாதம் செய்ய... பணம் கொடுத்தவர்கள் திண்டாடிப் போனார்கள்.
கிராமத்தில் தாராளம்... நகரத்தில் கஞ்சத்தனம்!
பெரம்பலூர் தொகுதியில் கிராமப் பகுதிகளில் அள்ளிக் கொடுத்தவர்கள். நகரப் பகுதிகளில் ஓட்டுக்கு 100 ரூபாய் மட்டும் வழங்கவே கட்சிக்காரர்கள் கடுப்பானார்கள்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, கை.களத்தூர் காந்திநகர் பகுதிகளில், அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், அந்தக் கட்சியின் கிளை செயலாளர் தங்கதுரை ஆகிய இருவரும் சேர்ந்து 23-ம் தேதி இரவு, வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 200 ரூபாய் கொடுப்பதாகத் தேர்தல் செலவின பார்வையாளர் வர்மாவுக்கு தகவல் கிடைத்தது. சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சிவக்குமார், தங்கதுரை ஆகியோரை கையும் பணமுமாகப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். ஆனால் ஐந்து நிமிடங்களில் அவர் வெளியே வந்துவிட்டது வேறு விஷயம்.
எவ்வளவு பணம்?
''இந்தத் தேர்தலில் மொத்தம் 27 கோடியே 68 லட்சம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 25 கோடியே 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய இரண்டு தினங்கள் மட்டும் வாக்காளர்களுக்கு கொடுக்க முயன்றதாக 55 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் பணம் பிடிபட்டது. 111 புகார்கள் பதிவாகின. 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' - இது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்த அதிகாரப்பூர்வத் தகவல்.
-இப்படி தமிழகம் முழுவதும் பணம் பாய்ந்துள்ளது. அது தேர்தல் வெற்றிக்கு எவ்வளவு உதவியது என்பது வாக்கு எண்ணிக்கை நடக்கும் போதுதான் தெரியும்!

ad

ad