புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

28 ஏப்., 2014

உணவு வழங்கியதில் முறைகேடு விசாரிக்க மூவர் குழு நியமனம்; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.
 
வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. அப்போது இடம்பெற்ற காரசாரமான விவாதத்திலேயே அமைச்சர் ப.சத்தியலிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவதற்கான ஒப்பந்தம் கோரலிலும் அது வழங்கப்பட்டுள்ள விதத்திலும் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இது தொடர்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டு அந்தக் குழு விசாரணை அறிக்கையை பேரவை சமர்பிக்க வேண்டும் எனவும் கோரி ஆளுங்கட்சி உறுப்பினர் க.சர்வேஸ்வரனால் பிரேரணை சமர்பிக்கப்பட்டிருந்தது.
 
குறித்த பிரேரணை, இன்று இடம்பெறும் வடக்கு மாகாணசபை அமர்வில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் மிக நீண்ட காரசாரமான விவாதம் நேற்றைய கூட்டத்தில் இடம்பெற்றது. வடக்கு முதலமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக அறிய முடிகின்றது. 
 
இந்தக் காரசாரமான விவாதத்தின் போது உரையாற்றிய அமைச்சர் ப.சத்தியலிங்கம், இந்த முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக வடக்கு முதலமைச்சர் அலுவலகத்தைச் சேர்ந்த மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அந்தக் குழுவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அந்த விசாரணையின் முடிவில் வெளியிடப்படும் அறிக்கையை சபைக்கு சமர்பிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.