புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஏப்., 2014

எல்.கே.ஜி. புத்தகத்தில் கண்ணாடி அணிந்த சூரியன்: நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு

எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தில் சூரியன் கண்ணாடி அணிந்திருப்பது போன்று அச்சிடப்பட்டுள்ள படம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த மனுவுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவள்ளூர் மாவட்டம் வடமதுரையைச் சேர்ந்த ஜி.புரட்சி சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: எல்.கே.ஜி. இரண்டாம் பருவப் பாடப் புத்தகத்தின் 11-ஆவது பக்கத்தில் எஸ் என்ற ஆங்கில எழுத்துக்கு சூரியன் கண் கண்ணாடி அணிந்திருப்பது போன்று படம் அச்சிடப்பட்டுள்ளது.
இது தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட கட்சித் தலைவரைக் குறிக்கும் வகையில் உள்ளது. இது சட்டத்துக்கு புறம்பாகவும், கல்வியின் இயற்கை நியதிக்கு எதிராகவும் உள்ளது. இதேபோன்று அந்தப் புத்தகத்தின் 94-வது பக்கத்தில் மலையின் அடிவாரத்தில் இருந்து சூரியன் உதயமாவது போன்ற படமும் அச்சிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற படங்கள் புத்தகங்களில் இருப்பதால், ஆரம்பக் கல்வியிலே அரசியலை புகுத்துவது போன்று அமையும். எனவே, இதுபோன்ற தவறான படங்களை அடுத்த கல்வி ஆண்டு பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஏப்ரல் 3) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் எஸ்.சுதர்ஷன் ஆஜரானார். அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் ஐ.எஸ். இன்பதுரையும், தேர்தல் ஆணையம் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.ராஜகோபாலனும் ஆஜராகினர்.
இந்த மனுவுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே நேரத்தில், புத்தகத்தில் உள்ள அந்தப் படங்கள் தொடர்பாக, சட்ட விதிகளுக்குள்பட்டு உரிய உத்தரவு பிறப்பிப்பதற்கு பரிசீலனை செய்யுமாறும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ad

ad