புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 மே, 2014

நிரந்தரத் தீர்வு கிடைத்ததும் நிலப்பறிப்பு, படைக்குவிப்பு என்ற பேச்சே இருக்காது

மக்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பின் அரசியல் யுக்திக்கு இனி இடமில்லை
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பு, படைக்குவிப்பு நடப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவா
னந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் கையில், தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வருமாறு நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தொடர்ச்சியாக பகிரங்க அழைப்பு விடுத்து வருகின்றேன்.
இறுதியாக நான் விடுத்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுத்திருந்த பதிலறிக்கையில், சுயலாப அரசியல் சேற்றில் ஊறிப்பெருத்த அவர்களது பொய் முகங்களே தெரிகின்றன.
எமது மக்கள் நலன் சார்ந்து நான் விடுத்திருக்கும் அழைப்பை அரசாங்கத்தின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுப்பதாகக் கூறும் சுரேஸ் பிரேமச்சந்திரன்.
இந்தியப்படை இங்கு நிலை கொண்டிருந்த வேளை அதிகார மிடுக்கில் அவர் விடுத்த அறிக்கைகள் யாவும் இந்திய அரசின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்காக விடுக்கப்பட்ட அறிக்கைகள் என்று அர்த்தமா? அல்லது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கீழ் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் ஆலோசகராக சுரேஸ் பிரேமச்சந்திரன் தொழில் புரிந்த போது, அவர் விடுத்த அறிக்கைகள் யாவும் அன்றைய சந்திரிகா அரசின் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க விடுக்கப்பட்ட அறிக்கைகள் என்று அர்த்தமா? அல்லது அவர் அன்று கூறிய கருத்துக்கள் யாவும் அவர் சார்ந்திருந்த அரசுகளின் ஊதுகுழல் அறிக்கைகளா?
போர் நடந்து கொண்டிருந்த போது, போர் முடிவடைந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்று நான் கூறியதாக, கனவு கண்டவர் போல் பொய் கூறி புலம்புகிறார் சுரேஸ் பிரேமசந்திரன், ஆகாயத்தை பிளந்து சென்று சூரியனையும் சந்திரனையும் பிடித்து பூமிக்கு கொண்டுவருவேன் என்று வாக்குறுதி கொடுத்தவன் நான் அல்ல. இந்த வெட்டி வீரப்பேச்சுக்களால் எமது மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களும் நாம் அல்லர்.
நடைமுறை சாத்தியமான வழிமுறைகள் குறித்து சிந்தித்து செயற்பட்டவர்கள் நாம். நடந்தேற முடியாத கோரிக்கைகளை முன் வைத்து, வாக்குகளுக்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, எமது மக்களை அழிய வைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதும் உலகறிந்த உண்மை.
யுத்தத்தின் பின்னர் மட்டுமல்ல அழிவு யுத்தம் நடந்த காலத்திலும் எமது மக்களின் அவலங்களை துடைக்க மக்களை கைவிட்டு எங்கும் ஓடிப்போகாமல் உழைத்தவர்கள் நாம். இன்று நேற்றல்ல, இந்தியப் படை காலத்தில் சுரேஷ் பிரேமசந்திரனின் அதிகார வன்முறைக்கு அஞ்சி வடக்கு கிழக்கில் இருந்து கொழும்பு நோக்கி ஓடி வந்த எமது இளைஞர், யுவதிகளை கொழும்பில் புனர்வாழ்வு முகாம்கள் அமைத்து அவர்களை பாதுகாத்து, அநீதிகளை அன்றும் தட்டிக்கேட்டவர்கள் நாம்.
மங்கள முனசிங்க காலத்தில் தெரிவுக்குழுவில் எதுவும் நடக்கவில்லை என்பது உண்மை. அந்த சூழலும் வேறு. ஆறு மாத கால அவகாசம் வழங்கி, அரசாங்கம் இன்று அழைக்கிறது. நானும் கலந்து கொள்ளும் இந்தத் தெரிவுக் குழுவில் பங்கெடுக்க வாருங்கள் என்றுதான் அழைக்கின்றேன். அதில் தீர்வு கிட்டவில்லை என்றால், அரசாங்கம் நீதியாக நடந்து கொள்ளவில்லை என்றால், தெரிவுக் குழுவில் இருந்து மட்டுமல்ல அரசில் இருந்தே நானும் வெளியேறத் தயார் என்றே கூறுகின்றேன்.
அதன் பின்னர், அரசாங்கம் மீது வைக்கப்படும் விமர்சனங்களை நானும் ஏற்றுக் கொள்வேன். நானும் விமர்சனங்களை முன்வைப்பேன். அறுபது ஆண்டுகளாக உரிமைகள் இல்லை என்று இருந்த நாம் ஆறு மாதங்கள் மட்டும் முயன்று பார்ப்பதில் ஏன் தயக்கம்.
மங்கள முனசிங்க காலத்தில் தெரிவுக் குழுவில் எதுவும் நடக்கவில்லை என்று கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
டட்லி - செல்வா , பண்டா - செல்வா காலத்தில் இருந்தே நாடாளுமன்றத்தில் இருந்து வருகின்றார்கள்.
நாடாளுமன்றத்தின் ஊடாக அன்று அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டவில்லை என்பதற்காக, இன்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றத்தை பகிஷ்கரித்தார்களா? அது போலவே மங்கள முனசிங்க காலத் தெரிவுக் குழு தோல்வியில் முடிந்திருந்தாலும், இன்றைய தெரிவுக் குழுவையும் எமது மக்களுக்காகப் பயன்படுத்தி முயன்று பார்க்க ஏன் தயக்கம்? 31 பேர் இருக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டும் இருப்பதால் எதை சாதிக்க முடியும் என்று கேட்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன்
225 உறுப்பினர்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் 14 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருந்து எதை சாதிக்கலாம் என்று எண்ணுகின்றார்?
அரசியல் தீர்வு கிடைத்துவிடும் என்ற அச்சம் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யான காரணங்களை கட்டவிழ்ந்து வருகின்றது.
நான் தனியொரு அமைச்சராக இருந்து யுத்தத்தின் பின்னர் பெருமளவி லான நிலங்களை அரச படைகளிடம் இருந்து மீட்டு எமது மக்களிடம் கொடுத்திருக்கிறேன்.
இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் முடிந்தளவு மீள்குடியேற்றம் செய்திருக்கிறேன். படையினர் நிலை கொண்டிருந்த காவலரண்கள் மற்றும் முகாம்கள் பலவற்றை அகற்ற முடிந்திருக்கின்றது.
யாழ். பல்கலைக்கழகத்திற்கு உரித்தான விவசாய மற்றும் பொறியியல் பீடம் அமைக்கப்படுகின்ற கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள பாரிய நிலப்பரப்பை மீட்டுக் கொடுக்க முடிந்துள்ளது. இவைகளைக் கண்டு தாம் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கான மக்களின் அவலங்கள் யாவும் தீர்ந்து வருகின்றனவே என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அச்சப்படுகின்றனர். நிரந்தர அரசியல் தீர்வு கிடைத்து விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் சுலபமாகவே தீர்ந்து விடும் என்று தமது அரசியல் இருப்பை எண்ணி கலங்கி நிற்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்னரே அரசாங்கம் அறிவித்த போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்று வந்திருந்தால்...
அண்மையில் நடந்து முடிந்ததாக அவர்கள் கூறும் சுற்றி வளைப்புகளோ, சில கைது நடவடிக்கைகளோ இங்கு நடந்திருக்க வேண்டிய சம்பவங்களும் இடம்பெற்றிருக்காது.
இதுவரையில் நிரந்தரத் தீர்வையும் எட்டியிருக்கலாம். அநீதிகளைத் தட்டிக் கேட்பதென்பது, அவைகளை தடுத்து நிறுத்தவே அன்றி, எமது மக்கள் மீது அவலங்களை மேலும் சுமத்துவதற்காக அல்ல. 13 வது திருத்தச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்தவர்களும் அதை உதாசீனம் செய்தவர்களும் இன்று அதையே ஏற்றுக் கொண்டு வர முடியும் என்றால்... மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களை மத்திய அரசின் அதிகாரப் பறிப்பு என்று கூறியவர்கள்...
இன்று அதே மத்திய அரசோடு இணைந்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கெடுக்க வந்திருப்பது இதய சுத்தியானது என்றால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான நியாயங்களை கற்பிப்பதைக் கைவிட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை மக்களின் விடிவிற்காகப் பயன்படுத்த முன்வர வேண்டும்.
எனத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தமிழ் பேசும் மக்களின் சம கால பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விருப்பம் கொண்டிருந்தால், அது அரசியலுரிமைப் பிரச்சினைக்கு யதார்த்த வழிமுறை மூலமே நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற மதிநுட்ப சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு முன்வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ad

ad