புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஜூன், 2014


ஒரு மொழி பற்றிய திணிப்புகள் மடரிய மொழிகளை அழிப்பது கவலையை அளிக்கின்றன - 
ஏறத்தாழ 40,000 ஆண்டுகளாக மனித இனம் பேசிக் கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் உலகின் பல்வேறு பாகங்களில் பேசப்பட்டு வருகின்றன. வேடிக்கை என்னவென்றால், ஒருபுறம் உலகின் மக்கள்தொகை
பெருகி வருகிறது. இன்னொருபுறம் அதைவிட வேகமாக பல மொழிகள் வழக்கொழிந்து அருகி வருகின்றன.
கவிஞர் ஜெயபாஸ்கரன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருப்பதுபோல, "சொந்த மக்களால் கைவிடப்படுதல், ஆதிக்க மொழிகளால் கழுத்து நெரிக்கப்படுதல், பயன்படுத்தாமல் ஒதுக்கி வைத்தல், தங்களது தாய்மொழியை மதிப்புக் குறைந்ததாக நினைத்தல் எனும் முதன்மையான நான்கு காரணங்களால்'தான் மொழிகள் மரணமடைகின்றன.
கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல மொழிகள் இப்போது வழக்கொழிந்து விட்டிருக்கின்றன. 1961இல் 1,100 மொழிகள் பேசப்பட்டு வந்த இந்தியாவில்
இப்போது 880 மொழிகள்தான் மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலும்கூடப் பல மொழிகள் சில நூறு பேர்களால் மட்டுமே பேசப்படுகின்றன. இந்த மொழிகள் இன்னும் எத்தனை காலம் உயிர் வாழும் என்பது தெரியாது. ஒரு மொழி பேசப்படாமல், பயன்படுத்தப்படாமல் வழக்கொழிந்துவிட்டால், மறுபடியும் அந்த மொழியை மீட்டெடுத்து மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற பயன்பாட்டு மொழியாக்குவது என்பது இயலாத ஒன்று. சமஸ்கிருதமும், லத்தீனும் நம் கண் முன்னே கண்ட உதாரணங்கள்.
புலம் பெயர்தல், இனக் கலப்பு, தங்கள் மொழி பற்றிய தாழ்வு மனப்பான்மை, ஆங்கிலவழிக் கல்வியின் அதிகரித்த வரவேற்பு, வேலைவாய்ப்புக்குத் தாய்மொழி பயனற்றதாக மாறுவது போன்றவைதான், பல மொழிகள் இந்தியாவில் அதிவேகமாக அருகிப் போவதற்கு முக்கியமான காரணங்கள். கல்வி, தகவல் தொடர்பு, கலாசாரம் போன்றவற்றில் தேசிய, சர்வதேசத் தாக்கங்கள் பல மொழிகளைப் பலிகொண்டு விடுகின்றன.
உயர் கல்வி மொழி ஆங்கிலமாக இருப்பதிலும் அலுவலகப் பயன்பாட்டுக்கு ஆங்கிலம், இந்தி போன்ற ஏனைய மொழிகள் கையாளப்படுவதிலும் தவறில்லை. ஆனால், வீட்டில், உற்றார் உறவினருடன் பேசிக் குலாவும் பழகு மொழியாகவும், பள்ளிக் கல்வியின் பாடமொழியாகவும் தாய்மொழி இருப்பதுதான் ஒரு மாணவனின் கல்வித் தரத்தையும், மொழி அழிந்துவிடாமல் பாதுகாப்பதையும் உறுதிப்படுத்தும்.
தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து பேசுவதும், தாய்மொழியான தமிழில் பேசுவது அவமானம் என்று கருதுவதும், ஊடகங்கள் மேலதிகமாக அவசியமே இல்லாமல் ஆங்கிலம் பயன்படுத்துவதும் குறைக்கப்பட்டால்தான் தமிழ் காப்பாற்றப்படும். பாடமொழி தமிழாக வேண்டும். தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தரப்பட வேண்டும். ஆங்கிலம் வேண்டாம் என்று கூறவில்லை. தமிழ் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஆங்கிலம் வேண்டாம் என்பதுதான் நமது வேண்டுகோள்.
தமிழில் படித்தால் மதிப்பெண் கிடைக்காது, வேலை கிடைக்காது என்றெல்லாம் சொல்வது, தாயைப் பாதுகாப்பது கடினமாக இருக்கிறது என்று முதியோர் காப்பகத்தில் கொண்டுபோய் விடுவது போன்றது. சிங்கப்பூரில் சீனம் அகற்றப்பட்டு ஆங்கிலம் பாடமொழியாக்கப்பட இருந்தபோது, சிங்கப்பூர் வாழ் சீனப்பெற்றோர்கள் அதை எதிர்த்துத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கினர். எங்கள் கலாசாரத்தின் அடிப்படையான சீன மொழி தெரியாதவர்களாக எங்கள் குழந்தைகள் வளர்வதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆண்டுதோறும், தமிழ், சீன, மலாய்ப் புத்தாண்டு தினங்கள் வரும் மாதங்களை "தாய்மொழி மாதம்' என்று சிங்கப்பூர் அரசு கொண்டாடுகிறது. தாய்மொழியில் பேசுங்கள், எழுதுங்கள் என்று வலியுறுத்தும் விளம்பரப் பலகைகள் பரவலாக வைக்கப்படுகின்றன. தாய்மொழி வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் நடத்துவதற்கான செலவுகளையும் அரசாங்கமே ஏற்கிறது.
இங்கே இந்தியாவின் நிலைமை நேர்எதிராக இருக்கிறது. தமிழகத்தில்தான் என்றில்லை, இந்தியாவில் எல்லா மொழிகளும் இதே ஆபத்தை எதிர்கொள்கின்றன. தாக்கம் வேண்டுமானால் சற்று மாறுமே தவிர, ஆபத்து என்னவோ ஒன்றுபோலதான். முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் தமிழிலேயே பேச வேண்டும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் மட்டுமே பேச வேண்டும், "டாடி', "மம்மி' கலாசாரத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று சூளுரைத்துச் செயல்படாவிட்டால், "மெல்லத் தமிழினிச் சாகும்' என்கிற கூற்று மெய்யாகிவிடக் கூடும். அப்படியோர் அவலம் ஏற்படாமல் இருக்க தமிழால் இணைவோம்... தமிழுக்காக இணைவோம்..!

ad

ad