22 ஜூன், 2014


கரகாட்டக் கலைஞர் மோகனா வழக்கு திசை மாறுகிறது : பெரும் புள்ளிகளும் சிக்குகிறார்கள்வேலூர் கரகாட்டக் கலைஞர் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி, 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதில், முக்கிய அரசியல் பிரமுகர்களும் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.
செம்மரக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார், 17 கிலோ செம்மரக் கட்டைகளை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.
வேலூர், கஸ்பாவை சேர்ந்தவர் கரகாட்டக் கலைஞர் மோகனா (எ) மோகனாம்பாள் (55). இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் சிலருடன் சேர்ந்து செம்மரக் கடத்தல், கந்து வட்டி வசூலிப்பு உள்ளிட்ட சில சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன.
ரூ.4.04 கோடி பறிமுதல்: இதையடுத்து, காட்பாடி தாராபடவேட்டில் மோகனா தங்கியிருந்த வீட்டில் அண்மையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். இதில் மோகனாவின் வீட்டில் இருந்து ரூ.4.04 கோடி ரொக்கம், 73 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை எப்படி வந்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
ஒருவர் கைது, மூவர் சரண்: இவ் வழக்குத் தொடர்பாக அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளர் பாபுவை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த மோகனா, அவரது அக்கா நிர்மலா ஆகியோர் வேலூர் நீதிமன்றத்திலும், நிர்மலாவின் மகன் சரவணன் காஞ்சிபுரம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.
போலீஸ் காவலில் மூவர்: இவர்களில் மோகனா, நிர்மலா ஆகியோரை காவலில் எடுத்து விசாரித்த போலீஸாருக்கு சில முக்கிய ஆதாரங்கள் கிடைத்தன. இதையடுத்து, மோகனா வைத்திருந்த பத்திரங்கள் சிலவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த திமுக ஒன்றியச் செயலாளர் பாபுவை 48 மணி நேரம் போலீஸ் காவலில் எடுத்து விருதம்பட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கீழ்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி (30)என்பவருக்குத் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில், பாபு கொடுத்த தகவலின்பேரில் வேலூர் ஓட்டேரி பகுதியில் பாலாஜி என்பவர் கட்டி வரும் புதிய வீட்டில் போலீஸார் வெள்ளிக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வீட்டில் இருந்த 12 கிலோ, 5 கிலோ எடை கொண்ட இரு செம்மரக் கட்டைகளும், செம்மரக் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் அரசு நிர்ணயித்த விலை ரூ.7,500.
இதுநாள் வரை செம்மரக் கடத்தல் கும்பலுக்கும், மோகனாவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டு வந்ததே தவிர, அது உறுதி செய்யப்படவில்லை. வெள்ளிக்கிழமை செம்மரக் கட்டைகள், கார் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு செம்மரக் கடத்தலில் இதுவரை சரணடைந்தவர்களுக்கும், கைது செய்யப்பட்ட பாபுவுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முக்கியப் பிரமுகர்களும் சிக்குகின்றனர்: இதற்கிடையே, போலீஸ் காவல் முடிந்ததால் திமுக ஒன்றியச் செயலாளர் பாபு காட்பாடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) மாலை ஆஜர்படுத்தப் பட்டார். இவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி சுஜாதா உத்தரவிட்டார். இதையடுத்து அவர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பாபுவிடம் விசாரித்தபோது செம்மரக் கடத்தல் வழக்கில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய அரசியல் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாம்.
எனவே, மோகனா வீட்டில் ரூ.4.04 கோடி, 73 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இவ் வழக்கில் சங்கிலித் தொடர் போல நிறைய பேருக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பாலாஜி உள்பட முக்கிய அரசியல் பிரமுகர்கள் சிலர் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.