புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஜூன், 2014


விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது

ஜெனீவா பேரவையில் இலங்கை உத்தியோகபூர்வ அறிவிப்பு
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் பேரவையின் 25/1 பிரேரணையை முற்றாக மறுப்பதாக மீண்டும் வலியுறுத்திக் கூறியிருக்கும் இலங்கை, தமக்கு எதிரான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத்தொடரில் கலந்துகொண்ட ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க இதனை அறிவித்தார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லும் என்றும், இலங்கை மக்களின் நலனை விரும்பும் நாடுகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணையானது பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் அரைப்பங்கிற்கும் குறைவான நாடுகளின் ஆதரவுடனேயே நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணையானது இலங்கையின் இறைமைக்கு சவால் விடுக்கும் வகையிலும், ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடொன்றின் சுதந்திரமான செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என பல நாடுகள் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரேரணையின் தெளிவற்ற தன்மையானது நாட்டில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகளை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரும் மனித உரிமைகள் பேரவையும் பக்கச்சார்பாக செயற்படும் நிலையில், விசாரணைகளுக்கான இணைப்பாளர் நியமனம் மீதான நம்பகத்தன்மை தொடர்பிலும் ஏற்கனவே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக ரவிநாத் ஆரியசிங்க குறிப்பிட்டார். பிரேரணையின் 2வது பந்திக்கும் 10வது பந்திக்குமிடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கொள்கை மீறும் வகையில் காணப்படுகிறது. 2வது பந்திக்கு அமைய தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருப்பதால் 10வது பந்தியில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயம் அவசியமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து முன்னெ டுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் பின்னர் முன்னெ டுக்கப்பட்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் எல்.ரி.ரி.ஈ ஆதரவு அமைப்புக்களால் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கும் செயற்பாடுகளால் நாடு எதிர்கொண்டிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பிலும் அவர் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விளக்கமளித்தார்.
ஜெனீவாவில் ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் மனீஷா குணசேகர, ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர் சந்தன வீரவன்ச, ஐ.நாவுக்கான வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் பிரியங்கா விக்ரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நேற்று ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 26வது கூட்டத் தொடர் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறுகிறது.

ad

ad