புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014



என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம்! கலைஞர் பதில்!

  1. திமுக தலைவர் கலைஞர் 24.07.2014 வியாழக்கிழமை கட்ஜு என்பவர் நீதிபதியா? அல்லது நீதி பாதியா? என்ற தலைப்பில் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி :- உங்களுடைய சொத்துக் கணக்கைக் காட்டத் தயாரா என்று நீதிபதி மார்க்கெண்டேய கட்ஜு கேட்டிருக்கிறாரே?

கலைஞர் :- என்னுடைய சொத்துக் கணக்கு திறந்த புத்தகம். நான் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் ஒவ்வொரு முறை போட்டியிட்ட போதும், அந்தக் கணக்கு தரப்பட்டு நாளேடுகளிலும் வந்துள்ளது. அந்தக் கணக்கை இந்த நீதிபதி இப்போது கேட்கிறார் என்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு விபரம் தெரிந்தவர் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நான் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவன். சுமார் 70 திரைப்படங்களுக்கு என்னுடைய 25ஆம் வயது முதல் திரைக்கதை, உரையாடல் எழுதியிருக்கிறேன்.எனக்கென்று உள்ள சொத்து கோபாலபுரத்தில் உள்ள தெருவீடுதான். இந்தியாவிலே உள்ள எந்த முதல் அமைச்சரும் இவ்வளவு சிறிய வீட்டில் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டதாகத் தெரியவில்லை. இந்த வீட்டைக் கூட எனக்குப் பிறகு, என் மனைவிக்குப் பிறகு பொதுச் சொத்தாக்க, அறக்கட்டளைக்கு இப்போதே எழுதிக் கொடுத்து விட்டேன். நான் திருப்பிக் கேட்கிறேன். இந்த நீதிபதியின் சொத்துக் கணக்கு என்ன? இவர் புகழ்ந்த முதல் அமைச்சரின் சொத்துக் கணக்கு என்ன? சொத்துக் குவிப்பு வழக்கு என் மீதா நடக்கிறது? அந்தச் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதாவைக் காப்பாற்றத் தானே யாருடைய தூண்டுதலாலோ இவர் தற்போது புதிதாகப் புறப்பட்டிருக்கிறார்! 

அதைத்தான் புதிய தமிழகம் கட்சியின் தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி நேற்றையதினம் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “முதல் அமைச்சர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேச முன்னாள் நீதிபதி கட்ஜுவுக்கு மிகப் பெரிய விலை கொடுக்கப் பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார். 

கேள்வி :- உங்களை ஜாமீனில் விடுவித்தார் என்பதற்காக நீதிபதி ஒருவருக்கு தாங்கள் பல்வேறு உதவிகளைச் செய்ததாக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சொல்லியிருக் கிறாரே?

கலைஞர் :- புகார் கூறியிருக்கிற நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் தொடர்ந்து இருந்தவர். ஓய்வுக்குப் பின் பிரஸ் கவுன்சில் ஆப் இண்டியாவின் தலைமைப் பொறுப்பிலே இருப்பவர்.அவர் என் மீது மறைமுகமாகச் சாட்டியுள்ள குற்றச்சாட்டு, என்னை ஜாமீனில் நீதிபதி அசோக்குமார் விடுவித்தார் என்பதற்காக அவருக்கு நான் பல வகைகளிலும் பரிந்துரை செய்ததாகச் சொல்லியிருக்கிறார். அவரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு நம்முடைய மூத்த கழக வழக்கறிஞர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பி ஆர். சண்முகசுந்தரம் “டைம்ஸ் ஆப் இந்தியா” நாளேட்டில் விரிவாக பதில் எழுதியிருக்கிறார். 

குறிப்பாக நீதிபதி அசோக்குமார் என்னை ஒரு வழக்கில் ஜாமீனில் விடுவித்தார் என்பதே உண்மை யல்ல. 2001ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் ஜெயலலிதா அரசில் நள்ளிரவில் காவல் துறையினர் அத்துமீறி வீடு புகுந்து என்னைத் துன்புறுத்திக் கைது செய்து, அதிகாலை சுமார் 5.30 மணி அளவில் என்னை “ரிமாண்ட்” செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு, நீதிபதி அசோக்குமார் வீட்டிற்கே போலீஸ் வேனில் அழைத்துச் சென்றார்கள். நீதிபதி காவல் துறையினரிடம் “எப்.ஐ.ஆர். நீதிமன்றத்திற்கு முறைப்படி அனுப்பப்பட்டு விட்டதா?” என்று கேட்டபோது காவல் துறையினர் “இல்லை” என்றார்கள். வழக்கு பற்றிய விவரங்களும் அவர்களிடம் இல்லை.இந்த விவரங்கள் இல்லாமல் என்னை “ரிமாண்ட்” செய்யக் கூடாது என்று கழக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதாடினார். ஆனால் அந்த வாதத்தை மறுத்து விட்டு நீதிபதி அசோக்குமார் என்னை “ரிமாண்ட்” செய்தார் என்பதுதான் உண்மை. மேலும் நான் அப்போது ஜாமீனே கோரவில்லை. காரணம், நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்கும் வகையில் நான் சிறையிலேயே இருக்க விரும்பினேன். என்னைக் கைது செய்ததால் ஜெயலலிதா அரசுக்கெதிராகத் தமிழகமே கொந்தளித்ததால், ஒரு சில நாட்களில் அரசாங்கமே என்னைச் சிறையிலிருந்து விடுவித்து விட்டது. அதனால் நான் ஜாமீன் கேட்க வேண்டிய அவசியமே எழவில்லை. ஒரு நீதிபதியாக இருந்தவர் இந்த விவரங்களை எல்லாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் அவசரகதியில் என் மீது மறைமுகமாக எவ்வளவு பெரியகுற்றச்சாட்டினைச் சுமத்தியிருக்கிறார் என்பதை அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க நினைக்கும் சில ஏடுகள் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, கட்ஜுவின் வார்த்தைகளை உண்மையென்று நம்பி “தினமணி” நாளேடு இன்று (24-7-2014) எழுதியுள்ள தலையங்கத்தில் “மு. கருணாநிதியைக் கைது செய்த போது நீதிபதியாக இருந்த அசோக்குமார் அவரைப் பிணையில் விடுவித்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று” என்று எழுதியுள்ளது. அந்தத் தினமணி ஏட்டிற்கும் சொல்லிக் கொள்கிறேன்.அப்போது அசோக்குமார் என்னைப் பிணையிலே விடுவிக்கவில்லை என்பதுதான் உண்மை. 

மேலும் கட்ஜு அவர்கள், பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அவர்களிடம் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ஏதோ பேசியதாகவும் ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்திருப்பது பற்றி தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அவரைப் பேட்டி கண்டவர், “அந்தச் செய்தியை உங்களுக்குத் தெரிவித்தது யார்?” என்று கேட்ட போது, அந்தச் செய்தியைச் சொன்னது யாரென்று மறந்து விட்டதாக நீதிபதி கட்ஜு கூறியிருக்கிறார். ஒரு குற்றச்சாட்டைக் கூறும்போது முழு விவரங்களையும் ஆதாரத்தோடு தெரிவிக்க வேண்டாமா? 

இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.

ad

ad