புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014

இலங்கை மீதான விசாரணையில் பாகிஸ்தான் தலையிட முடியாது - ஐ.நா 
news
இறுதிப் போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான விசாரணையில் பாகிஸ்தான் அரசாங்கம் தன் மீது எவ்வித செல்வாக்கையும் செலுத்த முடியாது என்று ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள மூன்று நிபுணர்களில் ஒருவரான பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்கீர் தெரிவித்துள்ளார்.
 
பாகிஸ்தானைச் சேர்ந்த ஐ.நா விசாரணை நிபுணர் அஸ்மா ஜஹாங்கீர் மீது இந்த விசாரணை விவகாரத்தில் அந்நாட்டு அரசாங்கம் செல்வாக்குச் செலுத்துமா என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது.
 
இக்கேள்விக்குப் பதிலளித்த போதே பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் சட்டவாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கீர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், 'நான் ஒரு நிபுணர் என்ற வகையில் சுதந்திரமானவள். அவ்வாறு தான் நான் எப்போதும் இருக்கிறேன்.
 
இந்த விவகாரம் தொடர்பில் எனது நாட்டு அரசாங்கம் இதுவரை என்னிடம் பேசவில்லை. இவ்விடயத்தில் எந்த அரசாங்கமோ அல்லது நிறுவனமோ என் மீது செல்வாக்குச் செலுத்த முடியாது' என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இந்த விசாரணைக்குழுவுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மூன்று நிபுணர்களை நியமித்திருந்தார். 
 
இதன்படி பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அதிசாரி, நியூசிலாந்தின் முன்னாள் நீதிபதி டேம் சில்வியா கார்ட்ரைட் மற்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் சட்டவாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஸ்மா ஜஹாங்கிர் ஆகிய மூவரும் இந்த விசாரணைக்குழுவின் நிபுணத்துவ ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வில் இப்போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா விசாரணைக்கு பரிந்துரை செய்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை தோற்கடிக்கவும், அதனைத் தடுக்கவும் பாகிஸ்தான் கடும் முயற்சிகளை  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

ad

ad