புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூலை, 2014


ஏழு தமிழர்களின் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது: வைகோ அறிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஏழு தமிழர்கள் விடுதலையை இந்திய மத்திய அரசு எதிர்க்கக் கூடாது
எனவும் தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க வேண்டுமென்றும் வைகோ அறிக்கை கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1991மே 21 இல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு உள்ளான வழக்கில், அந்தக் குற்றத்தில் எள் அளவும் தொடர்பு இல்லாத பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட நான்கு பேருக்கு மரண தண்டனையும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மரண தண்டனையை ரத்து செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட நளினியின் கருணை மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மரண தண்டனை குறைக்கப்பட்டது. மற்ற மூவரின் கருணை மனுக்களையும் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய காங்கிரஸ் அரசு நிராகரித்தது.
ஜனநாயகத்தின் கழுத்தை முறிக்கும் தடா சட்டத்தைப் பயன்படுத்தி, பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று தமிழர்களையும் கொடிய முறையில் சித்திரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்களைக் கொண்டுதான் தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தை நான் மாற்றி பதிவு செய்தேன் என சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன் அவர்களே அண்மையில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
இதன்மூலம், இந்த வழக்கில் நீதி மறுக்கப்பட்டு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
மரண தண்டனையை இரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று தமிழர்கள் தாக்கல் செய்தனர். மரண தண்டனையை நிறுத்தி வைத்து, சென்னை உயர்நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது.
காங்கிரஸ் கட்சி ஏற்பாட்டின் பேரில், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்றத்திலும் வாதாடினார்.
உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளின் அமர்வு மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனையை ரத்து செய்ததோடு, 22 ஆண்டுகள் சிறைக் கொட்டடியில் வாடிய மூவரையும் சிறையில் இருந்து விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 432, 433ஏ ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் மாநில அரசு முடிவு செய்யலாம் எனத் தீர்ப்பு வழங்கியது.
அந்த அடிப்படையில், பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவர் மற்றும் நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு முடிவு எடுத்து மத்திய அரசுக்குத் தெரிவித்தது. காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏழு பேரின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
உலகத்தில் பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. மரணத்தைவிடக் கொடிய நரக வேதனையை, 23 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் இந்த ஏழு பேரும் அனுபவித்து வருகின்றனர்.
எனவே மத்திய அரசு இந்தப் பிரச்சினையை மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். அதற்கு மாறாக, ஏழு பேர் விடுதலையை எதிர்க்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
எனவே, ஏழு பேர் விடுதலைக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, மனிதநேயத்துடன் அவர்களை விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது கருத்தைப் பதிவு செய்ய வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ad

ad