புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 டிச., 2014

18.8.1945 -க்கு பின்நேதாஜி எங்கே இருந்தார்?எப்படி நடத்தப்பட்டார்? 
உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும்!:வைகோ 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை!

“எவரெல்லாம் அம்மாவீரரின் அழைப்பைக் கேட்டனரோ, 
அவரெல்லாம் பயங்கர அபாயங்கட்கும் அஞ்சாத நெஞ்சுடன் பயணித்தனர். 
இப்பூவுலக ஆசைகளைத் துறந்து
இருதயத்தைத் தாக்கும் சித்திரவதைகளை 
விரும்பி அரவணைத்தவர் அவர்.
மரணத்தின் கர்ஜனை அவருக்கு இனிய இசையாகக் கேட்டது”

- என்று கவியரசர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் போற்றப்பட்டவரும், தங்கள் தாயக விடுதலைக்காகப் போராடும் வீரர்கள் எல்லாம் வழிபடும் தலைவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தியத் துணைக்கண்டச் சரித்திர வானத்தின் அழியாச் சுடரொளியாகத் திகழ்கிறார்.

செல்வச் செழிப்பில் பிறந்து, இலண்டனில் உயர்கல்வி கற்று, தாம் பெற்ற ஐ.சி.எஸ். (அன்றைய ஐ.ஏ.எஸ்.) பட்டத்தை, இந்திய விடுதலைக்காகத் தூக்கி எறிந்தார். பர்மா உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் சித்திரவதைகளை அனுபவித்தார். மக்களை ஈர்க்கும் காந்த சக்தியாகத் திகழ்ந்தார். காந்தியாரின் எதிர்ப்பையும் மீறி இந்திய தேசிய காங்கிரசின் அகில இந்தியத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். அதற்குப்பின்னரும், காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி ஜனநாயகம் காந்தியார், வல்லபாய் படேல் ஆகியோரால் சிதைக்கப்பட்டதால், காங்கிரசை விட்டு வெளியேறி, முன்னேறும் அணியாக ஃபார்வர்டு பிளாக் கட்சியைத் தோற்றுவித்தார்.

வங்க மொழியிலும் ஆங்கிலத்திலும் ஈடு இணையற்ற சொல் ஆற்றல் பெற்றவர். தலைசிறந்த எழுத்தாளர். அனைத்தையும் விட ஆயிரமாயிரம் ஆபத்துகள் முற்றுகை இட்டாலும், அவற்றை உடைத்து எறிந்து இலட்சியப் பயணம் நடத்தும் மகத்தான போராளி. பிரிட்டிஷ் அரசு போட்ட வீட்டுக் காவலில் இருந்து ரகசியமாகத் தப்பி, ஆப்கானிஸ்தானத்து காபூல் வழியாக ரஷ்யாவுக்குச் சென்று அங்கிருந்து ஜெர்மனிக்குப் போய்ச் சேர்ந்தார். இந்தியாவின் விடுதலைக்காக, பெர்லினில் இருந்தவாறே படை திரட்டினார். ஆசாத் ரேடியோவில் அவரது கர்ஜனை இந்திய மக்களை வீறு கொள்ளச் செய்தது. நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து அட்லாண்டிக் கடலுக்குள் நுழைந்து பல ஆபத்துகளைக் கடந்து நூல் இழையில் உயிர் தப்பி, இந்தியப் பெருங்கடல் வழியாக  ஜப்பானுக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கே ராஷ் பிகாரி போÞ அமைத்து இருந்த இந்திய தேசிய இராணுவத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 

‘தில்லி சலோ’ என்ற முழக்கத்தோடு இந்திய தேசிய இராணுவத்தை அணிவகுத்து நடத்தினார். சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை நிறுவினார். பிரிட்டன் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு ஈடு கொடுத்து இம்பால் வரை தன் படைகளோடு முன்னேறினார். இயற்கையின் சீற்றத்தாலும், தளவாடங்களும், குண்டுகளும் உணவும் மருந்தும் கிடைக்காததாலும், அமெரிக்கா பிரிட்டன் விமானத் தாக்குதலாலும், நேதாஜியின் படை பின்வாங்க நேர்ந்தது.

1945 இல் ஆகஸ்ட் மாதத்தில் ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியதால் ஜப்பான் சரண் அடைந்தது.   1945 ஆகஸ்ட் 17 ஆம் தேதி பாங்காக்கில் இருந்து வானூர்தியில் புறப்பட்ட நேதாஜி, சைகோன் போய்ச் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு டூரானே ஜப்பானியப் படை முகாமில் தங்கினார். ஆகஸ்ட் 18 ஆம் தேதி அங்கிருந்து புறப்பட்டு தைப்பேயில் உள்ள சுங்சான் வானூர்தி நிலையம் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்து சேலி என்ற சிறிய வானூர்தியில் பிற்பகல் 2.30 மணிக்குப் புறப்பட்டார். சில நிமிடங்களில் அந்த வானூர்தி தீப்பிடித்து நெருப்புக் கோளமாகக் கீழே விழுந்தது. அதன் பின்னர் வந்த செய்திகள் அனைத்துமே மர்மமானவை. 

நேதாஜி சாகவில்லை என்பதற்கு அவரது தனிச்செயலாளர் மேஜர் பாஸ்கரன் பல ஆதாரங்களைத் தந்தார்.  ஜப்பானிய இராணுவத் தளபதிகள் கூறுகையில், ‘நேதாஜியை ஜப்பானியத் தளபதி ஜெனரல் சிதே அழைத்துச் சென்று, மஞ்சூரியாவில் ரஷ்ய எல்லைக்கு அருகில் விட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அவர் தப்பித்தவுடன், நேதாஜி இறந்தார் என்று அறிவித்து விடுவது’ என்று ஜப்பானிய அரசு முடிவு செய்தது என்றனர். 

அதனால்தான், ஆகஸ்ட் 18 ஆம் தேதி நடைபெற்றதாகச் சொல்லப்படும் விபத்தினை, நான்கு நாட்கள் கழித்து நேதாஜி மரணம் என்று ஜப்பான் அறிவித்தது. 

இந்திய நாடாளுமன்றத்தில் மிகச்சிறந்த மேதையான எச்.வி. காமத்,நேதாஜி மரணம் குறித்து விசாரணை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 1956 இல் நேரு அரசு ஷா நவாÞகான் தலைமையில் குழு அமைத்தது. அக்குழு நேதாஜி மறைந்ததாக அறிக்கை தந்தாலும், அக்குழு உறுப்பினரான சரத் சந்திர போÞ அதனை மறுத்து, நேதாஜி சாகவில்லை என்றே கூறினார். 

1967 க்குப் பின், மேற்கு வங்க நாடாளுமன்ற உறுப்பினர் சமர் குகா, நேதாஜியின் மரணம் குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். 350 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தந்தனர். 1970 ஜூலை 11 இல், பஞ்சாப் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோÞலா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை இந்திரா காந்தி அமைத்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நேதாஜி இறந்ததாக அக்குழு அறிவித்தது. 

ஆனால், பீகார் மாநிலத் தலைவர் சத்யேந்திர நாராயணன் சின்கா நேதாஜி குறித்த உண்மைகளை அறியப் பல ஆண்டுகள் போராடி, நேதாஜி பயணித்த விமானம் டைரன் என்ற நகருக்குப் பத்திரமாகப் போய்ச் சேர்ந்தது என்பதற்கான ஆதாரங்களைத் தெரிவித்தார். 

1991 இல் சோவியத் யூனியன் உடைந்தபிறகு, கொல்கத்தாவில் உள்ள ஆசியக் கழகம், மாÞகோ சென்று, பல மாதங்கள் தங்கி, 30 ஆண்டுக்கால ஆவணங்களை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், ‘மாஸ்கோவில் உள்ள ரஷ்ய உளவுத்துறையின் தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கின்ற இரண்டு கோப்புகளில் நேதாஜி பற்றிய உண்மைகள் அடங்கி இருக்கின்றன; 1945, 47 ஆம் ஆண்டுகளில் இருந்த சில ரஷ்ய ராஜதந்திரிகள் இந்த உண்மையைக் கூறி உள்ளனர்’ என்று அறிக்கை தந்தது. 

இந்தப் பின்னணியில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, நேதாஜியைப்  பற்றிய அனைத்து ஆவணங்களையும் வெளியிட மறுத்தது. 

இன்றைய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி, நேதாஜி பிறந்த ஒடிஷா மாநிலத்தின் கட்டக் நகரில் நடைபெற்ற நேதாஜியின் 117 ஆவது பிறந்த நாள் விழாவில் உரை ஆற்றியபோது, நேதாஜி மறைவு குறித்த உண்மைகளை அறிந்து கொள்ள, இந்தியாவின் அனைத்து மக்களும் பொறுமையின் எல்லைக்கே சென்று கவலைப்படுகின்றனர். எனவே, உண்மைகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று கூறினார்.

நரேந்திர மோடி அரசு அமைந்தபின், தகவல் அறியும் சட்டத்தின்படி முக்கியத் தகவல்களைச் சேகரிக்கும் சுபாஷ் அகர்வால் என்பவர், நேதாஜி மறைவு பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கக் கோரி பிரதமருக்கு முறைப்படி விண்ணப்பம் அனுப்பினார். 

ஆனால், நேதாஜி குறித்து 41 ஆவணங்கள் இருப்பதாகவும், அதில் முக்கியமான இரண்டு ஆவணங்கள் ரகசியங்கள் நிரம்பியவை என்றும், அவற்றை வெளியிட முடியாது என்றும், அந்த ரகசியத்தகவல்கள் வெளியே வந்தால் சில வெளிநாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவுகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் அறிவித்து உள்ளது. 

மாபெரும் தலைவன் நேதாஜிக்காக இலட்சக்கணக்கானவர்கள் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழர்கள் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து உதிரம் சிந்தினார்கள், உயிர்களைத் தந்தார்கள். 

இந்தியாவின் கோடானுகோடி மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தி விட்டு, வெளிநாடுகள் உறவைத் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாட மத்திய அரசு முனையும் போக்கு கண்டனத்திற்குரியதாகும். 

1945 ஆகஸ்ட் 18 க்குப் பின் நேதாஜி எங்கே இருந்தார்? எப்படி நடத்தப்பட்டார்? என்பதை அறிந்து கொள்ள மேற்கு வங்க மக்கள் மட்டும் அல்ல, பிற மாநிலங்களில் வாழும் மக்கள் மட்டும் அல்ல, அனைவரையும்விடத் தமிழக மக்கள் துடிக்கிறார்கள். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நேதாஜியின் படம் இல்லாத வீடே கிடையாது. எனவே, எங்கள் நெஞ்சில் நிறைந்த நேதாஜி குறித்த அனைத்து உண்மைகளையும் மத்திய அரசு பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். 

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, இத்தகைய உணர்வு கொண்ட அனைவரையும் இணைத்துக் கொண்டு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அறப்போர் நடத்தும்

ad

ad