புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2014

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

சென்னை/அரியலூர்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்ததுள்ள நிலையில், கோரிக்கைகள்
நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் எம்எல்ஏ அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 22 கோரிக்கைகளை முன் வைத்து டிசம்பர் 29 ஆம் தேதி (இன்று) முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தொமுச, ஏஐடியுசி, சிஐடியூ உள்ளிட்ட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்தன. இதையடுத்து, போக்குவரத்து தொழிற்சங்கங்களிடம், தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

ஆனால், திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்னதாக, நேற்று அதிகாலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்வதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் மாவட்ட ஆட்சியர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
 
 
பயணிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் 80 சதவிகிதப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. படிப்படியாக முழுமையான போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

மக்களை பாதிக்கும் வகையிலும், போக்குவரத்து இடையூறு ஏற்படும் வகையிலும் நடப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

ராசிபுரம்
ராசிபுரம் பகுதியில் அரசு பேருந்துகள் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் சில இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன.

திருவள்ளூர்


திருவள்ளூர் மாவட்டத்தில் பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. காலை நிலவரப்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 133 பேருந்துகளும், மாநகரப் பேருந்துகள் 214ம் இயக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் திருவள்ளூர் பணிமனையில் மாவட்ட ஆட்சியர் இன்று காலை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஊத்துக்கோட்டை, பொன்னேரி பணிமனைகளில் அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்துகளை இயக்குவதற்கு தடை செய்தாலோ, வன்முறையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
 
அரியலூரில் மிரட்டல்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்றிரவே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் பணிமனையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பணிமனைக்குள் அத்துமீறி நுழைந்த 50க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்களை உடனே பணிக்கு செல்லுமாறும், இல்லையென்றால் அடித்து விரட்டுவோம் என்றும் மிரட்டியுள்ளனர்.

அப்போது பணிமனையில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள், பணிமனைக்குள் இருந்த அ.தி.மு.க நிர்வாகிகளை வெளியேற சொல்லாமல் போக்குவரத்து தொழிலாளர்களை வெளியில் செல்ல வேண்டும் இல்லையென்றால் கைது செய்வோம் என  மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள்," சட்டத்திற்கு உட்பட்டு எது செய்தாலும் செய்யுங்கள், நாங்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்வோம்" என்று கூறினர்.

இந்நிலையில் அரசு பேருந்துகளில் அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் பேருந்துகள் ஓடும் என்றும், மற்ற தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பேருந்துகள் ஓடாது என்றும் பேருந்துகளில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அதிமுகவினரை வைத்து பேருந்துகளை இயக்க, நிர்வாகிகள் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கடலூரில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கைது

அமைச்சரின் மிரட்டலை தொடர்ந்து கடலூரில் பேருந்துகளை இயக்க மறுத்து சிஐடியு, தொமுச, சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
போராட்டம் தொடரும் என அறிவிப்பு
இதனிடையே சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தொழிற்சங்க தலைவர் சவுந்தரராசன் எம்எல்ஏ, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டும் என்றும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தார்.

ad

ad