புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2014

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரத்தில் டக்ளஸ் 
வடக்கு மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  கைப்பற்றி ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அவர்களால் அபிவிருத்திகளையோ மக்களது வாழ்வாதாரத்தையோ மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா சாடியுள்ளார்.
 
தென்மராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
மக்கள் சரியானதும், தெளிவானதுமான அரசியல் நிலைப்பாட்டை முன்னெடுக்கும் பட்சத்திலேயே எதிர்காலத்தில் வளமான வாழ்வை பெற்றுக் கொள்வதுடன் வாழ்வாதாரத்தில் மேம்பாட்டையும் காண முடியும்.
 
இவ்வாறு சரியான நிலைப்பாட்டை எடுக்காதமையால்  கடந்த காலங்களில் தவறான அரசியல் வழிநடத்தல்களினால் பாரிய அவலங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டிருந்தது.
 
1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே எமது மக்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும். ஆனால், அதைவிரும்பாத சுயலாப அரசியல்வாதிகள் மீண்டும் மக்களை அவலத்திற்குள் தள்ளி முள்ளிவாய்க்கால் அவலம் வரையில் இட்டுச் சென்றனர்.
 
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தலில் வெற்றிபெற்று வடக்கு மாகாண சபையை கைப்பற்றி ஒருவருடம் கடந்துள்ள போதிலும் அவர்களால் எந்தவிதமான அபிவிருத்திகளையோ மக்களது வாழ்வாதாரத்தையோ மேம்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.
 
இருந்த போதிலும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் ஊடாக தமது சுகபோக வாழ்வை அனுபவித்து வருகின்றனர்.
 
அதுமட்டுமன்றி அவர்களுக்கு மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான அக்கறையுமில்லை.
 
உலக வரலாற்றில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஜெர்மன், ஜப்பான் ஆகிய நாடுகள் மீது அமெரிக்க குண்டுத் தாக்குதல்களை நடத்தி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி இருந்த போதிலும், காலமாற்றத்தில் குறித்த இரண்டு நாடுகளிலும் ஆட்சிக்கு வந்த தலைமைகள் அமெரிக்காவுடன் கைகோர்த்ததன் பிரகாரமே இரண்டு நாடுகளும் அபிவிருத்தியில் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளன.
 
இதேபோன்று எமது மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவரையும் வரக்கூடியவருக்கும் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பதுடன் அதன்மூலமே எமது  பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
 
எமது மண்ணில் மக்கள் கையேந்தும் நிலையிலிருந்து மாற்றப்பட வேண்டுமென்பதே முக்கிய இலக்கு. இதற்கு மக்கள் சரியான நிலைப்பாட்டை எடுத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
 
இதனிடையே வடமாகாணத்தில் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக 250 கோடி ரூபா செலவில் எதிர்வரும் ஆண்டு பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
 
அதனூடாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய கரையோர மாவட்டங்களில் 255 கடலோர கிராமசேவையாளர் பிரிவுகளில் கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரத்தையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் குறித்த செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மறைமுகமாக ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு வாக்குத் திரட்டும் செயற்பாட்டினையே மேற்கொண்டு வருகின்றார்.
 
இவ்வாறாக கலந்துரையாடல்கள் வெறும் கலந்துரையாடல்களேயல்ல தேர்தல் பிரச்சாரமாகவே தற்போது பார்க்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ad

ad