புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 டிச., 2014

வட மாகாண அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்த தீர்மானம்?
தமிழ் மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் அமைக்கப்பட்ட வடக்கு மாகாண ஆட்சியின் அமைச்சரவையில் விரைவில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்பட உள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.
இந்திய மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் காரணமாக வடக்கு மாகாண சபைத் தேர்தலை கடந்த வருடம் அரசாங்கம் நடத்தியிருந்தது.
அதில் அரசிற்கு படுதோல்வி ஏற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இதன் பின்னர் தமிழ் மக்களினதும் சர்வதேச நாடுகளினதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த ஒருவருடத்திற்கு மேலாகவும் மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி செய்து வருகிறது.
முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் தமைமையிலான இந்த ஆட்சியில்  விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சராக பொ.ஐங்கரநேசன், கல்வி விளையாட்டுத்துறை அமைச்சராக த.குருகுலராஜா, மீன்பிடி வர்த்தக, வாணிப கிராமிய போக்குவரத்து அமைச்சராக சட்டத்தரணி பா.டெனீஸ்வரன், சுகாதார அமைச்சராக ப.சத்தியலிங்கம் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
இதே வேளையில் முதலமைச்சரிடமும் சில அமைச்சுப் பொறுப்புக்களும் இருக்கின்றன.
இந்நிலையிலையே மாகாண அமைச்சுக்களில் சில மாற்றங்கள் ஏற்படப் போவதாகவும் மாகாண சபை வட்டாரங்களில் இருந்து நம்பகரமாகத் தெரிய வருகிறது.
ஆயினும் அமைச்சுக்களிலோ அல்லது அமைச்சுக்களின் துறைகளிலோ என்பது குறித்து உறுதியாகத் தெரியவராத போதும் அமைச்சுக்களின் துறைகளிலேயே இத்தகைய மாற்றங்கள் விரைவில் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இதற்குரிய விசேட கூட்டமொன்றும் சில தினங்களில் நடைபெறவுள்ளதாகவும் அதன் பின்னரே இது தொடர்பிலான முடிவுகள் அறிவிக்கப்படுமென்றும் இதற்கு மாகாண சபை அமைச்சு மற்றும் உறுப்பினர்களிடம் தற்போது இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இது குறித்து மாகாண ஆளுநருக்கும் அறிவிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதே வேளையில் இந்த மாகாண சபை தொடர்பில் மத்திய அரசாங்கம் பல தடைகளை தொடர்ந்தும் ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பும் மாகாண சபை எதுவுமே செய்யாது தொடர்ந்தும் மத்திய அரசு மீது குற்றம் சுமத்தி வருவதாக அரசாங்கமும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் விரைவில் ஏற்படப்போகும் என எதிர்பார்க்கப்படும் இந்த அமைச்சரவை மாற்றம் அல்லது அமைச்சுத் துறைகளிலான மாற்றங்கள் மாகாண சபைச் செயற்பாடுகளில் ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.