25 ஜன., 2015மாறன் சகோதரர்கள் இதிலிருந்து அத்தனை சுலபமாகத் தப்பித்துவிட முடியாது என்று இவ்வழக்கின் தன்மையை அறிந்தவர்கள்
சொல்கிறார்கள். தயாநிதி மாறனே இந்த வழக்குதான் தனக்கும் தன் அண்ணனுக்கும் பெரும் சிக்கலாக இருக்கும் என்பதை உள்வட்டாரங்களில் அடிக்கடி சொல்லியிருக்கிறார். பெரிதாகப் பேசப்படும் ஏர்செல்-மேக்ஸிஸ் கேஸ்கூட பாதிக்காது. இந்த எக்ஸ்சேஞ்ஜ் விவகாரம்தான் சிக்கலை உண்டாக்கிவிடும் என்று தயாநிதி மாறன்  தனக்கு நெருக்கமானவர்களிடம் பயத்துடனும் பதற்றத்துடனும் சொல்லிவந்தது இப்போது நிஜமாகியிருக்கிறது.

தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது அவரது சென்னை போட்கிளப் இல்லத்தில் 323 டெலிபோன் இணைப்புகள் கொண்ட தனி மினி எக்ஸ்சேஞ்ஜ் அமைக்கப்பட்டது. அந்த இணைப்புகளைப் பயன்படுத்தி, சன் டி.வி. அலுவலகத்திற்குத் தரைவழியாகக் கேபிள் பதித்து, அதன் மூலமாக டி.வி. நிகழ்ச்சிகளை ஒளி பரப்புவதற்கான அப்லிங்க்கிற்குப் பயன்படுத்திக் கொண்டதன் மூலம் அரசுக்கு 440 கோடி ரூபாய் இழப்பு என்பதுதான் மாறன் சகோதரர்களான கலாநிதி- தயாநிதி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு.

இந்த வழக்கிலிருந்து விடுபடுவோம் என நம்பிக்கையுடன் இருந்தார்கள் எந்த பலனும் கிடைக்கவில்லை. மத்தியில் ஆட்சி மாறியதும் விசாரணை மேலும் தீவிரமடைந்தது. அதன் முதல் விளைவுதான், தயாநிதி மாறனின் தனிச்செயலாளர்  மற்றும் சன் டி.வி. நிர்வாகத்தைச் சேர்ந்த இருவர் என மூவர் மீதான கைது நடவடிக்கை. கடந்த சில வாரங்களாகவே சி.பி.ஐ தனது விசாரணையை வேகப்படுத்தி, இதில் சம்பந்தப் பட்டவர்கள் குறித்து பலரிடமும் விசாரித்து வந்தது. மத்திய அமைச்சராக தயாநிதி பதவி வகித்த (2004-2007, 2009-2011) காலகட்டத்தில் அனைத்து வகை அதிகாரங்களுடனும் வளையவந்த கௌதமன்தான் அதிகாரிகளிடம்  அமைச்சரின் வாய்ஸாகப் பேசிவந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்ததால் பொறி வைத்ததாம் சி.பி.ஐ.