புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2015

சிறுமி நரபலியா? திருச்சியில் பரபரப்பு



திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வடக்கு மலை அய்யனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் லாரி டிரைவர். இவரது மனைவி அமராவதி. இவர்களுக்கு ராகவி (வயது 7) இன்பரசி (4) என 2 மகள்கள் உள்ளனர். முனியப்பன் சொந்த ஊரான தர்மபுரியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் துவாக்குடிக்கு குடிவந்தார்.

இந்நிலையில் முனியப்பனின் 4 வயது மகள் இன்பரசி கடந்த 30–ந்தேதி திடீரென மாயமானாள். இது குறித்து பெற்றோர் துவாக்குடி போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் 2 நாட்களாக தேடினர். ஆனால் இன்பரசி கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை இன்பரசி உடல் அங்குள்ள குவாரி குட்டையில் பிணமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார். சப்-இன்ஸ்பெக்டர் மங்கை மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் சிறுமி இன்பரசி நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் இதற்கும் அப்பகுதியில் குறி சொல்லி வரும் சாமியார் தனத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறினர்.

பெண் சாமியார் தனம் குறி சொல்வது போல் பொது மக்களிடம் பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சில சமயம் தனது குறி பலித்து பொதுமக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சில அதிரடி நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளார். ஒருமுறை அதே பகுதியை சேர்ந்த 3 குழந்தைகளை கடத்தி திருச்சி அருகே மறைத்து வைத்து விட்டு பொதுமக்களிடம் குறி சொல்வது போல் இந்த குழந்தைகள் குறிப்பிட்ட இடத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறி அவர்களை மீட்கவும் உதவுவது போல் நடித்துள்ளார்.

அதே போல இன்பரசியையும் தனம் கடத்தியிருக்கலாம். பணம் கிடைக்காத ஆத்திரத்தில் இன்பரசியை கொலை செய்து குவாரி குட்டையில் வீசியிருக்கலாம் அல்லது மர்மநபர்களுடன் சேர்ந்து இன்பரசியை நரபலி கொடுத்திருக்கலாம் என்றும் பொதுமக்கள் சந்தேகம் எழுப்பினர்.

ஆனால் சாமியார் தனம் தனக்கும், இன்பரசி சாவிற்கும் தொடர்பு இல்லை என கூறினார். குவாரி குட்டை இருந்த இடம் இன்பரசி வசித்த வீட்டிற்கு 50 அடி தூரத்தில் உள்ளது. 100 அடி ஆழத்தில் உள்ள இந்த குவாரியில் ஏற்கனவே சிலர் தவறி விழுந்து இறந்துள்ளனர். எனவே பெற்றோர் இல்லாத நேரத்தில் விளையாடிய இன்பரசி குவாரி குட்டையில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இன்பரசி சாவில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க அவரது உடல் உள் உறுப்புகள் விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உள் உறுப்புகள் எடுக்கப்பட்ட பிறகு பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் இன்பரசியின் உடல் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது.

இந்த விஸ்ரா பரிசோதனை முடிவு சில நாட்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன் பிறகு இன்பரசி சாவில் உள்ள மர்மம் விலகும்.

ad

ad