திருகோணமலையில் உள்ள "கோத்தா' முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற நிலையில் 700 க்கும் மேற்பட்டோர்
தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த கோத்தா முகாம் தொடர்பில் உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றச்செயலுக்குப் பலியாக்கப்பட்டோர், சாட்சிகளுக்கான உதவி மற்றும் பாதுகாப்பு தொடர்பான சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில் ; தமிழர்கள் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்களில் பலர் நாட்டின் பல்வ÷று பகுதிகளிலுள்ள இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவே எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. திருகோணமலையிலுள்ள கோத்தா தடுப்பு முகாமில் வெளியுலகத் தொடர்புகள் அற்ற வகையில் 700 க்கும் மேற்பட்டோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த கோத்தா தடுப்பு முகாம் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது. எனவே இந்த கோத்தா முகாம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ஜோன் அமரதுங்க உடனடிக் கவனம் எடுத்து அந்த முகாம் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டும். அங்கு அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 700 க்கும் மேற்பட்டோர் யார் என்பது தொடர்பில் பகிரங்கப்படுத்த வேண்டும். இதேபோல் திருகோணமலையிலுள்ள கடற்படைத் தளத்திலும் வெளியுலகத் தொடர்புகள் இல்லாத வகையில் 35 குடும்பங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சில குடும்பங்கள் பின்னர் விடுக்கப்பட்டுள்ளன. எனவே இக் குடும்பங்கள் தொடர்பான விபரங்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இந்தப் புதிய அரசு உருவாக தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு செய்துள்ளனரென்ற வகையிலும் இலங்கையில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுகின்றோமென நீங்கள் கூறுவது உண்மையானால் மேற்குறிப்பிட்டவற்றுக்கான விசாரணையை உடனடியாக ஆரம்பித்து தமிழ் மக்களுக்கு பதில் வழங்குமாறு கோருகின்றேன் என்றார்