இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை தேவையில்லை .உள்ளக விசாரணையே ந
டத்தப்படும் என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு உறுதியாகவுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மாநாடு நேற்று இடம்பெற்றது.
அதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சர்வதேச விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது ஆறு மாதகாலத்திற்குப் பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐ.நா. விசாரணைக்குழு இலங்கைக்கு வர அரசு உடன்பட்டுள்ளதா என அமைச்சரவைப் பேச்சாளரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்குப்பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆரம்பத்திலிருந்தே நாம் உள்ளக விசாரணையை நடத்துவதற்கு நாம் உறுதியளித்திருந்தோம். எமது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இதனையே நாம் குறிப்பிட்டிருந்தோம்.
எமது விடயத்தில் சர்வதேச விசாரணையை நாம் ஏற்கப்போவதில்லை. இதே நிலைப்பாட்டையே இந்தியாவும் எடுத்துள்ளது. இந்தியாவும் எம்முடன் இருக்கும் என்பது எமக்குத் தெரியும்.
நாம் இதே நிலைப்பாட்டையே தற்போது பேணுகின்றோம். எமது வெளிவிவகார அமைச்சர் தெட்டத்தெளிவாக இதனை அமெரிக்காவிடமும் ஐ.நாவிடமும் தெரியப்படுத்தியுள்ளார்.
இறுதியில் அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இது இலங்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். அவர்களும் உள்ளக விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனவே இலங்கையால் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு உள்நாட்டு விசாரணை அறிக்கையை செய்யமுடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை சமர்பிக்கப்படுவதை ஆறு மாத காலத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
அந்தவகையில் சர்வதேச தராதரத்திற்கு அமைவாக அதனைச் செய்யவேண்டியது எமது கடமையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.