புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2015

எமது போராட்டத்தில் மாற்றமில்லை ; பல்கலை ஆசிரியர் சங்கம்


ஐ.நா சபையில் இலங்கையில்  இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான அறிக்கை பிற்போடப்பட்டமைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட
கவனயீர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி  இடம்பெறும் என யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டம் தொடர்பில்  பொது அமமைப்புகளுக்கும்  ஆசிரியர் சங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல்  இன்று யாழ். பல்கலைக்கழகத்தின் நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கத் தலைவர் ஆ. இராசகுமாரன்  இதனைத் தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா மனித உரிமைப் பேரவையின்  மார்ச் மாத கூட்டத் தொடரில்  வெளியிடப்பட இருந்த இனப்படுகொலை தொடர்பிலான  அறிக்கை மேலும்  6மாதங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளமை எமக்கு கவலை அளிக்கின்றது .

எமது போராட்டங்கள் ஆயுதப்போராட்டமாக இருக்கலாம் அரசியலாக இருக்கலாம் இன்னும் முழுமையாக மக்கள் மயப்படுத்தப்படவில்லை. மக்கள்  மயப்படுத்தினால் மட்டுமே எங்களால்  வெல்ல முடியும்  .

எனினும்  எங்களுடைய போராட்டங்களை இலங்கை அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாது. எனினும்  எமது இன்றைய போராட்டங்கள்  சர்வதேசத்தை நோக்கியதாகவே இருக்கின்றது. 

உள்ளூரில்  இடம்பெறும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லை . கடந்த கால அரசை பாதுகாக்கவும் , போர்க்குற்றம் இடம்பெற இல்லை என்று தான் இன்றைய அரசு செயற்பட்டு வருவதுடன்  வெளிப்படையாக கூறியும் வருகின்றது.

இந்த நிலையில் நாம் உள்நாட்டு பொறிமுறைகளை நம்பத்தயார்  இல்லை. யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்,  இனப்படுகொலைகளுக்கு சர்வதேசமே எமக்கு நீதி கிடைக்க வழிவகுக்க வேண்டும். நாம் சர்வதேசத்தையே நம்பியுள்ளோம்.

அத்துடன்  அறிக்கை பிற்போட்டமைக்கு நாம் கவலை வெளியிடுவதுடன்  மேலும்  கட்டாயமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் பிற்போடப்பட்ட அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று கோரியும் எதிர்வரும் 24 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

எனவே குறித்த போராட்டம்  திட்டமிட்டபடி  இடம்பெறும். அதன்படி  யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்  இருந்து காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் போராட்டம் , நீதி தேவதையை தாங்கியவாறும், இனப்படுகொலைக்கான புகைப்படங்களை தாங்கியவாறும்  பேரணியாக மிகவும் அமைதியான முறையில் செல்வோம்.

பேரணி கந்தர்மடம் சந்தியை அடைந்து நல்லூர்  ஆலயத்தை சென்றடையும் அதற்குப் பின்னர் எமது மகஜரை அழைக்கப்பட்ட வௌிநாட்டு நிறுவனங்களிடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதில்  பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மாணவர் ஒன்றியம், பொது அமைப்புக்கள் மற்றும்  பல்கலைக்கழக சமூகமும் இணைந்து கொள்ளவுள்ளனர். எனவே தமிழ் அமைப்புக்கள் ,  பொதுமக்கள் என அனைவரையும்  போராட்டத்தில் பங்குகொள்ளுமாறும்  அழைப்பு  விடுக்கின்றேன்.

நாம் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. தமிழ்  மக்களின் விடுதலைக்காகவே செயற்படுபவர்கள்  என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

ad

ad