புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2015

சர்வாதிகார ஆட்சியின்றி நிரந்தர தீர்வுக்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சம்பந்தன்


நிரந்தர அரசியல் தீர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவே தீர்வை வழங்க புதிய அரசு முன்வரவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
கிழக்கு மாகாண ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று முன்தினம் ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
 
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
 
இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் வாக்களித்தமையாலேயே தாங்கள் அரசியல் ரீதியாக முதல் முறையாக பதவியிலிருந்த ஜனாதிபதியை தாங்கள் தோற்கடித்திருக்கின்றீர்கள். இந்தத் தெரிவு உங்களது பலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது எனக் கருதுகின்றேன். 
 
சமீபத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்களது உரையின்போது வடக்கிலும், தெற்கிலும் வாழும் மக்களின் மனங்களை இணைக்கவேண்டும் எனக் குறிப்பிட்டதை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். 
 
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுபீட்சமான நல்லாட்சிக்காகவே எமது கட்சி ஆதரவளித்ததுடன், எமது மக்களும் தங்களது வாக்குகளை உங்களுக்கு அளித்துள்ளார்கள்.
 
நீண்டகாலமாக வடக்கு, கிழக்கு மக்கள், ஆட்சியிலிருந்த அரசுகளால் ஒதுக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். கடந்த காலத்தில் சர்வாதிகாரம் பின்பற்றப்பட்டமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 
 
இந்த நிலைமை மாறவேண்டும். ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்படும் கருமங்கள் சுதந்திரமாகவும், ஜனநாயகத் தன்மையாகவும் அமையவேண்டும்.
 
கடந்த காலங்களில் மேல் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்கப்படவில்லை. சர்வாதிகார முறையினூடாக சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. 
 
மக்கள் ஜனநாயகத்தை இழந்திருந்தார்கள். ஜனநாயகம் என்பது பெறுமதியானது. எல்லோராலும் எல்லா நிலையிலும் மதிக்கப்படவேண்டும். அப்போதுதான் முழுமையான ஆட்சியைப் பெறமுடியும். 
 
ஒருமித்த நாட்டில் ஒரு நிலைத்த - நீடித்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வை வேண்டியே தமிழ் மக்கள் நீண்டகாலத்திற்குப் பின்னர் ஜனநாயகத்திற்குத் தமது பரிபூரண ஆதரவை வழங்கியுள்ளார்கள். அதில் அதிக விசுவாசமுடையவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.
 
 
எனவே புதிய அரசு தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப்பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

ad

ad