பிரான்ஸ் நாட்டின் தஸ்சால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா விரும்பியது. 3
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். அவர் அந்த நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டேயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அவர், பிரான்சிடம் இருந்து இந்தியா நடுத்தரமானதும், பன்முக பயன்பாடு கொண்டதுமான 36 போர் விமானங்களை வாங்குவதாக உறுதி அளித்தார்.
இனி இந்தியா, பிரான்ஸ் அரசுகள் நேரடி பேச்சு நடத்தி 4 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.24 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான 36 ரபேல் விமானங்கள் கொள்முதல் செய்யப்படும் என தகவல்கள் கூறுகின்றன.
மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசுகையில், புதிதாக 36 ராபேல் ஜெட் போர் விமானங்கள் பிரான்சிடமிருந்து வாங்கப்பட இருப்பதால், 126 போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம், ராபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பான எல்லா விஷயங்களும் பிரான்ஸ் அரசாங்கத்துடன் நேரடியாக பேசி தீர்த்து கொள்ளப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
126 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக நேடியாக கருத்து தெரிவிக்காத பாரிக்கர், “ஒரு கார் இரண்டு சாலையில் பயணம் செய்ய முடியாது” என்று தெரிவித்து உள்ளார்.