புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஏப்., 2015

நான் எந்தப் பக்கம் என்று எனக்கே தெரியவில்லை: குழப்பத்தில் பிள்ளையான்


கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா இல்லை, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார். 
மட்டக்களப்பில் உடற்பயிற்சி நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
எங்களால் முடிந்தவரையில் நாங்கள் எங்கள் சமூகத்துக்கு பணியாற்றியுள்ளோம். இந்த கழகத்துக்கு நிதி வழங்கியது தேர்தல் காலம் என்ற காரணத்தினால் அது தொடர்பில் சில தெளிவுகள் இல்லா நிலையிருக்கின்றது. அதனை கணக்காய்வுகள் மூலம் தெளிவை பெற்றுக்கொள்ளலாம். இது தொடர்பில் வெளிவரும் விமர்சனங்கள் தொடர்பில் நாங்கள் அஞ்சத்தேவையில்லை.
வளர்ச்சியடைந்த நாடுகள் சுகாதார துறைக்கு நிதியொதுக்குவதை விட விளையாட்டுத்துறைக்கே அதிக நிதிகளை ஒதுக்கீடு செய்கின்றது. ஆனால் ஆசிய நாடுகள் விளையாட்டுத்துறைக்கு மிக குறைந்தளவிலேயே நிதியை ஒதுக்கீடு செய்கின்றது.
இதுபெரும் குறைபாடாகவே இருக்கின்றது. விளையாட்டுத்துறைக்கான நிதியை அதிகரித்தால் நோயாளிகளின் தொகையினை குறைக்கலாம். அதனைச் செய்வது கடினமான விடயமாக மாறியுள்ளது.
குறிப்பாக இன்று தேசிய மாகாண அமைச்சுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் இன்று நான் ஆளும் கட்சியில் உள்ளேனா, எதிர்க்கட்சியில் உள்ளேனா என்பது கூட எனக்கு விளங்காத விடையமாகவுள்ளது.
தேசிய அரசாங்கம் என்றால் அதில் நானும் ஒரு பிரதிநிதியாகும்.பானையில் இருந்தால்தான் அகப்பையில் வரும்.
கிழக்கு மாகாணசபைக்கு இந்த ஆண்டுக்கான அபிவிருத்தி நிதியென்பது 1600 ரூபாவாகும்.இந்த நிதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முதலமைச்சரும் ஒரு அமைச்சரும் இணைந்து 800 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு 500மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உறுப்பினர்களுக்கான நிதி 100மில்லியன் வீதி அபிவிருத்திகான நிதி 150மில்லியன், மாகாணசபை கட்டிடம் கட்டுவதற்கு 50மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கல்வி அமைச்சின் கீழ் வரும் விளையாட்டுத்துறைக்கு 18மில்லியன் ரூபாவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 45 பிரதேச செயலகங்கள் உள்ளன.இந்த 45 பிரதேச செயலகங்களுக்கும் எவ்வாறு இந்த விளையாட்டு நிதியை பங்கீடுசெய்வது என்பது கவலைக்குரிய விடயமாகவுள்ளது.
ஒரு பத்து மில்லியன் ரூபாவில் ஒரு நிலையத்தினைக்கூட அமைக்க முடியாத கவலையான விடயமே உள்ளது.இவற்றினை அரசியல்வாதிகள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
அரசியல்வாதிகள் முடிந்தவரையில் கழங்களுக்கு உதவவேண்டுமே ஒழிய குற்றங்குறைகள் காண்பதில் மட்டும் கவனத்தினை செலுத்தக்கூடாது.
தற்போதுள்ள அரசியல் சூழலில் அதிகளவு நிதிகளை ஒதுக்கக்கூடிய வாய்ப்பு அதிகளவில் இருக்கின்றது.உண்டியல்களில் சில்லரைக் காசுகளைக் கண்டவர்களுக்கு மில்லியன் என்றால் பயமோ தெரியவில்லை மில்லியன் ஒன்றால் பெரும்தொகையாக தெரிகின்றது.
கட்டுமானம் என்னும் போது பெருமளவான பணம் தேவைப்படும்.மட்டக்களப்பு பொதுநூலகத்தினை முடிப்பதனால் இன்னும் 120மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.
நாங்கள் பட்ட கஸ்டங்கள் போல் அல்லாமல் எமது எதிர்கால சந்ததியை வளர்ப்பதற்கு நாங்கள் பேதங்களை மறந்து,தனிப்பட்ட விமர்சனங்களை தாண்டி அனைவரும் இயங்கி பலமான சமூக கட்டமைப்பினை உருவாக்குவதற்கு சமூகமும் நாமும் இணைந்து பயணிப்போம்.
இந்த கழகம் மனச்சோர்வடையாமல் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து தற்போதுள்ள கூட்டுப்பொறுப்பு போன்ற இயங்குமுறை தொடர்ந்து இயங்கும்போது நாங்கள் வெற்றிபெறமுடியும் எனத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இலங்கை சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் இந்த உடற்பயிற்சி நிலையமானது இல 1 புதிய கல்முனை வீதி,மட்டக்களப்பு (திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில்) எனும் முகவரியில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஆர்.தர்மரெட்னம்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ad

ad