புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஆக., 2015

ஆகஸ்ட் 17: தீர்ப்பு நாள்! ஒளிமயமா... இருள்யுகமா -


வினைவிதைத்தவன் வினையறுப்பான் தினைவிதைத்தவன் தினையறுப்பான் என்ற முதுமொழியின் தெளிவை நாம் பிரயோக ரீதியில் புரிந்துகொள்வதற்கு இன்னும் இருப்பது இருவாரங்கள் மட்டுமே.
நாட்டுக்கு உயிர் ஊட்டுவதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்குவதா? என்ற இருபெரும் சவால்களுக்கு மத்தியில் அவற்றிற்கு தீர்ப்பை வழங்கவுள்ள ஏறக்குறைய 1 கோடி 50 இலட்சம் வாக்காளர்களில் எத்தனை இலட்சம் வாக்காளர்கள் எந்த தீர்மானத்தில் உள்ளனர் என்பதை அறிவதற்கு இந்நாட்டிலுள்ள வாக்களிக்க தகைமை பெற்ற மற்றும் தகைமை பெறாத ஏறக்குறைய 2 கோடி 35 இலட்சம் மக்கள் மாத்திரமல்ல, இலங்கையால் நன்மையடையும், நன்மையடையவுள்ள உலக நாடுகளும் நாட்டுத் தலைவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த எதிர்பார்ப்புக்கான நாள்தான் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதியாகும்.

இற்றைக்கு ஏறக்குறைய 7 மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, இந்நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒரு நாட்டை ஒரு குடும்பம் ஆளக் கூடாது. அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பொறுப்புக்கள் முறையாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். சர்வாதிகாரப் போக்குடன் அடக்குமுறைகள் இடம்பெறக் கூடாது. நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்.

இனவாதமும், இனவாதிகளும் அவர்களின் செயற்பாடுகளும் ஒழிக்கப்பட்டு இலஞ்ச ஊழல், மோசடி, அற்றதொரு நல்லாட்சி ஏற்பட வேண்டும். சகல இனங்களும் சம அந்தஸ்துடனும் கௌரவத்துடனும் ஆட்சியாளர்களினால் நடத்தப்பட வேண்டும். இனங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனூடாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு பிறப்பதுடன் இந்நாட்டில் புதிய ஒளி உதயமாக வேண்டுமென்ற பல இலக்குகளுடன் ஏறக்குறைய 62 இலட்சம் மக்கள் ஒன்றிணைந்து வாக்களித்து இந்நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவை பதவி ஆசனத்தில் அமரச் செய்தனர்.

அந்த இலக்குகளுடன் நல்லாட்சிக்காக வாக்களித்த மக்களும் ஆட்சியைப் பறிகொடுத்த முன்னாள் ஆட்சியாளருக்கு வாக்களித்த மக்களும் அவர்களது வேட்பாளர்களும் தமது நோக்கங்களை இந்த தேர்தலினூடாக அடைந்து கொள்வதற்கு மீண்டும் பல்வேறு பிரயத்தனங்களை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டு வருகின்றனர் என்பதை இந்நாட்டு மக்கள் நாளாந்தம் அறிந்த வண்ணம் உள்ளனர்.

இப்பாராளுமன்றத்தின் 225 ஆசனங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பிலும் சுயேச்சையாகவும் 6,151 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதிலும் ஆகக் கூடிய சுயேச்சை வேட்பாளர்கள் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கியுள்ளனர் அல்லது களமிறக்கப்பட்டுள்ளனர். 225 ஆசனங்களில் தத்தமது பக்கம் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தல்விஞ்ஞாபனங்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டுள்ளன.

தத்தமது நிலைப்பாட்டையும் எதிர்காலச் செயற்றிட்டங்களையும் தேர்தல் விஞ்ஞாபனங்களினூடாக மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளபோதிலும், மக்களை நம்ப வைக்கும் அல்லது ஏமாற்றும் வகையிலான பல வாக்குறுதிகள் இந்த தேர்தல் விஞ்ஞாபனங்கள் மற்றும் கொள்கைப் பிரகடனங்களில் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

பிரதான கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளியிடப்பட்டு அதில் கொள்கைகளும் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் இரு வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தல் நாட்கள் மிகவும் சூடேற்றப்பட்ட நாட்களாக அமையுமென நம்பப்படுகிறது.

இதுவரை 800க்கு மேற்பட்ட தேர்தல் முறைகேடுகள் தொடர்பான சம்பவங்களும் சில இடங்களிலே வன்முறைச் சம்பவங்களும் உயிர் இழப்புக்களும் இடம்பெற்றுள்ளன.

தத்தமது வெற்றிக்காகவும் கட்சியின் வெற்றிக்காகவும் வாக்காளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக கோடிக்கணக்கான பணம் தேர்தலுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது.

நாட்டை உயிரூட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதா? அல்லது புதிய தேசத்தை உருவாக்க ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களிப்பதா? என்ற தீர்மானத்திற்காக எதிர்வரும் 17ஆம் திகதியை வாக்காளர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஏறக்குறைய ஒரு கோடி ஐம்பது இலட்சம் வாக்காளர்களின் தீர்ப்பு இந்நாட்டில் ஒளிமயமான எதிர்கால யுகம் மலரப் போகிறதா? அல்லது இன்னலுற்ற இருண்ட யுகம் உருவாகப் போகிறதா என்பதைத் தீர்மானிக்கும்.

சலுகைகளுக்கும் பொய்யான வாக்குறுதிகளுக்கும் மயங்காத வாக்காளர்கள் இந் நாட்டின் எதிர்காலம் சுபீட்சம் நிறைந்ததாக அமைய வேண்டும் என்பதற்காக வாக்களிப்பர் என்ற நம்பிக்கை நாட்டை நேசிக்கும் மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

நாடு ஒளிமயத்தினுள் நுழையுமா? அல்லது இருள் மயத்தினுள் நுழையப்போகிறதா? என்பதை ஆகஸ்ட் 17ஆம் திகதி தீர்மானிக்கும்.


- ராஜ்கான் -

ad

ad