புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2015

விடியாத தேசத்தின் விடுதலைக்கான குரலுக்கு வாக்களிப்போம்! பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்


தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து, கொள்கைப் பற்றுறுதி மிக்க சி.சிறீதரனுக்கு விருப்பு வாக்கில் முன்னுரிமை வழங்கி ஆதரவு வழங்குமாறு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
நடைபெற இருக்கின்ற பொதுத் தேர்தல் தொடர்பாக ஈழத்தமிழினத்தின் பணி எவ்வாறு இருக்கமுடியும் என்பதனை நாங்கள் புலமைசார் பெரியவர்களுடன் கலந்துரையாடி, யதார்த்தத்தின் அடிப்படையில் தமிழர்களின் பலம் குன்றிவிடாதவகையில் செயற்படுவதென எங்களுடைய ஒன்றியம் எடுத்த முடிவை வெளிப்படுத்துவது காலத்தின் பணி என கருதுகின்றோம்.
தமிழர்களது சுதந்திரப் போராட்ட வரலாறு நீண்டதும் நெடியதுமாகும். சுதந்திர வாழ்விற்காக எமது இனம் அறவழியிலும் ஆயுதப் பாதையிலும் சுமந்த வலிகளும் துயரங்களும் கொடூரமானவை.
அதற்காக நாம் புரிந்த தியாகங்கள் ஒப்பற்றவை. தேசிய வாழ்விற்காகவும் சுயநிர்ணய மீட்புக்காகவும் எமது இனத்தவர்கள் புரிந்த தியாகங்களை அதற்கான அர்ப்பணிப்புக்களை கணப்பொழுதில் சிதைத்தழித்து விடமுடியாது.
குறிப்பாகச் சமகாலத்தில் அணுகப்பட்டுவரும் உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் பொறிமுறைகளை பலவீனமாக்க முயற்சிப்பது பாரிய வரலாற்றுத் தவறாகும்.
இன்று எம்மிடமுள்ள பலம் ஒற்றுமையே என்பதை உணர்ந்துகொள்வது சமூகத்தின் பொறுப்புவாய்ந்த நிலைப்பாடாக அமையும் என்பது எமது எண்ணம்.
எனவே பொருந்தி வந்திருக்கும் அரசியல் சூழமைவுக்கு அமைய தமிழ் மக்களின் தலைமைத்துவ சக்தியை ஒன்றுதிரண்டு பலப்படுத்தி குறைகளைக் களைந்து அதனைப் புடமிடவேண்டியது அறிவுசார் சமூகத்தின் கடமையாகும்.
அத்தகைய கடமையை தமிழ் மக்களின் அறிவுப் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் பல்கலைக்கழகங்களும், பல்கலைக்கழக மாணவர்களும் காலமறிந்து கடமை ஆற்றுவது வரலாற்றுப் பணியாகும்.
சகோதர சகோதரிகளே! தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தி சிதையாத வண்ணம் எமது தலைமைத்துவச் சக்தியாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலவீனப்படாத வகையில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து உங்கள் வரலாற்றுக் கடனைத் தீருங்கள் என அழைப்பு விடுக்கின்றோம். 
விசேடமாக அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்குமான மாவட்ட மாணவர் ஒன்றியம் என்ற வகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் இலக்கம்- 10 இல் போட்டியிடுகின்ற கொள்கைப் பற்றுறுதி மிக்க சிவஞானம் சிறீதரனுக்கு விருப்பு வாக்கில் முன்னுரிமை வழங்கி எமது ஆதரவினை வழங்க நாம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு அனைவரும் பேராதரவு தருகவென தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.

ad

ad