14 அக்., 2015

அரசியல் கைதிகளின் விடுதலை நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரம் : சரா எம்.பி

பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் தொடர்பில் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட
வேண்டும் என,யாழ்-கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்
நல்லூர் முன்றலில் இன்றைய தினம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண இளையோர் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகள் ஏதாவதொரு பொறிமுறையின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும். அதில் முக்கியமாக பொதுமன்னிப்புத் தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுமான சக்தியாக அமையும். இந்த பொதுமன்னிப்பின் மூலமே நல்லிணக்கத்திற்கான முதல் அத்திவாரத்தையும் போடலாம்.
முன்னைய மகிந்த அரசு தமிழருடன் ஏற்பட்ட தனிப்பிட்ட குரோதம் காரணமாக அரசியல் கைதிகளை பிணையில் விடவில்லை என்பதைக்கூட நாம் ஏற்றுக் கொள்வோம்.ஆனால் தற்போதைய நல்லாட்சி என்று கூறும் மைத்திரி அரசும் பல வருடங்களாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை பிணையில் விடுவதற்கு முன்வரவில்லை என்பதை நாம் ற்றுக் கொள்ள முடியாது என்றார்.