14 அக்., 2015

நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் ஸ்டீபன் ஹார்பர் பின்னடைவு? நள்ளிரவில் மாறிய கருத்து கணிப்புகள்

கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் பெரும் பின்னடைவு பெற்று வருவதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கனடா நாட்டில் எதிர்வரும் அக்டோபர் 19ம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எந்த கட்சி பிரதான பெரும்பான்மை பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என பலவகையான கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.
இந்த பொது தேர்தலில், கனடா நாட்டின் முக்கிய கட்சிகளாக ஆளும்கட்சியின் கன்சர்வேட்டிவ் கட்சி, தேசிய ஜனநாயக கட்சி, சுதந்திர கட்சி உள்ளிட்டவைகள் பலமாக மோதி வருகின்றன.
இவற்றில் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதம வேட்பாளாராக ஸ்டீபன் ஹார்பரும், தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளராக டோம் முல்கேய்ர் மற்றும் சுதந்திர கட்சி வேட்பாளராக ஜஸ்டீன் ட்ரூடு ஆகியவர்களும் போட்டியிடுகின்றனர்.
இரண்டு தினங்களுக்கு முன்வெளியான கருத்து கணிப்பில், தற்போதைய ஆளும்கட்சி பிரதமரான ஸ்டீபன் ஹார்பர் தான் வெற்றி பெறுவதாக கூறப்பட்டது.
ஆனால், நேற்று நள்ளிரவில் வெளியான புதிய கருத்து கணிப்பு, கன்சர்வேட்டிவ் கட்சியினை பின் தள்ளி சுதந்திர கட்சி முன்னணியில் இருந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கருத்து கணிப்பில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்கு எண்ணிக்கையில் 29.0 சதவிகதமும், சுதந்திர கட்சிக்கு 35.1 சதவிகிதமும் மற்றும் தேசிய ஜனநாயக கட்சிக்கு 25.0 சதவிகிதம் நாடுமுழுவதும் ஆதரவு கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
ஆனால், ஒரு சில மாகாணங்களில் மட்டுமே இந்த கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளதால், பொது தேர்தலில் இந்த வாக்கு எண்ணிக்கை சதவிகிதத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
338 ஆசனங்கள் கொண்ட கனடாவில் 170 ஆசனங்களை பெற்று தனி பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சி எந்தவித கூட்டணியும் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியும்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் ‘முன்கூட்டி வாக்கெடுப்பு’(Advance Polls) மையங்களுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகை தருவதால், இந்த தேர்தலில் அதிரடி மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.