14 அக்., 2015

பிள்ளையான் வரிசையில் டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்!- சுமந்திரன் எம்.பி


இலங்கையில் கடந்த காலத்தில் பல்வேறு விதமான கொலைகள், கடத்தல்கள், வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வரிசையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் இணையலாம்.

மேற்கண்டவாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஊடகவியலளர்களை சந்தித்து பேசும் போது மேற்படி விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கேள்வி- கடந்த காலத்தில் கொலைகள், கடத்தல்கள், மற்றும் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்படும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படாதா?என அமைந்தது.
இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது, அவர் மீதும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பல சந்தர்ப்பங்களில் மக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருக்கின்றார்கள். அவர் கைது செய்யப்பட மாட்டாரா? என்ற கேள்வி மக்களிடமும் இருக்கின்றது.
இந்நிலையில் அடுத்த கட்டமாக அவரும் கைது செய்யப்படலாம் அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படலாம் என அவர் தெரிவித்தார்.