புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 நவ., 2015

தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு வருகை

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்று தமிழ் நாட்டில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள 42 பேர், நாளை செவ்வாய்க்கிழமை மீண்டும் தாயகம் திரும்பவுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
 
அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய (UNHCR) வசதிப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்புடன் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலுடன் இவர்கள் நாடு திரும்பவுள்ளனர்.
 
இவர்கள் நாட்டை வந்தடைவதற்கு இலவசமாக விமான பயணச்சீட்டு அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வழங்கப்படவுள்ளதுடன் மீள் சமூக ஒருங்கிணைப்பிற்கான நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 75 அமெரிக்க டொலர்களும், போக்குவரத்து நன்கொடையாக ஒவ்வொருவருக்கும் 19 அமெரிக்க டொலர்களும், உணவு அல்லாத பண நன்கொடையாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் 75 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் 2011ஆம் ஆண்டிலிருந்து 5,600 அகதிகள் தாயகம் திரும்பியுள்ளதாகவும் இதில் 4,446 பேர் அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வசதிப்படுத்தப்பட்டவர்களாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் இந்தியாவில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகள் இருப்பதாகவும், இந்தியாவிலுள்ள அகதிகளுக்கான ஜக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் பிரகாரம் 109 முகாம்களில் 64,310 பேர் இருப்பதாகவும் இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50,421 பேரும் சிறுவர்கள் 13,889 பேரும் காணப்படுகின்றனர். 
ஏனையவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வசிக்கின்றனர் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

ad

ad