புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2016

”தனிஈழம் தான் வேண்டும்” என்றால் அந்த கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும்: லால் விஜேநாயக்க


”தனிஈழ கோரிக்கையை மக்கள் முன்வைத்தால் அது பற்றியும் அறிக்கையிடப்படும், எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படாது” என்கிறது அரசமைப்பு குறித்து மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க.
அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களிடம் கருத்தறியும்போது, ”தமக்கு தனிஈழம்தான் வேண்டும்” என்ற கோரிக்கையை வடக்கு மக்கள் முன்வைக்கும்பட்சத்தில், அந்தக் கருத்தும் இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படும். என்று அரசமைப்பு மறுசீரமைப்பு சம்பந்தமாக மக்களிடம் கருத்தறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
மக்களால் ஏன் இவ்வாறானதொரு கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என ஆராயப்பட்டு அவ்வாறானதொரு கோரிக்கை எழாதிருப்பதற்கு என்ன செய்யவேண்டும் என அரசுக்கு தமது குழு சிபாரிசு செய்யும் என்றும் அவர் கூறினார்.
அரசமைப்பு மறுசீரமைப்பது தொடர்பில் மக்களின் கருத்துகளை அறிவதற்காக 24 பேரடங்கிய குழுவொன்றை அரசு அண்மையில் நியமித்தது. இதில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இதுவரையில் 20 பேர் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி குழு கொழும்பிலுள்ள விசும்பாயவில் நேற்றுப் பிற்பகல் கூடி தமக்குரிய நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்து நிகழ்ச்சிநிரலைத் தயாரித்தது. அதன்பின்னர் ஊடகவியலாளர் மாநாடும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
கேள்வி நேரத்தின்போது, அரசமைப்பு மாற்றம் தொடர்பில் மக்களிடம் கருத்தறிவதே குழுவின் பிரதான நோக்கம். சுயாதீனமான முறையில் கருத்துகளை முன்வைப்பதற்கு மக்களுக்கு உரிமை இருக்கிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும்போது தமக்கு தனித்துச்செல்லவேண்டும் என்றும், தனிஈழம்தான் வேண்டும் என்றும் அங்கு வாழும் மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டால் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமா? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
"வடக்கு மக்களும் சுயாதீனமான முறையில் கருத்துகளை முன்வைக்கலாம். அச்சுறுத்தலோ அழுத்தமோ பிரயோகிக்கப்படாது. எவரேனும் மேற்படி கருத்தை முன்வைத்தால் (தனிஈழம்), ஏன் அவ்வாறானதொரு கருத்து எழுகிறது என ஆராயவேண்டும். ஏன் இந்தக் கோரிக்கை என கேட்கப்பட்டு, என்ன செய்தால் இந்தக் கோரிக்கை எழாதிருக்கும் என்பது பற்றி கருத்தறியப்படும். அப்படியொரு கோரிக்கை எழாதிருக்க என்ன செய்யவேண்டும் என அரசுக்கு சிபாரிசு செய்யப்படும். எனினும், கற்பனை அடிப்படையிலேயே இந்தக் கேள்வி எழுகின்றது. கருத்து கோரும் அதிகாரம் மாத்திரமே எமக்கு இருக்கிறது
அரசமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துகளை அறிந்து சிபாரிசுகள் சகிதம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிப்பதே எமது கடப்பாடாகும். இந்தப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கின்றோம். அதன்பின்னர் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
அந்தவகையில் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் மக்கள் கருத்தறியும் பணி ஆரம்பமாகும். முதல்கட்டமாக கொழும்பில் நடைபெறும். அதன் பின்னர் நாட்டிலுள்ள ஏனைய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்ளப்படும்.
குழுவில் 20 பேர் இருக்கின்றனர். நான்கு பேர் சகிதம் ஐந்து குழுக்களாக பிரிந்துசென்று மக்களின் கருத்துகளை அறிவோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் தங்கியிருப்போம். மின்னஞ்சல், தொலைபேசி, தொலைநகல், கடிதம் ஊடாகவும் எமக்குக் கருத்து தெரிவிக்க முடியும். கொழும்பு அலுவலகத்துக்கு வந்து சொல்லவும் முடியும். சுதந்திரமாக கருத்து தெரிவிக்கலாம். எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படாது.
20 தலைப்புகளின் கீழ் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்கள் அடுத்துவரும் நாட்களில் ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்படும். ஏனைய விடயங்கள் என்ற பகுதி இருக்கிறது. அத்துடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் மின்னஞ்சல் ஊடாக கருத்து தெரிவிக்க முடியும்.
சாதாரண மக்களினது கருத்தும் எமக்கு மிக முக்கியம். அரசமைப்பு பற்றி மக்கள் அறிந்திருக்கவேண்டும். அரசமைப்பு மாற்றத்துக்கு முன்னர் மக்களிடம் கருத்து கோரப்படுவது இதுவே முதற்தடவையாகும்''
என்று யவர் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad