புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

3 ஜன., 2016

தமிழர்கள் அனைவரையும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுமாறு அழைப்பு


நாம் அரசியல் தலைமையில் இருக்கும் போது ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட்டால், அதுவே போதும் என நினைப்பது தமிழினம் தொடர்ந்தும்
அவலப்படவே வழிவகுக்கும் தமிழ் மக்கள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே எட்டப்படும் தீர்வு தமிழர்களுக்கு நிரந்தரமானதாக அமைய வேண்டும் என்பதுடன், எதிர்கால சந்ததி எம்மைப் போன்று அல்லற்படாமல் நிம்மதியாக வாழக்கூடியதாக இருக்கவேண்டும் என பேரவை விடுத்துள்ள செய்திக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை வலியுறுத்துவது எமது கடமை என சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் பேரவை, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவவிட்டால் நிலைமை மோசமாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழினத்திற்காக பாடுபடுவோம் எனவும் அதற்காக தம்முடன் இணையுமாறும் தமிழ் மக்கள் பேரவை குறித்த செய்திக் குறிப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த அழைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் என்ற எல்லை கடந்து தமிழ் மக்களின் உரிமைகளையும் நலன்களையும் வென்றெடுப்பதற்காக மதத் தலைவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனின் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவைக்கு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் தமிழ் உறவுகள் வாழும் இடங்களிலும் பலத்த ஆதரவு கிடைத்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தமிழ் மக்கள் பேரவைக்கு வருகின்ற தொலைபேசி அழைப்புகள்,  மின்னஞ்சல் செய்திகள், குறுஞ்செய்திகள், முகநூல் கருத்துக்கள் தமிழ் மக்கள் பேரவை, மிக விரைவில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாகப் பரிணமிக்கப் போவதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இதேவேளை எங்களையும் தமிழ் மக்கள் பேரவையில் சேருங்கள். நாங்கள் இழந்தது ஏராளம். அரசியல் என்ற பெயரால் எங்களுக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகளை இழந்து தருவதைப் பெற்று வாழ்வோம் என்ற தமிழ் அரசியல்வாதிகளின் புரியாமையை, அறியாமையை தொடர்ந்தும் நாம் பார்த்திருக்க முடியாது என்று தத்தம் ஆதங்கத்தைத் தெரிவித்து நிற்கும் தமிழ் நெஞ்சங்களால் தமிழ்மக்கள் பேரவை நெஞ்சுருகி நிற்கின்றது.
அன்பார்ந்த தமிழ் உறவுகளே! நீங்கள் அனைவரும் தமிழ்மக்கள் பேரவையில் இணைந்து மக்கள் இயக்கமாகப் பேரவையை உலகுக்கு காட்ட முன்வாருங்கள்.
2016 இல் சப்புச் சவாலான தீர்வுக்கு ஆமாம் போடும் தமிழ் அரசியல் தலைமைக்கு ஒரு செய்தியைச் சொல்லுங்கள்.
தீர்வு உங்களுக்கானது அல்ல அது தமிழ் மக்களுக்கானது. எனவே எங்கள் பிள்ளைகள் செய்த தியாகம், நாங்கள் பட்ட துன்பம், வன்னிப் பெருநிலப்பரப்பில் எங்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள் யாவற்றுக்கும் கிடைக்கின்ற தீர்வு என்பது நாம் எதிர்பார்ப்பதாக இருக்க வேண்டும்.
அன்பார்ந்த தமிழ்மக்களே! பொது அமைப்புகளின் பிரதிநிதிகளே! தமிழ் மக்கள் பேரவையோடு இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்காக பேரவையின் கதவுகள் திறந்திருக்கின்றன. வடக்கு கிழக்கு மக்கள் கைகோர்த்து நிற்கின்ற இந்த அமைப்பை மக்கள் இயக்கமாக மாற்றுவது உங்கள் கைகளில் என்பதை மறந்து விடாதீர்கள்.
அன்பார்ந்த தமிழ் இளைஞர்களே! ஜனநாயக வழியில் எங்கள் உரிமைகளை கேட்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்த நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமாயின் ஜனநாயகத்தின் பெயரால் தமிழ் மக்களின் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
விவேகம் மிக்க தமிழ் இளைஞர்களாகிய உங்கள் உணர்வுகள் மௌனிக்கப்பட்டுள்ளன. நீங்களே இந்த நாட்டின் வலிமை மிகு சக்தி. நீங்கள் பேசவேண்டும். உங்கள் கருத்துக்கள் வெளிவர வேண்டும். முதுமை என்பது இளைஞருக்கு வழிகாட்டவேண்டுமாயினும் எங்கள் அரசியலில் அதற்கு ஒருபோதும் இடமில்லை.
ஆனால் தமிழ் மக்களின் அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவையில் உங்களுக்கே முன்னுரிமை என்பதால் பேரவையுடன் இணையுங்கள். உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். பேரவையின் செயற்பாடுகளை விஸ்தரியுங்கள், கிராமங்கள் தோறும் சென்று மக்கள் பணி செய்யுங்கள்.
எங்கள் தமிழ் இனத்தின் பெற்றோர்களே! அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வீணாகின்றது நேரம் என்ற கவலைகள் இனி வேண்டாம். தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுங்கள். மக்கள் பணி செய்ய வாருங்கள். எங்கள் மக்கள் படும் துன்ப துயரங்களை அறியுங்கள். வாருங்கள் உங்கள் முதுமையின் பட்டறிவைத் தாருங்கள். அரசியல் என்ற எல்லையைத் தாண்டி தமிழ் மக்களுக்கான பணி என்பது பற்றி சிந்தியுங்கள்.
எங்கள் மக்களுக்கு எங்களால் முடிந்த சேவையைச் செய்வோம் என்று திடசங்கற்பம் கொள்ளுங்கள். உங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இணையுங்கள்.

ஜனநாயகத்தோடு – ஆன்மீகத்தின் பலத்தோடு, பாதிக்கப்பட்ட தமிழினத்திற்கு தமிழினமே பலம் என்ற மன உறுதியோடு அனைத்து தமிழ் மக்களும் பொது அமைப்புகளும் தமிழ் மக்கள் பேரவையுடன் இணையுங்கள். எல்லாம் நல்லதாக நடக்கும். இறைவன் நிச்சயம் எங்கள் தமிழினத்திற்கு உதவுவான். நாங்கள் நேர்மைத் திறத்துடன், உறுதி கொண்ட நெஞ்சுடன் செயற்படுவோம். எங்கள் தமிழினத்திற்காக பாடுபடுவோம். வாருங்கள் தமிழ் மக்கள் பேரவையில் இணையுங்கள் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.