புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் மற்றொரு முயற்சி


சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு கோட்டையிலுள்ள சம்புத்தாலோக விகாரையில் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்தார்.
ஆனால் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படுவதற்கான எந்தவித சமிக்ஞையுமே தென்படாத சூழலில் தான் அவர் இந்நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்நாட்டில் சர்வதேச விசாரணைக்கு இடம் கிடையாது என ஏற்கனவே பல முறை தெளிவாகவும், பகிரங்கமாகவும் அறிவித்துள்ளனர்.
அத்தோடு இலங்கை இறைமையும் தன்னாதிக்கமும் உள்ள ஒரு நாடு என்பதை சர்வதேசமே ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இவை மாத்திரமல்லாமல் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு பிரேரணை கொண்டு வந்த அமெரிக்காவே கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாக பிரேரணையொன்றை முன்னின்று கொண்டு வந்து அப்பிரேரணை ஏகமானதாக நிறைவேறவும் வழிவகுத்தது.
இவ்வாறு சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு சாதகமான சூழல் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையில் கடந்த வருடம் ஜனவரி மாதம் 08ம் திகதி இந்நாட்டில் உருவாக்கப்பட்ட நல்லாட்சியின் ஊடாகவே இந்த அடைவுகளை இந்நாட்டினால் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.
இவ்வாறான சூழலில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ​ஆணையாளர் செய்யத் ராத் அல் ஹுசைன் நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு கடந்த சனியன்று இலங்கைக்கு வருகை தந்தார். அவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு நேரில் விஜயம் செய்தார்.
அங்கு மக்களையும் மாகாண மட்ட அரசியல்வாதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். அத்தோடு கண்டிக்குச் சென்று அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து கலந்துரையாடிய அவர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிரக்கட்சித் தலைவரையும் சந்தித்தார்.
இந்நாட்டின் அழைப்பை ஏற்று இங்கு வருகை தந்த சர்வதேச பொதுமன்றத்தின் முக்கியஸ்தரான ஆணையாளர் அல் ஹுசைன் இன்றைய காலகட்டத்தில் இந்நாட்டில் சந்திக்க வேண்டிய தரப்புக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ராத் ஹுசைனின் வருகையை ஒரு துருப்பு சீட்டாக வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சியையே முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார். ஆனால் இவரது இம்முயற்சியின் பின்புலத்தை இந்நாட்டு மக்கள் அறியாதவர்கள் அல்லர்.
2009ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, தம்மை மின்சாரக் கதிரையில் ஏற்ற முயற்சி செய்கின்றனர். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பார்க்கின்றனர், போர்க் குற்றச்சாட்டு சுமத்தப் பார்க்கின்றனர் என்றபடி இவர் அடிக்கடி கூறி வந்தார். இவரது இக்கூற்றுக்களுக்கு மக்கள் மத்தியில் ஆரம்பத்தில் ஆதரவு கிடைத்தது.
ஆனால் இதே வசனங்களை இவர் தொடர்ந்தும் கூறி வந்த போதிலும் அவர் கூறிய எதுவும் நடக்கவில்லை. அப்போது இவரது மின்சாரக் கதிரை மற்றும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான கதைகளின் உண்மைத் தன்மையை நாட்டு மக்கள் நன்கறிந்து கொண்டனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் மின்சாரக் கதிரை மற்றும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான கதைகளை இவர் மேடைக்கு மேடை அழுத்திக் கூறினார். அப்படியிருந்தும் கூட அவரது கூற்றுக்களை நாட்டு மக்கள் நிராகரித்து அவரைத் தோற்கடித்தனர்.
இருப்பினும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அதே வசனங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்யத் ஹுசைனின் வருகையைப் பயன்படுத்தி மேலெழச் செய்ய முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவர் சார்ந்தோரும் மனப்பால் குடித்து தொடங்கிய நடவடிக்கை தான் இது.
ஆனால் இவர்கள் யார் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பிழையான அணுகு முறைகளால் இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதோடு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்திக்கும் உள்ளானது. அத்தோடு பலவிதமான நெருக்கடிகளுக்கும் இந்நாடு முகம் கொடுத்தது.
இந்நாட்டில் நல்லாட்சி உருவாக்கப்பட்டதன் பயனாகவே நாடு சுபீட்சம் மிக்க மறுமலர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்சவும் அவர் சார்ந்தோரும் ' அரசியல் இலாபம் தேடும் நோக்கில் சர்வதேச நீதிமன்றம் வேண்டாம்.பாதுகாப்புப் படையினரை வேட்டையாடுவதை நிறுத்து' என்ற கோஷத்தை முன்னெடுக்கின்றனர்.
இதன் மூலம் மக்களைப் பிழையான வழியில் திசை திருப்பி விட முயற்சி செய்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை ஒரு பூதமாக மக்கள் மத்தியில் சித்தரிக்க முயலுகின்றனர்.
ஆனால் இவர்களது முயற்சியையும் அதன் பின்புலத்தையும் நாட்டு மக்கள் நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.
அதனால் அவர்களது முயற்சிகள் பலிக்கப் போவதில்லை. இது மிகத் தெளிவானது.

ad

ad