புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2016

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - சரத்குமார்

நெல்லை மாவட்டம், தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு
வெற்றி பெற்றவர், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். ‘தொகுதி மக்களுக்கு நான் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன், முதன்மைத் தொகுதியாக மாற்றுவேன்’ என்று சட்டமன்றத்தில் தன் கன்னிப்பேச்சில் குறிப்பிட்டார் சரத்குமார். அந்த வார்த்தைகள் தென்காசி தொகுதி மக்களை புளகாங்கிதம் அடையச் செய்தன. தென்காசியை முதன்மையான தொகுதியாக சரத்குமார் மாற்றி இருக்கிறாரா? தொகுதி மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளனவா?
வில்லனாக மாறிய ஹீரோ!

சரத்குமாரை ஒரு கதாநாயகனாகப் பார்த்து பழக்கப்பட்ட மக்கள், நம்முடைய கவலைகளை எல்லாம் அவர் தீர்த்துவிடுவார் என்று நம்பினார்கள். சரத்குமாரிடம் அதிகமாக எதிர்பார்த்தனர். ஆனால், ‘ஆன்டிகிளைமாக்ஸ்’ போல கதை மாறிவிட்டது. இப்போது, சரத்குமாரை ஒரு வில்லனைப்போல மக்கள் பார்க்கின்றனர். ‘‘நான் வெற்றி பெற்றால் இங்கேயே வீடு எடுத்துத் தங்கி இருப்பேன். என்னை நீங்கள் சுலபமாகச் சந்திக்க முடியும்’’ என்று வாக்குறுதி அளித்தார். அதற்கு, “ஆமாம்...ஆமாம்” என்று அவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட ராதிகாவும் சொன்னார்.  

ஆனால், தன்னுடைய நடிப்புத் தொழிலுக்கும், நடிகர் சங்கத்துக்கும் கொடுத்த முக்கியத்துவத்தில் சிறிய அளவைக்கூட, தென்காசி தொகுதி மக்களின் நலனுக்கு அவர் கொடுக்கவில்லை என்று புலம்புகிறார்கள் தொகுதிவாசிகள். ‘‘ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருந்ததைப் பயன்படுத்தி, இந்தத் தொகுதிக்கு எவ்வளவோ நல்ல விஷயங்களை அவரால் செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறிவிட்டார். தென்காசியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதாகக் கொடுத்த வாக்குறுதியை மறந்தே போய்விட்டார். குற்றாலத்தைத் தேசிய சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்வதாகச் சொன்னதையும் அவர் நிறைவேற்றவில்லை. சீஸன் காலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகைதரும் குற்றாலத்தில், அடிப்படைவசதிகள் போதுமானதாக இல்லை. இதற்காக, மதுரை உயர் நீதிமன்றக் கிளை சார்பாக ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பிறகே குற்றாலத்தைத் திரும்பிப் பார்த்தார், சரத்குமார். பெண்களுக்கான உடை மாற்றும் அறைகள், சிமென்ட் தரைத்தளம் போன்றவை அமைக்கப் பட்டுள்ளன. தன் சொந்த செலவில் ரூ.2 லட்சம் மதிப்பில் நடமாடும் டாய்லெட் அமைத்துக் கொடுத்தார். ஆனால், அது இப்போது பயன்பாட்டில் இல்லை. தொகுதிக்கு என்ன தேவை என்பதை அவரிடம் சொல்லக்கூட முடியவில்லை’’ என்று வருத்தத்​துடன் சொல்கிறார்கள் தொகுதிவாசிகள்.   

வேதனையில் விவசாயிகள்! 

விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ‘‘இந்தப் பகுதியின் பிரதான தொழிலே விவசாயம்தான். மழை பொய்த்துப் போனால் எங்களுக்கு மாற்றுத் தொழில் எதுவுமே கிடையாது. விவசாய வேலைகள் இல்லாதபோது, கேரளாவுக்குக் கூலி வேலைக்குச் செல்கிறோம். எங்களுக்கு, இங்கேயே தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும் என்பது எங்களது நீண்டநாள் கோரிக்கைகள். அவற்றை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. நெல் கொள்முதல் மையம் இல்லாததால், விவசாயிகள் அவதிப்பட்டனர். சுந்தரபாண்டியபுரத்தில் கொள்முதல் மையம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஜம்புநதி, ராமநதி இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று பலமுறை அவரிடம் கோரிக்கை விடுத்தோம். அதை நிறைவேற்ற அக்கறை காட்டவில்லை.  இப்போது, முதல்வரே சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், ‘ஜம்புநதி நாராயணபேரி மேல்மட்ட கால்வாய்த் திட்டம் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்’ எனத் தெரிவித்து இருக்கிறார். முதல்கட்டமாக 8 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருந்தபோதிலும், நில ஆர்ஜிதம் முடிந்து இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று தெரியவில்லை’’ என்கிறார்கள்.
அரசியலிலும் நடிகராகிவிட்டார்!

தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் இஸ்லாமிய சமூகத்தினர் கணிசமாக வசிக்கிறார்கள். சரத்குமாரின் வெற்றிக்கு அவர்களது வாக்குகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன. ‘‘இந்தப் பகுதியில் அனைத்துச் சமுதாயத்தினரும் இஸ்லாமிய மக்களுடன் உறவுமுறை சொல்லிப் பழகிவரும் நிலை உள்ளது. ஆனால், சில சுயநலவாதிகளால் சமூக ஒற்றுமை பாதிக்கப்படுகிறது. அதைச் சீர்ப்படுத்தும் வகையில் சமூக ஒற்றுமைக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு பலமுறை சரத்குமாரிடம் வலியுறுத்தினோம். அதை அவர் கண்டுகொள்ளவே இல்லை’’ என்று வருத்தப்பட்டனர்.

“தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலைச் சுற்றிலும் மூன்று டாஸ்மாக் கடைகள் உள்ளன. அங்கே மது அருந்திவிட்டு பாட்டில்களைக் கோயில் அருகில் உடைத்து வீசுகிறார்கள். எனவே, அந்தக் கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை சரத்திடம் கோரிக்கைவைத்தோம். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ‘தென்காசியை தனி மாவட் டமாக ஆக்குவேன்’ என வாக்குறுதி கொடுத்திருந்தார். அதுவும் நடக்க வில்லை. தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் போதுமான மருத்து வர்களும், செவிலியர்களும் இல்லை. எனவே, நோயாளிகள் நெல்லை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள். விபத்துக்களில் சிக்குபவர் களும், கர்ப்பிணிப் பெண்களும் வழியிலேயே உயிரிழக்க நேர்கிறது” என்று கவலையோடு சொன்னார்கள் தொகுதிவாசிகள்.
நிறைவேற்றப்படாத திட்டங்கள்!

தென்காசி தொகுதியில், ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, நீண்டநாட்கள் கழித்தே திறக்கப்பட்டது. இதுபற்றி பேசியவர்கள், “தென்காசி ரயில்வே மேம்பாலத் திட்டம் முந்தைய தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், அது முடிவடைந்த பிறகும் முதல்வரின் தேதி கிடைக்காமல் திறக்கப்படாமல் இருந்தது. நான்காண்டு காலம் பொறுத்துப் பார்த்த மக்கள் அவர்க ளாகவே பாலத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். பிறகு, அவசர அவசரமாகத் திறக்கப்பட்டது. அந்தப் பாலம், அ.தி.மு.க ஆட்சியில் கட்டப் பட்டது என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார் சரத்குமார். தென்காசியில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தத் திட்டத்தைத் தொடராமல் கிடப்பில் போட்டுவிட்டார். போக்குவரத்தை மேம்படுத்தவும் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்​படவில்லை. கடந்த காலத்தில், 40 புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவர் எம்.எல்.ஏ ஆன பிறகு ஒரு புதிய வழித்தடத்தில்கூட பேருந்து இயக்கப்படவில்லை. கடந்த முறை தி.மு.க வெற்றி பெற்றபோது, தொகுதிக்கு உட்பட்ட சுரண்டையில் கல்லூரி அமைக்கப்பட்டது. அதற்குப் போது​மான கட்டட வசதிகள் இல்லாத நிலையில், கல்லூரிக்குச் சொந்தமான உபகரணங்கள் வெயிலிலும் மழையிலும் கிடந்து சீரழிகின்றன. சுரண்டை பாதாளச் சாக்கடைத் திட்டமும் கிடப்பில் இருக்கிறது. சிற்றாற்​றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணியும் முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டதுதான். இப்படி பாதியில் இருந்த திட்டங்களை, முடிவடைய இருந்த திட்டங்களைத் திறந்து, அவரே எல்லாம் செய்ததுபோல சாதனைப் பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறார்’’ என்றனர்.
நடிகர் சங்கம் கைநழுவிப் போனதுடன், சொந்தக் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் அவரை கைகழுவிவிட்டுச் சென்றுவிட்ட சூழலில், தென்காசி மக்களும் அதிருப்தியில் இருக்கிறார்கள். “சரத்குமார் மீண்டும் இந்தத் தொகுதி​யில் எந்தக் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டாலும், அவருக்கு நாங்கள் பாடம் புகட்டுவோம்” என்று ஆவேசப்படுகிறார்கள், தொகுதி மக்கள். 

- பி.ஆண்டனிராஜ், ந.ஆசிபா பாத்திமா பாவா
படம்: எல்.ராஜேந்திரன்

ரியாக்‌ஷன் என்ன?

சரத்குமாரை தொடர்புகொள்ள முடியவில்லை. அவர் சார்பாக பேசிய உதவியாளர், ‘‘ரூ.30 லட்சத்தில் நடமாடும் டயாலிசிஸ் இயந்திரம், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவமனையில் பூங்கா, சி.டி ஸ்கேன் வசதி, ஏழரை லட்சம் ரூபாய் செலவில் குற்றாலத்தில் இ-டாய்லெட், 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கண்காணிப்பு கேமரா, சுரண்டையில் காமராஜர் கல்லூரிக்கு ரூபாய் நாலரை லட்சம் செலவில் உபகரணங்கள் எனப் பல திட்டங்களைச் சொந்த நிதியில் இருந்து செய்திருக்கிறார். தென்காசி புறநகர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சிற்றாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டது. ரயில்வே மேம்பாலத்துக்கு பக்கவாட்டுச் சாலைகள் அமைக்கப்பட்டன. பாவூர்சத்திரம் - சுரண்டை சாலையில் 4 கோடி ரூபாயில் பாலம், பாவூர்சத்திரத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காய்கனி குளிர்சாதனக் கிடங்கு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. சுரண்டையில் பாதாளச் சக்கடைத் திட்டம், வீ.கே.புதூரில் புதிய பேருந்து நிலையம், தென்காசி - குத்துக்கல்வலசை நான்கு வழிச் சாலை ஆகியவற்றுக்கு அரசு அனுமதி கிடைத்திருக்கிறது’’ என பட்டியல் வாசித்தார்.      

எம்.எல்.ஏ. அலுவலகம் ரெஸ்பான்ஸ் எப்படி? 

தென்காசியின் மையப் பகுதியில் தாலுக்கா அலுவலகத்தின் எதிரே எல்.எல்.ஏ அலுவலகம் உள்ளது. அலுவலகத்தின் பொறுப்பாளராக ஓய்வுபெற்ற பி.டி.ஓ ஒருவர் இருக்கிறார். கணினிப் பொறியாளர் உள்ளிட்ட மேலும் இருவர் இருக்கிறார்கள். தொகுதி மக்கள் கொடுக்கும் மனுக்களின் விவரங்கள் உடனுக்குடன் கணினியில் ஏற்றப்படுகின்றன. சென்னையிலும் இதேபோல ஓர் அலுவலகம் ஓய்வுபெற்ற தலைமைச் செயலக அதிகாரி ஒருவரின் தலைமையில் செயல்படுகிறதாம். தொகுதியில் இருந்து அனுப்பப்படும் மனுக்களுக்கு அங்கிருந்து உடனுக்குடன் ரெஸ்பான்ஸ் செய்யப்படுகிறது. மனுக்கள் உரிய துறைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான பதிலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிறது.
எம்.எல்.ஏ அலுவலகத்தில் இருந்த கருப்பையா, ‘‘என்ன விஷயமா வந்திருக்கீங்க?’’ என்றார். ‘‘எம்.எல்.ஏ-விடம் மனுக் கொடுக்க வேண்டும்’’ என்றதும், ‘‘மனு எழுதி வெச்சிருந்தா குடுங்க. இனிமேல்தான் எழுதணும்னா விஷயத்தைச் சொல்லுங்க. எங்க ஸ்டாஃப் உங்களுக்கு உதவி செய்வார். உங்க கோரிக்கையை சாரோட கவனத்துக்குக் கொண்டு சென்று நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்றேன்’’ என்று சொன்னார்.  

ப்ளஸ்... மைனஸ்!
பழகுவதற்கு எளிமையானவர். தொகுதிக்​குள் தலைகாட்டும்போதெல்லாம் சாலையோரக் கடைகளில் சாமான்ய மக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவார். பார்க்கும் நபர்களை எல்லாம் வாஞ்சை யோடு கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரிப்பார். அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கமாக இருந்ததால், இவரது சில சிபாரிசுகள் உடனடியாக ஏற்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு சொந்த நிதியில் பல உதவிகளைச் செய்துள்ளார். இவை அவருக்கு ப்ளஸ்.

தொகுதிக்கு அடிக்கடி வருவதில்லை. எப்போதாவது தொகுதிக்குள் தலைகாட்டு வதால், மக்கள் தங்களின் கோரிக்கை​களை நேரடியாக அவரிடம் சொல்ல முடியவில்லை என்பது அவருக்கு மைனஸ்.

ad

ad