தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன்
ஆகியோர் வீடுகளில் கார்டன் ஸ்பெஷல் டீம் அதிரடியாக ரெய்டு நடத்தியதாகவும், இதில் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ எந்த விளக்கத்தையும் மக்களுக்கு அளிக்கவில்லை.வீட்டுச் சிறையில் தமிழக அமைச்சர்கள் அடைபட்டிருக்கிறார்கள் என்ற செய்தி வெளிவந்தபோது, இதுபற்றிப் பேசிய பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில மூத்த அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமைக்கு தெரியாமல் பதுக்கி வைத்தது குறித்தும், அப்பணத்தை மீட்க ஆளுங்கட்சியின் தலைமை மேற்கொண்டு வரும் சாம, பேத, தான, தண்ட முறைகள் குறித்தும் வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. 58 மாத ஆட்சியில் ஊழல் செய்வதையும், கடந்த ஒரு மாதத்தில் அமைச்சர்களை மிரட்டி பணம் பறிப்பதையும் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மக்கள் நலப் பணிகள் நடந்தனவோ இல்லையோ அனைத்து துறைகளிலும் ஊழல்கள், முறைகேடுகள், சுரண்டல்கள் ஆகியவை மட்டும் முழு நேரப் பணியாக நடைபெற்று வருகின்றன.
நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமின்றி, அவரது மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டதுடன், தம்மிடம் உள்ள பணம் மற்றும் சொத்துக்களை ஒப்படைத்ததையடுத்து நேற்று முன்நாள் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கடந்த ஆறு நாட்களாக எங்கிருக்கிறார்? என்பதே தெரியவில்லை என்றும் அவரும் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு ரூ.30,000 கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே, அமைச்சர்களின் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் தொடர்பு உண்டு என்பதால் அவர் மீதும், மூத்த அமைச்சர்கள் 5 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். அமைச்சர்களிடம் இருந்து சட்ட விரோதமாக மீட்கப்பட்ட பணம் மக்களுக்கு சொந்தமானது என்பதால் அதன் மதிப்பை வெளிப்படையாக அறிவித்து அரசுக் கருவூலத்தில் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அறிக்கை வெளியிட்டு அதிர வைத்தார்.
ராமதாஸின் கருத்தை வழிமொழிந்து தி.மு.க தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், " இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம் மட்டுமல்ல. மாநிலத்தின் நலன்கள் சம்பந்தப்பட்டது.
தமிழ்நாட்டுக்கே காலாண்டு பட்ஜெட் போடுமளவுக்கு அமைச்சர்களிடம் இருந்து முப்பதாயிரம் கோடி பறிமுதல் செய்யப்பட்டது உண்மையானால், அவை அரசின் கஜானாவிற்கே செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எல்லாம், காது கொடுத்துக் கேட்கவா போகிறது கார்டன்?