25 மார்., 2016

விஜயகாந்திடம் ரூ.500 கோடி கருணாநிதி பேரம் பேசியது உண்மை: அடித்து சொல்லும் வைகோ

தே.மு.தி.க.வை தனது கூட்டணிக்கு இழுப்பதற்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி 500 கோடி ரூபாய் பேரம் பேசியது உண்மை
என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், ம.ந.கூ. ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறும்போது, ''தேமுதிகவிடம், திமுக பேரம் பேசியது உண்மை. தே.மு.தி.க.வுக்கு 80 தொகுதிகளும் 500 கோடி ரூபாய்களையும் தி.மு.க. தருவதற்கு முன்வந்தது என்ற செய்தி ஒரு நாளிழில் வெளிவந்துள்ளது. அது உண்மையுமாகும்.

நான் கேள்விபட்டது, தி.மு.க. சார்பாக 500 கோடி ரூபாயும், 80 சீட்டும் தருவதாக கலைஞர் ஒரு துண்டு சீட்டில் எழுதியே கொடுத்து அனுப்பியதாக. ஆக, 80 தொகுதிகள், 500 கோடி ரூபாயை உதறி எறிந்து, உதாசினமாக தூக்கி எறிந்துவிட்டு, எதற்கு போன தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க மக்களிடம் சென்றாரோ, அதே ஊழல் கூட்டம் திரும்ப ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று விஜயகாந்த் முடிவெடுத்து, அந்த 500 கோடி என் கால் தூசுக்கு சமம் என்று தூக்கி போட்டிருக்கிறார். ஆகவே, நேர்மையை பற்றி சொல்லக்கூடிய முழு தகுதியும் உள்ளவர் சகோதரர் விஜயகாந்த்.

தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி மாநாடு வருகின்ற ஏப்ரல் 10-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமாரை மீண்டும் அழைத்துப் பேசுவது அக்கட்சியின் தோல்வி பயத்தைக் காட்டுகிறது" என்றார்.