புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2016

நிதானமும் இல்ல, தகுதியும் இல்ல... விஜயகாந்த்தை விளாசிய காடுவெட்டி குரு

எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ விஜயகாந்த் உளறிக்கொண்டிருக்கிறார் என்று வசைபாடிய
காடுவெட்டி குரு, பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நடிகர் விஜயகாந்துக்காக இங்கே போட்டிப்போடுகிறார்கள் என்று கடுமையாக விமர்சித்து பேசினார்.

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி பேரத்தில் பிஸியாக இருக்கிற நேரத்தில், தங்களது தேர்தல் அறிக்கையை  விளக்க கிராமங்கள் தோறும் படையெடுக்க துவங்கிவிட்டது பா.ம.க. தருமபுரி மாவட்டம் ஏலகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார்.  வழக்கமான அசைவப்பேச்சு இல்லையென்றாலும் இரட்டை அர்த்தங்கள் அவ்வபோது எட்டிப்பார்ப்பதை அவராலயே தடுக்க முடியவில்லை போலும்.

கூட்டத்தில் இறுதியாக மைக் பிடித்த குரு, "ஐம்பது ஆண்டுகாலம் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்..?  கலைஞர் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தார், எம்.ஜி.ஆர் மூன்று முறை முதலமைச்சராக இருந்தார். ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். இவர்கள் செய்த சாதனை என்ன..? சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்பதற்கு இவர்களுக்கு தகுதி இருக்கிறதா..? இல்லை.  அதனால்தான் கலைஞர் கூட்டணிக்கு கூவி கூவி அழைக்கிறார், அண்ணா அறிவாலயம் பக்கம் ஒருவரும் செல்லவில்லை. இன்றைக்கு விரல்விட்டு எண்ணுகிற கட்சிகளையெல்லாம் அழைத்து தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கிறார்கள். கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறோம் என்று. இரண்டு மாதத்திற்கு முன்பு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே தென்படவில்லை என்று  ஜெயலலிதா சொன்னார். ஆனால், அவரும் இரண்டு பேர் மூன்று பேர் இருக்கும் கட்சிகளை அழைத்து கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறார். இதுதான் தேர்தல் நிலவரம்.

உங்கள் கூட்டணியில் விஜயகாந்த் சேருவாரா என்று சில தினங்களுக்கு முன்பு கலைஞரை கேட்கிறார்கள். அதற்கு, கலைஞர் பழம் கனிந்து கொண்டிருக்கிறது, ஓரிரு நாட்களில் பழம் கனிந்து பாலில் விழ இருக்கிறது.  நான் பால் சொம்போடு காத்திருக்கிறேன் என்று சொன்னார். பழம் கனிந்ததா..? பழம் கனிந்து பாலில் விழுந்ததா..? பால் புளித்துப் போய்விட்டது. நான் முன்பே சொன்னேன் பாலை வைத்துக்கொண்டு அந்த பழத்தை எதிர்பார்த்தால் வராது.  நல்ல ஃபாரின் சரக்காக வைத்துக்கொண்டு கூப்பிட்டால் உடனே வந்துவிடும். ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்று சொன்னால், எந்த நேரமும் நிதானம் இல்லாமல் குடிபோதையில் எதையோ உளறிக்கொண்டிருக்கிற ஒரு தலைவர் நடிகர் விஜயகாந்த். மேடைக்கு வரும்போதே தட்டுத்தடுமாறிதான் வருகிறார். அவரை இருவர் தாங்கிப்பிடிக்க வேண்டியிருக்கிறது. அவர் நடத்திய மாநாட்டில் என்ன சொன்னார் என்று யாருக்கும் புரியவில்லை. கிங்காக போகிறேன், கிங் மேக்கராக போகிறேன் என்று சொன்னார். சில பேர் ஆங்கிலப்படம் கிங்காங் பார்த்திருப்பார்போல என்று சொன்னார்கள். ஒரு பொதுவாழ்க்கையில் இருப்பதற்கு எந்தவித தகுதியும் இல்லாத நடிகர் விஜயகாந்துக்காக இங்கே போட்டிப்போடுகிறார்கள். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு. இவர்களுடைய தகுதி என்ன? தேர்தலுக்காக ஓட்டுக்காக எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
 
மக்கள் நலக்கூட்டணியில் உள்ளவர்கள் எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள் என்கிறார்கள். அதை யார் உடைக்கப்போறா...? மேடையிலிருக்கும் போது கூட ஒருத்தருடைய கையை ஒருவர் இறுக்கமாக பிடித்துக்கொண்டே நிற்கிறார்கள். இரவில் கூட ஒரே ரூம்லதான் படுத்திருக்காங்கலாம். காலையில் எழுந்ததும் ஒன்றாகத்தான் வாக்கிங்க் போறாங்க. நாங்க புரட்சி செய்யப்போகிறேன் என்று வைகோ சொல்கிறார். வைகோ, கலைஞரை குறை சொல்லிப்பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது..? அவரும் அந்தக்கட்சியில் இருந்தவர். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இவர் வந்து என்ன செய்யப்போகிறார்..? பா.ம.க.வைத்தவிர அனைத்துக்கட்சிகளுக்கும் தமிழகம் இந்த தேர்தலில் டெண்டர் விடப்படுகிறது. அதை யார் எடுப்பது..? என்பதில்தான் போட்டியே.

கலைஞர் பேசிய வசனங்களையெல்லாம் மறக்க முடியுமா..? வசனம் பேசி பேசியே ஆட்சிக்கு வந்தவர் கலைஞர். அவர்தான் இப்போது தன் மகன் ஸ்டாலினை ‘நமக்கு நாமே’ என்று பயணம் அனுப்பியிருக்கிறார். ஸ்டாலின் வந்தார் ஆட்டோவில் போனார். டீ குடித்தார் விவசாயிகளை சந்தித்தார் குறைகளை கேட்டார்.  தஞ்சாவூர்ல ஒரு விவசாயியிடம் நெல்லைப்பார்த்து இது என்ன நெல்லானு? கேக்குறார். வாழைமரத்த பாத்து இது என்ன மரம்ங்குறார்..? பாவம்  அவருக்கும் விவசாயத்துக்கும் சம்பந்தமே இல்லை. அந்த விவசாயிய பாத்து  கடைசியா ஒண்ணு கேட்டார் நீங்க ஏன் கேவணம் கட்டியிருக்கீங்க...? அதுக்கு அந்த விவசாயி "உங்க ஆட்சியில இதுதான் மிச்சம் இதையும் உருவ வந்துட்டீங்களானு கேட்டான். இப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள். இவ்வளவு நாட்கள் ஸ்டாலின் என்ன செவ்வாய்கிரகத்துலயா இருந்தார் ஸ்டாலின். ஆட்சியில் இருக்கும் போது இதையெல்லாம் செய்திருந்தால் உங்களுக்கு சிலை வைத்திருப்போம். ஓட்டுக்காக எப்படியெல்லாம் நடிக்கிறீர்கள் இனி உங்களுடைய வசனமும் நடிப்பும் செல்லுபடியாகாது.

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி கடந்த ஆண்டே சேலத்தில் மிகப்பெரிய மாநாட்டை நடத்தி அன்புமணி ராமதாஸை முதலமைச்சர் வேட்பாளாராக  அறிவித்துவிட்டோம்.  எட்டுத்திக்குகளிலும் எட்டு மண்டல மாநாடுகளை நடத்தினோம். இறுதியாக மாநில மாநாட்டை வண்டலூரில் நடத்தினோம்.  அந்த மாநாட்டின் மூலம் தமிழக மக்களுக்கு நாம் சொன்ன செய்தி என்ன..? ஏன் பாட்டாளி மக்கள் கட்சி  இந்த நாட்டை ஆள வேண்டும்..? எங்களுடைய முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் ஏன் முதலமைச்சராக வர வேண்டும் என்ற செய்தியை நாம் சொன்னோம். ஐம்பது ஆண்டுகாலம் திராவிடக்கட்சியின் ஆட்சியில் இந்த தமிழகம் நாசமாகிவிட்டது. இந்த அவலத்தை போக்க பா.ம.க.வால் மட்டுமே முடியும். அன்புமணி முதலமைச்சராக வந்தால் இந்த நாசத்தைப் போக்கி நல்லத் திட்டங்களை கொண்டு வருவார். சாராயத்தை ஒழித்து மதுவில்லாத தமிழகத்தை உருவாக்குவார். கல்வியை இலவசமாக்குவார். மருத்துவத்தை இலவசமாக்குவார், விவசாயிகளுக்கு இலவச திட்டங்கள் வழங்கப்படும் என்று நம்முடைய திட்டங்களை முழுமையாக மாநாட்டில் விளக்கினோம்.  அதைப்பார்த்த மக்கள் அன்புமணி ராமதாஸை முதலமைச்சராக்குவது என்று முடிவெடுத்துவிட்டார்கள்" என்று முடித்தார்.

ad

ad