புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

14 ஏப்., 2016

காயங்களுக்கு சிகிற்சை அளிக்கப்படாமல் அச்சுறுத்தப்பட்டு பொய் கூற நிர்ப்பந்திக்கப்பட்டேன்: நியூயோர்க் கருத்தரங்கில் வைத்திய கலாநிதி வரதராஜா

வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றபோது தங்களால் அமைக்கப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகளை இனம் கண்டு அவற்றின் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதை தவிர்க்கும் பொருட்டு செஞ்சிலுவை சர்வதேச அமைப்பினால் இலங்கை இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஜி.பி.எஸ் செய்மதி தொடர்பாடல் வசதிகளை பயன்படுத்தி வேண்டுமென்றே வைத்தியசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதை பின்னர் ஐ. நா. நிபுணர் குழுவின் அறிக்கையில் இருந்து புரிந்துகொள்ள முடிந்ததாக வைத்திய கலாநிதி வரதராஜா துரைராஜா தெரிவித்திருக்கிறார்.
பசி மற்றும் பல வாரங்கள் தொடர்ச்சியாக பணியாற்றியமை காரணமாக பலவீனம் அடைந்திருந்த நிலையில் பதுங்குகுழிக்குள் இருந்து தண்ணீர் அருந்துவதற்காக வெளியே வந்தபோது இராணுவத்தினரின் எறிகணை தாக்குதலில் காயம் அடைந்து பின்னர் அவர்களிடம் சென்ற போது தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்காமல் தொடர்ந்து 10 நாட்கள் இரகசிய இடம் ஒன்றில் வைத்து எந்த விதமான வெளித்தொடர்புகளும் இன்றி குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்து அச்சுறுத்தி பொய்யான தகவல்களை வெளி உலகத்துக்கு வழங்குமாறு பலவந்தப்படுதியதாகவும் அவர் கூறி இருக்கிறார்.
பொஸ்டனில் உள்ள சர்வதேச மன்னிப்பு சபை நியூயோர்க் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒழுங்கு செய்திருந்தத கருத்தரங்கு ஒன்றில் ” திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை மற்றும் இலங்கை யுத்தத்தின் இறுதி நாட்கள்” எனும் தலைப்பில் உரை ஆற்றியபோதே வைத்திய கலாநிதி வரதராஜா இவ்வாறு தெரிவித்தார்.
சுமார் 1000 க்கும் அதிகமான அமெரிக்க மாணவர்கள் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தனர். சிரியா, சவூதி அரேபியா, ஈரான், திபெத் ஆகிய நாடுகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பிலும் இந்த கருத்தரங்கில் அந்த அந்த நாடுகளை சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உரை ஆற்றினர்.
இந்த கருத்தரங்கின் முடிவில் அதில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நியூயோர்க்கில் உள்ள இலங்கை தூதுவராலயம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தினர். இதேபோன்று சிரியா, சீனா, ஈரான் , சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
வன்னியில் யுத்தத்தின் இறுதி நாட்களின் போது இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றியும் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் வழங்கப்படாமலும் எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்கள் மூலம் எவ்வாறு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது பற்றியும் வைத்திய கலாநிதி வரதராஜா தனது உரையில் எடுத்துக் கூறினார்.
யுத்த சூனிய வலயங்களை பிரகடனப்படுத்தி அங்கு சென்றால் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு பின்னர் இந்த யுத்த சூனிய வலயங்கள் மீது எறிகணை மற்றும் விமான குண்டு வீச்சு தாக்குதல்களை இலங்கை இராணுவம் செய்ததாக அவர் அங்கு கூறினார்.
வேண்டுமென்றே உணவு மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கை அரசாங்கம் யுத்த பிரதேசத்தில் இருந்த மக்களுக்கு அனுப்பவில்லை என்றும் கூறிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை திட்டமிட்ட மனித உரிமை மீறல் என்று விபரித்தார்.
தனது உடலில் ஏற்பட்ட காயங்களுக்கு 3 மாதங்களுக்கு முறையான சிகிற்சை அளிக்கப்படாமல் தான் அச்சுறுத்தப்பட்டு யுத்தம் பற்றி பொய்யான தகவல்களை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் தற்போது அமைந்துள்ள அரசாங்கம் திருகோணமலையில் மாணவர்களை படுகொலை செய்த குற்றவாளிகளை தண்டிப்பதை இழுத்தடிப்பது மட்டுமன்றி இறுதி யுத்தத்தில் போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிப்பதையும் இழுத்தடிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இலங்கையின் சட்டங்களின் கீழ் திருகோணமலை மாணவர்களின் படுகொலை சம்பவம் தொடர்பில் வழக்கு நடத்தப்பட முடியும் என்றும் ஆனாலும் சர்வதேச அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும் அவ்வாறு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் கோடிட்டு காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா திருகோணமலை படுகொலை உட்பட 25 வருட கால யுத்தத்தில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலை சம்பவங்களை இலங்கையின் நீதித் துறை உள்ளடங்கலான சட்ட முறைமை விசாரணை செய்யாமல் தவிர்த்து வந்தமையே முள்ளிவாய்க்காலில் பாரிய குற்றச் செயல்கள் இடம்பெற காரணமாக அமைந்தது என்றும் கூறினார்.
இலங்கையில் தண்டனையில் இருந்து தங்கள் விலக்களிக்கப்பட்டிருந்ததை 2009 இல் பொலிசாரும் இராணுவத்தினரும் நன்கு உணர்ந்திருந்ததாகவும் இதன் காரணமாக தாங்கள் உள்நாட்டு சட்டத்தில் தண்டிக்கப்படமாட்டார்கள் என்று அவர்களுக்கு ஏற்பட்டிருந்த நம்பிக்கையே 2009 ஆம் ஆண்டு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கு பாரிய அளவில் படுகொலைகளையும் அழிவையும் மேற்கொள்வதற்கு உந்தியது என்றும் வைத்திய கலாநிதி வரதராஜா அங்கு எடுத்துரைத்தார்.
போரில் இடம்பெற்ற குற்றச்செயல்களை விசாரணை செய்வதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஒரு நீதிமன்றத்தை அமைப்பதற்கு ஐ. நா மனித உரிமைகள் சபை பரிந்துரைத்திருக்கின்ற போதிலும் அதனை புதிய அரசாங்கம் நிராகரித்து உள்ளாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிமன்றமே அமைக்கப்படும் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய வைத்திய கலாநிதி வரதராஜா இதனை புரிந்து கொள்வதற்கு ராக்கட் விஞ்ஞான அறிவு ஒன்றும் தேவை இல்லை என்று கூறினார். ‘நாட்டின் அரசியல் மற்றும் சட்ட முறைமைகள் திருகோணமலையில் 5 மாணவர்களை கொலைசெய்தவர்களை பாதுகாக்க முடியுமானால் நிச்சயமாக யுத்த குற்றவாளிகள் கூட தப்ப முடியும்’ என்று அவர் குறிப்பிட்டார்.