புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஏப்., 2016

உங்கள் நன்மைக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும்: ஜெயலலிதா

விருத்தாசலத்தில் இன்று நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், நான் சொல்லாததையும் செய்திருக்கிறேன் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா
கூறியுள்ளார்.
ஜெயலலிதா அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து விருத்தாசலத்தில் இன்று பிரசாரம் செய்துள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக மாற வேண்டும், மக்கள் அச்ச உணர்வின்றி வாழ வேண்டும், தமிழகம் வளர்ச்சி அடைய வேண்டும், அந்த வளர்ச்சியின் பலனை ஒருசிலர் பலன் பெறாமல், ஒரு குடும்பத்தினர் மட்டும் பெறாமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பயனடைய வேண்டும்.
ஏழை, எளியவர்களின் வாழ்வில் வசந்தம் வீசிட வேண்டும், ஏழைகள் தங்கள் சொந்த கால்களிலேயே நிற்க திறன் பெற்றிட வேண்டும், அதுவரை அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு அளித்திட வேண்டும் என்னும் காரணங்களுக்கான தமிழகத்திலேயே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, எனது தலைமையிலான அரசு அமைய நீங்கள் 2011ல் வாக்களித்தீர்கள்.
நீங்கள் ஏற்படுத்திய மாற்றத்தால் உங்கள் வாழ்வு ஏற்றம் பெற்றது. தமிழகம் வளர்ச்சி பாதையில் விரைந்துள்ளது, இந்த வளர்ச்சியும் தமிழர்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மலர்ச்சியும் தொடர்ந்து நிலைத்திட்ட அதிமுக அரசு தொடர வேண்டும்.
எனவே மே 16ம் திகதி நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் அதிமுக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நீங்கள் பெற்றி பெற செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக் கொள்ளவே இன்று இங்கே வந்திருக்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் ஏழை, ஏளியோர் ஏற்றம் பெறும் வகையில் எண்ணிடலங்கா திட்டங்களை என் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது.
நான் சொன்னதை செய்தேன், ஆனால் அதற்கும் மேலாக சொல்லாத பலவற்றையும் செய்தேன். அவ்வாறு நான் அறிவிக்காத, நீங்களே எதிர்பார்க்காத பலவற்றில் சிலவற்றை குறிப்பிடுகிறேன்.
பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் மலிவு விலையில் காய்கறிகள் வழங்கும் திட்டம், அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள் என ஏழை எளியோருக்கான பல்வேறு நலத்திட்டங்கள் உங்கள் அன்பு சகோதரி அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
'மக்களால் நான், மக்களுக்காக நான்' என்ற அடிப்படையில் எனது பொது வாழ்வு இருக்கிறது. 'சொன்னதை செய்வேன், சொல்வதைத்தான் செய்வேன்' என்று ஏற்கனவே நான் சொன்னது உண்டு, ஆனால் நான் இப்போது சொல்லாததையும் செய்திருக்கிறேன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
இப்போது நான் குறிப்பிட்ட திட்டங்கள் எல்லாம் நீங்களே எண்ணி பார்க்காதவை, எதிர்பார்க்காதவை. ஒரு தாய்க்குதான் தன் பிள்ளைக்கு என்ன தேவை என்று தெரியும்.அதுபோல வருங்காலங்களிலும் உங்களுக்கு என்ன தேவை என்பது எனக்கு தெரியும்.
உங்கள் நன்மைக்காக, உங்கள் மேன்மைக்காக உங்கள் வளர்ச்சிக்காக, உங்கள் மகிழ்ச்சிக்காக என்னென்ன செய்ய வேண்டும் என்று இந்த தாய்க்கு தெரியும். அதை நிச்சயம் செய்வேன்.
கடந்த ஐந்தாண்டுகளில் செய்த திட்டங்களை விட இன்னும் அதிகமான நல்ல திட்டங்களை உங்களுக்காக செயல்படுத்துவேன் என்ற வாக்குறுதியை இந்த நேரத்தில் அளிக்கிறேன் என்று பேசியுள்ளார்.

ad

ad