7 மே, 2016

கோத்தபாய தனக்குத்தானே வைத்துக்கொண்ட ஆப்பு! மேலதிக சாட்சியங்களின் திடுக்கிடும் தகவல்கள்

கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷ தனக்குத்தானே வைத்துக்கொண்ட குண்டு என அமைச்சர் சரத் பொன்சேகா சுமத்திய குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் மேலதிக சாட்சியங்கள் வெளியாகியுள்ளன.
இது சம்பந்தமாக அரச புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரியொருவர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
“பித்தளை சந்தியில் நடந்த குண்டுவெடிப்பிற்குள்ளான முச்சக்கரவண்டியிலிருந்த நபர் நீண்டகாலமாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவித்து வந்தவராவார்.
இவரது முச்சகர வண்டியும் இராணுவத்தினாரால் இவருக்கு வழங்கப்பட்டது என தெரியவந்துள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக இவருக்கு பாதுகாப்புப் பிரிவின் இரகசிய கணக்கிலிருந்து மாதந்தோறும் பணம் அனுப்பியுள்ளதாக இவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இக்குண்டு வெடிப்பின் பின்னர் ஊடகங்களுக்கு காட்டப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் தலை முழுமையாக சிதைந்திருந்ததுடன் உடல் யாருடையதென்பதை ஊகிக்க முடியாதிருந்தது.
சாதாரணமாக எல்.ரி.ரி.ஈ.யினரின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு செயலாகவே இது காணப்பட்டது.
மேலும் கருத்துத் தெரிவித்த மேற்படி புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்,
“கோத்தபாய தனது சூழ்ச்சிக்கு இராணுவத் தகவலாளியை பலிகொடுத்தாரா” என சந்தேகமெழுவதாக தெரிவித்தார்.
“எல்.ரி.ரி.ஈ.யினரின் குண்டுகளுக்கு ஒப்பான குண்டுகளைத் தயாரிக்கும் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்துள்ளார்.
இவரைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை தகவலாளிக்குத் தெரியாமலேயே அவரது வாகனத்தில் பொருத்தி கோத்தபாயவின் வாகனத்திற்கு பாரிய சேதம் ஏற்படா வண்ணம் சுமார் 25 மீற்றர் துாரத்திலிருந்து வெடிக்கச் செய்தனரா” என்பது குறித்து புதிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இவர் தெரிவித்தார்.
எனவே, இப்பாரதூரமான சூழ்ச்சி குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.