புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

7 மே, 2016

தமிழ்நாட்டில் அமையுமா கூட்டணி ஆட்சி?

தமிழகத் தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான
அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை. திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா தரப்போ கூட்டணி ஆட்சிதான் தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான ஆகச் சிறந்த நிவாரணி என்கிறது.
தமிழ்நாட்டில், கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்பு சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலின்போதே உருவாகிவிட்டது. 1952-ல் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது மாணிக்கவேலரின் காமன்வீல் கட்சி காங்கிரஸில் இணைந்தது. அதற்கான பரிசாக ராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்றார் மாணிக்கவேலர். பின்னாளில், காமராஜர் முதல்வரானபோது, உழைப்பாளர் கட்சி காங்கிரஸில் இணைந்தது. அதற்கான பரிசாக காமராஜரின் அமைச்சரவையில் இடம்பிடித்தார் ராமசாமியார். ஆக, ஆட்சி அதிகாரத்தை விரும்பும் மற்ற கட்சிகளைத் தனக்குள் செரித்துக்கொண்டு, ஒருவகை விநோதமான ‘கூட்டணி ஆட்சி’யை அமைத்திருக்கிறது காங்கிரஸ்.
ராஜாஜிக்குப் பிறகு ஆட்சியமைத்தவர்கள் அனைவருமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர்கள். ஆகவே, கூட்டணி ஆட்சி கோரிக்கை என்பதே எழவில்லை. 1980 சட்டமன்றத் தேர்தலின்போதுதான் அந்தப் பேச்சு எழுந்தது. அப்போது திமுகவும் இந்திரா காங்கிரஸும் மொத்தத் தொகுதிகளைச் சரிபாதியாகப் பிரித்துக்கொண்டு தேர்தலில் நின்றன. ஒருவேளை அந்தக் கூட்டணி வெற்றிபெற்றால், கூட்டணி ஆட்சிதான் அமையும் என்ற நிலை. அப்போது எதிர்காலக் கூட்டணி அரசில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. கடைசியில், அந்தக் கூட்டணி தோல்வியடைந்தது.
இந்தத் தேர்தலின் முடிவைச் சாட்சியமாக வைத்துக்கொண்டுதான் கூட்டணி ஆட்சிக்குத் தமிழக மக்கள் எதிரானவர்கள் என்ற கருத்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது. உண்மையில், அந்தத் தேர்தலின் பிரதான பிரச்சினை கூட்டணி ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பது அல்ல. எம்.ஜி.ஆர். ஆட்சி அற்ப ஆயுளில் கலைக்கப்பட்டது சரியா, தவறா என்பதுதான்.
கைநழுவிய வாய்ப்பு
2006 தேர்தலுக்கு முன்னர் மீண்டும் கூட்டணி ஆட்சி கோரிக்கை எழுந்தது. அப்போது காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, “தனி ஆட்சியோ, கூட்டணி ஆட்சியோ, எந்த ஆட்சி வந்தாலும், இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதைத் தவிர, எனக்கு வேறு ஒன்றும் குறிக்கோள் அல்ல” என்று பேசினார். அதன்மூலம் கூட்டணி ஆட்சிக்குத் திமுக தயாராகிவிட்டது என்ற கருத்து எழுந்தது.
இன்றைக்குக் கூட்டணி ஆட்சி கோரிக்கையை அழுத்தமாக முன்வைக்கும் வைகோவும் திருமாவளவனும், அப்போது கருணாநிதியின் கருத்துக்கு ஆற்றிய எதிர்வினைகள் முக்கியமானவை. “திமுக தோற்றுவிடும் என்ற பயத்தில்தான் தற்போது கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் உள்ளவர்கள் எல்லாம் சோர்ந்துபோயிருக்கிறார்கள். அவர்களை உற்சாகப்படுத்தித் தேர்தல் வேலைகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கூட்டணி ஆட்சி அமைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டிவருகிறார்” என்றார் திருமாவளவன்.
“கூட்டணி மந்திரிசபை என்று சொன்ன ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வளவு அர்ச்சித்தீர்களே, இப்போது எப்படி கூட்டணி மந்திரி சபை என்று சொல்கிறீர்கள். படுதோல்வி அடையப்போகிறோம் என்பதால், இதையாவது சொன்னால், கூட்டணிக் கட்சிக்காரர்கள் கொஞ்சம் உற்சாகமாக இருப்பார்கள் என்பதற்காகச் சொல்கிறீர்கள்” என்றார் வைகோ.
இறுதியில், அந்தத் தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்தது. அதன்மூலம், தமிழகத்தில் முதன்முறையாகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில், அத்தகைய வாய்ப்பை காங்கிரஸும் பாமகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. திமுக ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவளித்தன. இன்று கூட்டணி ஆட்சி கோஷத்தை உயர்த்திப்பிடிக்கும் இடதுசாரிக் கட்சிகளும் அந்தப் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
சாதகங்கள் அதிகம்
கூட்டணி ஆட்சி அமைந்தால் ஒரே இரவில் எல்லாமே மாறிவிடும் என்பது கற்பனாவாதம். ஆனால், சில அடிப்படையான விஷயங்களில் தேவைப்படுகின்ற அத்தியாவசியமான மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஒருவேளை கூட்டணி ஆட்சி அமையும்பட்சத்தில், அந்த ஆட்சிக்கென்று பிரத்யேகச் செயல்திட்டம் வகுக்கப்படும். அவற்றில் பல கட்சிகளின் கருத்தும் சிந்தனையும் இடம்பெறும். அந்தச் செயல்திட்டத்தின் அடிப்படையில் ஆட்சியை நடத்திச்செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஆட்சியில் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உருவாகும். கூட்டணி அரசின் உறுப்பினர் ஒருவர் தடம் புரள்வதைச் சக உறுப்பினர் தடுத்து நிறுத்த முடியும்.
பரஸ்பரக் கண்காணிப்பு என்பது கூட்டணி ஆட்சியின் பிரதான அம்சம். தவறுகள் நடக்கும்போது தட்டிக்கேட்கவும், தேவைப்பட்டால் குட்டிக்கேட்கவுமான கூட்டணி ஆட்சியில்தான் சாத்தியம்.
முக்கியமான அபாயம்!
அடுத்து, முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் சம்பிரதாயமான முறையில் நடப்பதற்குப் பதிலாக, ஆட்சியில் பங்கேற்கும் அனைத்துக் கட்சியினரும் மெய்யான விவாதங்களில் ஈடுபட்டு, புரிதலை அதிகப்படுத்தி, ஆக்கபூர்வமான முடிவுகளை எடுப்பதற்குக் கூட்டணி ஆட்சி வகை செய்யும். ஒற்றைத் தலைவர் முன்மொழிவதை அனைத்து அமைச்சர்களும் கேள்விகள் ஏதுமின்றி வழிமொழியும் போக்கு கூட்டணி ஆட்சியில் இருக்க வாய்ப்பில்லை.
ஆக, ஒற்றைப் பெருங்கட்சியின் தனியான ஆட்சிக்குப் பதிலாகப் பல கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய கூட்டணி ஆட்சி அமைவது பலவகைகளில் நல்லதுதான். அதேசமயம், கூட்டணி ஆட்சியில் பங்கேற்றிருக்கும் சிறு கட்சிகள் பலவும் ஒன்றுசேர்ந்து, கூட்டணியின் பெரிய கட்சியை மிரட்டத் தயாராகும் பட்சத்தில், அது கூட்டுச் சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் அபாயமும் இருக்கிறது. அதையும் சேர்த்தே கூட்டணி ஆட்சியை அணுகவேண்டியிருக்கிறது!