புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2016

தமிழ்நாட்டிற்குச் சென்றால், என்னைக் கொன்றுவிடுவார்கள்...!' -பா.ஜ.க தலைவரிடம் கதறிய சசிகலா புஷ்பா

சிகலா புஷ்பா விவகாரத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காகக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க
எம்.பிக்கள். ' பா.ஜ.க தலைவர் ஒருவரின் ஆசிர்வாதம் இருப்பதால்தான், முதல்வருக்கு எதிராக தீவிரமாகச் செயல்படுகிறார். சசிகலாவை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார் அவர்' எனக் கொதிக்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் ஏற்பட்ட மோதலையடுத்து, அ.தி.மு.கவில் இருந்து ஓரம்கட்டப்பட்டார் ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா. இதையடுத்து, அவர் நாடாளுமன்றத்திலேயே அ.தி.மு.க தலைமையின் மீது குற்றம் சுமத்தினார். இதை எதிர்பார்க்காத அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அவரை கட்சியை விட்டே நீக்கினார். அதேநேரம், சசிகலா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்கள் இருவர், சசிகலா, அவரது கணவர் மற்றும் மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். கூடவே, ஒப்பந்ததாரர் ஒருவர் பணமோசடிப் புகாரையும் அளித்தார்.
' இவ்விரு வழக்குகளிலும் கைது செய்யப்படலாம்' என்பதால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார் சசிகலா. மனுவை விசாரித்த நீதிபதி முத்தா குப்தா, ' வருகிற 22-ம் தேதி வரையில் சசிகலாவை கைது செய்யக் கூடாது' எனவும் ' முன்ஜாமீன் பெறுவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகவும்' உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்தார் சசிகலா. அந்த மனுவில், ' என் வீட்டில் வேலை பார்த்து வந்த ஜான்சிராணி மற்றும் பானுமதி ஆகியோரை பாலியல் ரீதியாக அடித்து துன்புறுத்தியதாகவும், மொட்டையடித்து வெளியேவிடாமல் அவமானப்படுத்தியதாகவும் தூத்துக்குடி போலீசில் புகார் அளித்துள்ளனர். சிலர் தூண்டுதலின் பேரில் இந்தப் புகார்கள் கூறப்பட்டுள்ளன. இது தவிர, நெல்லையிலும் என் மீது மோசடிப் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. என்னை பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

" உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தாலும், முன் ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்புகளைப் பற்றி தீவிரமாக ஆலோசித்து வருகிறார் சசிகலா. 22-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது, தமிழகத்தில் ஜாமீன் நிலவரம் பற்றி தெரிவிக்க இருக்கிறார். ஒருவேளை ஜாமீன் கிடைக்கவில்லையென்றால், உச்ச நீதிமன்றம் செல்வது குறித்தும் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்" என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், " அ.தி.மு.கவுக்கு எதிராக இந்த விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் முடிவில் சில பா.ஜ.க தலைவர்கள் செயல்படுகின்றனர். ' நாடாளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அ.தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் உள்ளிட்டவர்கள் நமக்கு ஆதரவாக இருந்தபோது, தமிழ்நாட்டில் இருந்து மட்டும்தான் எதிர்ப்புக் குரல் வருகிறது. அவர்களால் நமக்கு எந்தவிதத்திலும் பயன் இல்லை. தமிழ்நாட்டில் அ.தி.மு.கவுக்கு எதிராக நமது வியூகத்தை பலப்படுத்தினால்தான், நாம் வளர முடியும்' என சில பா.ஜ.க தலைவர்கள் பிரதமரிடம் பேசி வருகின்றனர். இதற்கு எந்தவித பதிலையும் பிரதமர் சொல்லவில்லை.

அ.தி.மு.கவுக்கு பெரும் தலைவலியாக சசிகலா புஷ்பா விவகாரம் சென்று கொண்டிருக்கிறது. ' எப்படியாவது ராஜினாமா செய்ய வைத்துவிடுங்கள்' என்பதுதான் அ.தி.மு.க மேலிடத்தின் கட்டளையாக இருக்கிறது. ஆனால், எந்தவித சமரசத்திற்கும் சசிகலா உடன்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு பா.ஜ.க சீனியர் தலைவர் ஒருவரை சந்தித்தார் சசிகலா. அவரிடம் பேசும்போது, 'தமிழ்நாட்டிற்குள் கால் வைத்தாலே என்னைக் கொன்றுவிடுவார்கள். என்ன முடிவெடுப்பது எனத் தெரியாமல் தவிக்கிறேன்' என வேதனைப்பட்டார். அவருக்கு ஆறுதல் கூறிய அந்தத் தலைவர், 'உங்களை யாரும் எதுவும் செய்துவிட மாட்டார்கள். நீங்களாக தற்கொலை செய்தால் மட்டும்தான் உண்டு. இது தேவையற்ற பயம். சட்டரீதியான போராட்டத்திற்கு மட்டுமல்ல, தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் நான் ஏற்பாடு செய்கிறேன்' எனப் பேசியிருக்கிறார்.

பா.ஜ.க மேலிடத்தின் ஆதரவு கிடைத்துவிட்டதால் கூடுதல் தைரியத்தோடு இருக்கிறார் சசிகலா. இதை அ.தி.மு.க தலைமையும் உணர்ந்துள்ளது. ' வழக்குக்கு மேல் வழக்கு போட்டால் வழிக்கு வந்துவிடுவார்' என்றுதான் அ.தி.மு.க தரப்பில் நினைத்தார்கள். அதையும் தாண்டி தி.மு.க, காங்கிரஸ் தலைவர்களின் ஆதரவைத் திரட்டிய சசிகலாவுக்கு பா.ஜ.கவும் ஆதரவு அளித்துள்ளதை அதிர்ச்சியோடு கவனிக்கிறார்கள் அ.தி.மு.க எம்.பிக்கள். டெல்லி உயர் நீதிமன்றத்தில் 22-ம் தேதி நடக்கப் போகும் காட்சிகளுக்காகக் காத்திருக்கிறார்கள் அ.தி.மு.க வழக்கறிஞர்கள்
.

ad

ad