27 பிப்., 2017

ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்!

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உள்துறை செயலர் , தலைமைச்செயலாளர், சட்டமன்ற செயலாளர், ஆளுநரின் செயலர் ஆகியோர் இரண்டு வார காலத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து சபாநாயகரிடம் விளக்கமும் கேட்டு, இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி(பொறுப்பு) ரமேஷ்,  ஆர்.மகாதேவன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கு  இன்று  தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான அனைத்து வீடியோ பதிவுளையும் அளிக்குமாறு எதிர்கட்சி தலைவர் சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இதுவரை வீடியோ பதிவு வழங்கப்பவில்லை என்றும் ,அவசரமாக ஓட்டெடுப்பு நடத்தியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்  என்றும் வாதிட்டார்.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக பதிலளிக்கும் படி  முதலமைச்சர்,பேரவைச் செயலாளர், தலைமை செயலாளர், ஆளுநர் செயலாளர்,  ஆகியேருக்கு நீதிமன்ற நோட்டீஸ் அனுப்பவும்,சபாநாயகருக்கு தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை மார்ச் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்