தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க கோரிய தொடரப்பட்ட வழக்கில், ஸ்டாலின் தரப்புக்கு வீடியோ பதிவின் நகல்களை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீது பிப். 18 ஆம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், திமுக உறுப்பினர்களை வெளியேற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட்ட அனைத்து உறுப்பினர்களும் தாக்கப்பட்டதாக ஸ்டாலின் தெரிவித்தார். அதன் பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பழனிசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘‘சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அந்த வாக்கெடுப்பில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளும் வகையில் ஆளுநர், பேரவை செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணையருக்கு சமமான அதிகாரி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழு ரகசிய வாக்கெடுப்பு நடத்தி அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை எடப்பாடி பழனிசாமியின் வெற்றிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். முதல்வர் மற்றும் அவரது அமைச்சரவை கொள்கை முடிவு எடுக்க தடை விதிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று பேரவையின் வீடியோ பதிவைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இதே போன்று வழக்கறிஞர் பாலுவும் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்குகள் இன்று தலைமை நீதிபதி (பொறுப்பு) எச்.ஜி.ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பேரவை செயலாளர் சார்பில் வாக்கெடுப்பு நாளன்று பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வீடியோ பதிவுகளின் நகல்களை ஸ்டாலின் தரப்புக்கு தரவும், இது தொடர்பாக ஸ்டாலின் தரப்பு பதிலளிக்கவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.