புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

4 மார்., 2017

போர்க்குற்ற விசாரணையில் அக்கறையில்லை – சிறிலங்காவை சாடும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் நீதியை வழங்கும் செயல்முறைகளில் சிறிலங்காவில் மெதுவான முன்னேற்றங்களே ஏற்பட்டுள்ளன என்றும்
, போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழக்கும் சிறப்பு நீதிப்பொறிமுறையை உருவாக்குவதில், அக்கறை காண்பிக்கப்படவில்லை என்றும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வரும், மார்ச் 22ஆம் நாள் பேரவையில் சமர்ப்பிப்பதற்காக தயாரித்துள்ள அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
“நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும்  நிலையான அமைதியை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகள் மந்தகதியில்  இடம்பெறுகின்றன.
சிறிலங்காவில் பொறுப்புக்கூறலுக்கான பரந்தளவிலான மூலோபாய வழிமுறைகளோ அல்லது சமாதான செயற்பாடுகளுக்கான உறுதியான நிலை ஏற்படுவதற்கான வேகமான சாத்தியங்களோ  தென்படவில்லை.
சிறிலங்காவில் மனித உரிமைகள் செயற்பாடுகள் மற்றும் புதிய அரசியலமைப்பு சீர்திருத்த விவகாரங்களில் சாதகமான முன்னேற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இது வரவேற்கக்கூடியது.
புதிய அரசியலமைப்பு உருவாக்குதல் மற்றும் மனித உரிமை செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு சிறிலங்கா அரசாங்கம் சிறப்பான செயற்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறது.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம், போரில் மீண்டோருக்கான நல்லிணக்க செயற்பாடுகள், இடம்பெயர்ந்தவர்களின் காணிகளை மீளளித்தல், காணாமல் போனோருக்கான தனியான ஆணையம் அமைத்தல் போன்ற விடயங்களில் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
இருப்பினும் சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் போர்க்குற்றம் குறித்த உண்மையை நிலைநாட்டுவது போன்ற செயற்பாடுகள் மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்படுகிறது. இன முறுகலுக்கான நீண்டகால சமாதான செயற்பாடுகள் வகுக்கப்படவில்லை.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு 17 மாதங்களுக்கு முன்னர்  முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையான தீர்வு வழங்கப்படவில்லை. போர்க்குற்ற விசாரணைகளை திருப்திகரமாக முன்னெடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை காண முடியவில்லை.
போருக்குப் பிந்திய நல்லிணக்க செயற்பாடுகளில் சிறிலங்காவின் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. சிறிலங்கா வகுத்ததாக கூறப்படும் திட்டங்கள் முழுமைப்படாத நிலையை உணர்த்துகிறது.
ஒழுங்குப்படுத்தப்பட்ட நல்லிணக்க ஏற்பாடுகள் மற்றும் உண்மையை நிலைநாட்டுவதற்கான உத்திகளை நடைமுறைப்படுத்துவதற்கு முறையான வழிமுறைகளை ஏற்படுத்தாத நிலையில் இதுவரை காலமும் பெற்றுக்கொண்ட வெற்றிகள் வீண்விரயமாகி விடும்” என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.